பொங்கல் ரிலீஸான ‘மிஸ்டர் பாரத்’: இன்றைக்கும் எதிரொலிக்கும் ‘என்னம்மா கண்ணு... செளக்கியமா?’

பொங்கல் ரிலீஸான ‘மிஸ்டர் பாரத்’: இன்றைக்கும் எதிரொலிக்கும் ‘என்னம்மா கண்ணு... செளக்கியமா?’

தாய், தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் கதைகள் ஏகத்துக்கும் வந்திருக்கின்றன. தாயை நட்டாற்றில் விட்டுச் செல்லும் தகப்பன்களின் கதையும் வந்திருக்கின்றன. அந்தத் தகப்பனைத் தேடி பாசத்துக்காகவோ, பழிவாங்கவோ செல்லும் கதைகளும் இங்கே தாராளமாக வந்திருக்கின்றன. இதையே சுவையுடன், நகைச்சுவையுடன், கொஞ்சம் உணர்வும் கலந்து கொடுத்ததுதான் ‘மிஸ்டர் பாரத்’!

ஏழைத் தாய் சாந்தியின் மகன் பாரத். கஷ்டப்பட்டு அவனை வளர்த்து ஆளாக்குகிறாள். ஒருகட்டத்தில் உடல் நொந்து, மனம் வெதும்பி படுத்தபடுக்கையாகக் கிடக்கிறார். அப்போது மகனை அழைத்து, ‘’உன் தந்தை யார் தெரியுமா?’’ என்று சொல்ல ஃப்ளாஷ்பேக் தொடங்குகிறது.

சாந்தி குடியிருக்கும் கிராமத்துக்கு, கோபிநாத் எனும் பணக்காரன் வருகிறான். கட்டுமானப் பணிகளுக்காக அங்கே வருபவன், அங்கே கட்டிட வேலை செய்யும் சாந்தியின் அழகில் மயங்குகிறான். காதல் வார்த்தை பேசுகிறான். அதை உண்மை என்று நம்பி, தன்னையே அவன் வசம் கொடுக்கிறாள்.

இந்த நிலையில், சாந்தி கர்ப்பமாகிறாள். கோபிநாத்தின் கட்டுமானப் பணிகளும் நிறைவடைகின்றன. மனம் பதறும் சாந்தி, கோபிநாத்திடம் விஷயத்தைச் சொல்லி மன்றாடுகிறாள். ‘’ஊருக்குப் போனதும் அப்பா அம்மாகிட்ட பேசி, அவங்களையும் கூட்டிக்கிட்டு வரேன். உன்னை கல்யாணம் பண்ணிக் கூட்டிக்கிட்டுப் போறேன்’’ என்று பொய்ச் சத்தியம் செய்துவிட்டுக் கிளம்புகிறான்.

கோபிநாத்துக்கு திருமணம் நடக்கப் போகும் சேதியைத் தெரிந்துகொள்கிறாள். முன்பொருமுறை அவன் கொடுத்த விசிட்டிங்கார்டை எடுத்துக் கொண்டு, நியாயம் கேட்கச் செல்கிறாள். ஆனால் அவனோ அவளை அசிங்கமாகப் பேசி அவமானப்படுத்தி அனுப்புகிறான். மனம் வெறுத்து, கனத்து, திரும்புகிறாள். அப்போது ‘’ஊரே நிற்கும்போது உன் குற்றத்தை நீ ஒப்புக்கொள்ளும் காலம் வரும்’’ என்று சபதமிட்டுச் செல்கிறாள்.

ஃப்ளாஷ்பேக் முடிகிறது. மகனுக்கு தந்தையைப் பற்றிய விவரங்கள் சொல்லிவிட்டு தாய் இறந்துபோகிறாள். அம்மாவின் சபதத்தை நிறைவேற்ற, ஆகஸ்ட் 31 அன்று சபதம் எடுக்கிறான் பாரத். அடுத்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று, ‘’ஊர் கூடியிருக்கும் வேளையில், இந்தச் சபதத்தை நிறைவேற்றிக் காட்டுகிறேன்’’ எனச் சூளுரைக்கிறான்.

