’தீ விபத்து நேரத்தில் ஹீரோ, ஹீரோயின் இருந்திருந்தால்?’: தொழிலாளர் அமைப்பு புகார்

’தீ விபத்து நேரத்தில் ஹீரோ, ஹீரோயின் இருந்திருந்தால்?’: தொழிலாளர் அமைப்பு புகார்

சினிமா அரங்கங்களில் அடிக்கடி தீ விபத்து நடப்பதாகவும், இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மேற்கிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அசோக் துபே தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி ஹீரோ ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடிக்கும் படத்தை, லவ் ரஞ்சன் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்காக, மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள சித்ரகூட் மைதானத்தில் அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு மற்றொரு படத்துக்கும் வேறொரு அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இங்கு கடந்த 29-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் மனீஷ் தேவஷி (32) என்பவர் உயிரிழந்தார். அரங்குகள் முற்றிலும் சேதமடைந்தது.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்கிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் அசோக் துபே தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு ஷூட்டிங் நடந்தால், சுமார் 800-1000 தொழிலாளர்கள், டெக்னீஷியன்கள் பணிபுரிவார்கள். அவர்களோடு ரன்பீர், ஷ்ரத்தா கபூரும் கலந்துகொண்ட நேரத்தில் விபத்து ஏற்பட்டிருந்தால் என்னவாகி இருக்கும்? மும்பையில், சினிமா அரங்கங்களில் அடிக்கடி தீ விபத்து நடக்கிறது. கோரேகான் மேற்கில், இதற்கு முன் தீயில் கருகிய இரண்டு அரங்கங்களை அமைத்தவர்தான், இப்போது இங்கும் அரங்கம் அமைத்திருக்கிறார். தீ விபத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து சான்றிதழ் அளித்த பிறகே, சினிமா தொழிலாளர்கள் பணிபுரிய வேண்டும் என்று கோரிக்கை வைக்க இருக்கிறோம். தயாரிப்பாளர்களும் அதை கண்காணிக்க வேண்டும்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாநில முதல்வருக்கும், தீயணைப்புத் துறைக்கும் கடந்த 4,5 ஆண்டுகளாக கடிதம் எழுதியிருக்கிறோம். இப்போது முதல்வர் மற்றும் மும்பை மாநகராட்சிக்கு கடிதம் எழுத இருக்கிறோம்.

இவ்வாறு அசோக் துபே தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in