திரை விமர்சனம்: ‘டான்’

திரை விமர்சனம்: ‘டான்’

கல்லூரியின் சக மாணவர்களால் ‘டான்’ என்று அழைக்கப்படும் அளவுக்கு சாகசங்களை நிகழ்த்துபவன் தனக்கான சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றிபெற்ற அசல் ‘டான்’ஆக உருவெடுப்பதே 'டான்’ திரைப்படத்தின் கதை.

சைக்கிள் மிதித்தபடி பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் கீழ்நடுத்தரவர்க்க தந்தையின் (சமுத்திரக்கனி) ஒரே மகன் சக்ரவர்த்தி (சிவகார்த்திகேயன்). தந்தையின் கண்டிப்புக்கு பயந்து பொறியியல் கல்லூரியில் சேர்கிறான். தன் மகன் எப்படியாவது பொறியாளர் ஆக வேண்டும் என்பதே அவனுடைய தந்தையின் ஒரே லட்சியம். படிப்பில் நாட்டமே இல்லாத சக்ரவர்த்தி கல்லூரிக் காலத்தில் தன் திறமை எதில் இருக்கிறது என்று கண்டறிந்து அதன் மூலம் வாழ்வில் முன்னேறுவதை இலக்காக நிர்ணயிக்கிறான். ஆனால், கல்லூரியில் ஒழுக்க விதிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரியாக இருக்கும் பேராசிரியர் பூமிநாதன் (எஸ்.ஜே.சூர்யா) சக்ரவர்த்திக்கு வில்லனாகிறார்.

சில பல சேட்டைகளைச் செய்து பூமிநாதனின் கண்டிப்பான விதிமுறைகளிலிருந்து மாணவர்களை தப்பவைத்து சக மாணவர்களால் ’டான்’ என்று கொண்டாடப்படுகிறான் சக்ரவர்த்தி. இதற்கிடையே அவனது தந்தையின் கண்டிப்பால் பிரிந்துசென்ற பள்ளிப் பருவக் காதலி அங்கயற்கண்ணி (பிரியங்கா மோகன்) அவன் படிக்கும் கல்லூரியில் மாணவியாகச் சேர்கிறாள். பூமிநாதன் போடும் முட்டுக்கட்டைகளைத் தகர்த்தபடியே அங்கயற்கண்ணியுடான காதலைப் புதுப்பிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறான் சக்ரவர்த்தி.

இவற்றுக்கிடையில், தனக்கு எழுதும் திறமை இருப்பதைத் தெரிந்துகொண்டு திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் குறும்படங்களுக்கான போட்டி ஒன்றில் பங்கேற்க முடிவுசெய்கிறான் சக்ரவர்த்தி. அப்பாவின் கண்டிப்பும், பூமிநாதனின் கெடுபிடிகளும் அதற்கும் தடைகளைக் கொண்டுவருகின்றன. இந்தத் தடைகளை எல்லாம் மீறி சக்ரவர்த்தி குறும்படப் போட்டியில் பங்கேற்றானா, திரைப்பட இயக்குநர் ஆகும் இலக்கை அடைந்தானா, அவனைப் பொறியியல் பட்டதாரியாக்கும் தந்தையின் கனவை நிறைவேற்றினானா என்பதைச் சொல்கிறது மீதிக் கதை.

கண்டிப்பான தந்தை, கலகலப்பை நாடும் மகன் என்னும் தமிழ் சினிமாவின் ஆதிகால முரண்களில் ஒன்றை கையிலெடுத்துக் கொண்டு கல்லூரி வாழ்க்கை, கல்வியின் முக்கியத்துவம், விரும்பிய பாதையில் பயணிப்பதற்கான சுதந்திரம், பெற்றோரின் தியாகம் ஆசிரியர்களின் கனிவு ஆகிய உணர்வுபூர்வமான அம்சங்களைச் சேர்த்து ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி.