தான் யாரென்று காட்டிக்கொள்ளாமல், தந்தை கோபிநாத்தைச் சந்திக்கிறான். மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் அவரை எதிர்கொள்ள, சில தகிடுதத்தங்கள் செய்து பணம் சம்பாதிக்கிறான் பாரத். அனைத்தும் அவரிடம் இருந்தே பெறப்படுகின்றன. ஒருகட்டத்தில், கோபிநாத்துக்கும் பாரத்துக்கும் தொழில் போட்டி உருவாகிறது. நாளுக்குநாள் பாரத்தின் கை ஓங்கியபடி இருக்க, கோபிநாத்தின் தொழில் சாம்ராஜ்ஜியம் சறுக்கிக் கொண்டே வருகிறது.

ஒருபக்கம், கோபிநாத்துக்கு நடந்த இரண்டாவது திருமணத்தால் பிறந்த மகனுக்கும், தனது ஏழை நண்பனின் சகோதரிக்குமான காதலைப் பயன்படுத்தி, கோபிநாத்தின் இமேஜை நாசம் செய்கிறான். இன்னொரு பக்கம் கோபிநாத்தின் மகளை ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றி, மிகப்பெரிய செல்வந்தர் குமரேச கவுண்டரின் மகனுக்குத் திருமணம் செய்வதாக நாடகமொன்றை நடத்தி, அதிலும் தோற்கடிக்கிறான். போதாக்குறைக்கு, கோபிநாத்தின் மனைவி, பாரத்தை தன் மகனைப் போலவே பாவிக்கிறார். எல்லோரும் பாரத்திடம் சேர்ந்து கொள்ள, ஆகஸ்ட் 31ம் தேதி வருகிறது. அப்போது சிலை திறப்புவிழாவுக்கு தலைமையேற்க கோபிநாத்தை அழைக்கிறான் பாரத். அதேசமயத்தில், பாரத்தைக் கொலை செய்ய மைக்கேல் என்பவனை ஏவுகிறான் கோபிநாத்.

அந்தச் சிலை யாருடைய சிலை என்பதும் அப்போது பாரத் பேசும் பேச்சுகளும் ‘’பாரத் என் மகன்’’ என உணருகிறார் கோபிநாத். மேடையிலேயே பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார். தாயின் சபதம் நிறைவேறி வருகையில், மைக்கேல் கொல்ல முனைகிறான். அவற்றை சண்டையிட்டு தவிடுபொடியாக்குகிறான் பாரத். எல்லோரும் ஒன்றாக சேருகிறார்கள் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.

பாரத் கேரக்டரில் ரஜினி. கோபிநாத் கதாபாத்திரத்தில் சத்யராஜ். சாந்தி கேரக்டரில் சாரதா. இரண்டாவது மனைவியாக வடிவுக்கரசி. ரஜினியின் நண்பனாக கவுண்டமணி. அவரின் தங்கையாக கோழி கூவுது விஜி. சத்யராஜின் இரண்டாது மனைவியின் மகனாக எஸ்.வி.சேகர், மகளாக ஜோதிசந்திரா முதலானோர் நடித்தார்கள். உமா எனும் கதாபாத்திரத்தில் நாயகியாக அம்பிகா நடித்தார்.

‘உமாவா...’, ‘கேரக்டர் பெயரா...’ என்று யோசிக்கும்போதே, இயக்குநரும் நடிகருமான விசு நம் நினைவுக்கு வந்துவிடுவார்தானே. ஆம். இந்தியில் சலீம் - ஜாவேத் கதையில் உருவான ‘திரிசூல்’ படத்தை, தமிழில் ‘மிஸ்டர் பாரத்’ என உருவாக்கினார்கள். தமிழுக்காக, சில மாற்றங்களைத் திரைக்கதையாக்கி வசனம் எழுதினார் விசு. மேலும் குமரேச கவுண்டர் எனும் கதாபாத்திரத்திலும் நடித்தார்.

படத்தில் அம்பிகாவுக்கு, சத்யராஜ் கம்பெனியில் வேலை செய்யும் கதாபாத்திரம். அதேசமயம், பாரத்துக்கு உதவும் கேரக்டர். என்றாலும் படம் முழுக்க ரஜினி - சத்யராஜ் ராஜாங்கம்தான் கொடிகட்டிப் பறந்தது.

