
நாடு முழுவதும் உள்ள 4,000 திரையரங்குகளில் செப்டம்பர் 16-ம் தேதி மட்டும் 75 ரூபாய் கட்டணத்தில் திரைப்படங்களை பார்க்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விலை உயர்வு காரணமாக திரையரங்குகளுக்குச் செல்வதற்கு நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தயக்கம் காட்டி வருகின்றனர். டிக்கெட் விலை மட்டுமில்லாது பார்க்கிங் கட்டணம், கேட்டின் பில் என எகிறும் பட்ஜட் படம் பார்க்க வேண்டும் என்ற மனநிலையை மங்க வைத்துவிடுகிறது. இதற்காக குடும்பமாக திரையரங்கம் செல்ல மக்கள் தயங்குகிறார்கள். சமீபத்தில் தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்ததற்கு டிக்கெட் விலை ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் செப்டம்பர் 16-ம் தேதி மட்டும் டிக்கெட் விலை 75 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. அன்று தேசிய சினிமா தினம் என்பதால் நாடு முழுவதும் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் 4,000 திரைகளுக்கு டிக்கெட் கட்டணமாக 75 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஐநாக்ஸ், பிவிஆர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த முன்னெடுப்பில் பங்கேற்கின்றன.