மிகப்பெரிய செல்வந்தராக அப்பா கதாபாத்திரத்தில், அலட்டலும் கர்வமும் கொண்டவராக சத்யராஜ் வெளுத்து வாங்கினார். நிஜத்தில் ரஜினியை விட நான்கைந்து வயது சிறியவரான சத்யராஜ், இந்தப் படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடிக்க ஒப்புக்கொண்டதே பெரியவிஷயம்தான். ரஜினி, தன் ஸ்டைலில் அசத்தியிருப்பார். சத்யராஜ், தன் அசால்ட்டான டயலாக் டெலிவரியிலும் நக்கலான பாடிலாங்வேஜிலும் பிரமாதப்படுத்தியிருப்பார்.

கதை அருமை; வசனங்கள் அருமை என்றபோதும், ஒவ்வொரு முறையும் ரஜினி ஜெயிப்பதும் சத்யராஜ் தோற்பதும், என இந்த ஆட்டம் ரொம்ப நீள்கிறதே என்று ரசிகர்கள் அலுத்துக்கொண்டார்கள். ஆனால் அவற்றையெல்லாம் கடந்து, படம் எல்லோரையும் ரசிக்கவும் வைத்தது.

’என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்’ என்ற வைரமுத்துவின் பாடலை மலேசியா வாசுதேவன் பாடினார். ’எந்தன் உயிரின்’ பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுத, ஜானகியம்மா பாடினார். ’பச்ச மொளகா அது காரமில்ல, என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரமில்ல’ என்ற பாடலை கங்கை அமரன் எழுத, மலேசியா வாசுதேவன் - எஸ்.ஜானகி பாடினார்கள். ’காத்திருக்கேன் கதவைத் திற’ என்கிற வாலியின் பாடலை எஸ்.பி.பி.யும் ஜானகியும் பாடினார்கள். எல்லாப் பாடல்களையும் அட்டகாசமான மெட்டுகளால் ஹிட்டாக்கிக் கொடுத்தார் இளையராஜா. மலேசியா வாசுதேவனும் எஸ்.பி.பி.யும் பாட்டில் அதகளம் செய்திருக்கும் ‘என்னம்மா கண்ணு செளக்கியமா?’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது.

விஜய் நடித்த ‘கில்லி’ படம் வெளியானபோது, அதில் வில்லன் பிரகாஷ்ராஜ் பேசும் ‘என்ன செல்லம்...’ என்ற வசனம் பிற்பாடு பிரபலமானது. பிரகாஷ்ராஜை மேடைக்கு அழைக்கும்போதும், இப்படி விளிக்கும் அளவுக்கு வரவேற்பு பெற்றது. அவரும் மேடையில் பேசும் போது இந்த வார்த்தையைச் சொல்லித்தான் பேசத் தொடங்குகிறார்.

அதேபோல், ரஜினி நாயகனாக நடித்த ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் வில்லன் சத்யராஜ் பேசிய ‘என்னம்மா கண்ணு, செளக்கியமா?’ என்கிற வசனமும் பாடலும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, இப்போது வரை சத்யராஜை மேடையில் இதைச் சொல்லித்தான் அழைக்கிறார்கள். சத்யராஜும், இந்த வார்த்தையை பல மேடைகளில் உச்சரித்து அரங்கை அதிரச் செய்து வருகிறார்.

ஏவி.எம். தயாரித்த இந்தப் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். மிகப்பெரிய வசூலைக் குவித்தது இந்தப் படம். ’என்னம்மா கண்ணு’ என்கிற பாடலை, ரஜினியின் மருமகன் தனுஷ், ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் ரீமிக்ஸ் பாடலுக்கு பிரகாஷ்ராஜுடன் நடித்தார் என்பது கொசுறுத்தகவல்.

1986ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி பொங்கல் வெளியீடாக வந்து, சர்க்கரைப்பொங்கல் தித்திப்பை ரசிகர்களுக்குக் கொடுத்தான் ‘மிஸ்டர் பாரத்’. படம் வெளியாகி, 37 வருடங்களாகிவிட்டது. ‘என்னம்மா கண்ணு... செளக்கியமா?’ என்கிற சத்யராஜின் அசத்தலான டயலாக் மாடுலேஷனை ரசிகர்கள் மறக்கவே இல்லை. மறக்கத்தான் முடியுமா என்ன?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in