முதல் பாதி கல்லூரி கலாட்டா காட்சிகளால் நிறைக்கப்பட்டிருக்கிறது. ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ளவே கூடாது என்னும் அளவுக்கு ஒழுக்கத்தை வலியுறுத்தும் கல்லூரி நிர்வாகம், அதை மீறுவதோடு சக மாணவர்களையும் தப்ப வைக்கும் மாணவன் ஆகிய இரண்டு தரப்புகளை எதிரெதிரில் நிறுத்துவதே கலகலப்புக்கும் சுவாரசியத்துக்கும் உகந்த களமாக அமைந்திருக்கிறது. ஆனால், இத்தகைய களத்தில் சாத்தியமாகக்கூடிய கலகலப்பு படத்தில் ஓரளவு மட்டுமே கிடைக்கிறது. பூமிநாதனை சக்ரவர்த்தி வெற்றிகொள்ளும் காட்சிகள் எதிலும் நம்பகத்தன்மையும், சுவாரசியமும் இல்லை.

அதுவும் சக்ரவர்த்தியும் அவனுடைய சகாக்களும் செல்வாக்கு மிக்க பேராசிரியரான பூமிநாதனின் கம்ப்யூட்டரை வைத்து அவருக்கே தெரியாமல் அவரை உறைபனி நாடு ஒன்றில் கல்லூரிப் பணிக்கு அனுப்பி வைப்பதெல்லாம் காதில் பூ மார்கெட்டையே சொருகும் முயற்சி. ’பாட்ஷா’ உள்ளிட்ட ரஜினி படக் காட்சிகளை ஸ்பூஃப் செய்யும் சில காட்சிகள் மட்டுமே கல்லூரிக் காட்சிகளில் கலகலப்பூட்டுகின்றன. நாயகனுக்கும், நாயகிக்கும் இடையிலான காதலைச் சொல்லும் பள்ளிப் பருவ ஃப்ளாஷ் பேக் ஓரளவு ரசிக்கத்தக்கதாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியின் பெரும்பகுதியும் சக்ரவரத்திக்கும், பூமிநாதனுக்கும் இடையிலான உப்புசப்பில்லாத மோதலாக நகர, கடைசி அரை மணி நேரத்தில் நிகழும் திருப்பங்களும் மாற்றங்களும் மட்டும் அதுவரை ஏற்பட்ட அலுப்பிலிருந்து ஆசுவாசம் அளிக்கின்றன.

கல்லூரி மாணவர்களாக இருக்கும் சக்ரவர்த்தியும் அவனது சகாக்களும் நன்றாகப் படிக்காமல் இருப்பதைப் பெருமையாகக் கருதுவது, ஆசிரியர்களுக்குப் பல தொல்லைகளைக் கொடுப்பது, அதற்காக பொய்களைச் சொல்வது, பெற்றோரை ஏமாற்றுவது என அனைத்தும் கலகலப்பு காட்சிகளாக்கப்பட்டிருப்பது பிரச்சினைக்குரியது. இவை அனைத்தும் விடலைகளின் கைதட்டல்களையும் விசில்களையும் அள்ளுகின்றன. ஆனால், கடைசி அரைமணிநேர காட்சிகளில் இவை அனைத்தும் தவறு என்பது போல் சித்தரித்திருப்பது இந்தப் படத்தை பிரச்சினைக்குரிய படம் என்னும் அடையாளத்திலிருந்து காப்பாற்றுகிறது. ஆசிரியர்களின் கருணை, பெற்றோரின் தியாகம் ஆகியவற்றைப் பேசி அவர்களைப் பற்றிய நல்ல சிந்தனைகளை இளைஞர்கள் மனங்களில் விதைக்க முயன்றிருப்பது பாராட்டுக்குரியது.

அதேசமயம், தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததற்கே மகனுக்கு மொட்டை அடித்துவிடும் தந்தை, கல்லூரியில் அனைவரின் முன்னிலையில் பளார் பளார் என்று அறையும் தந்தை கடைசி அரை மணி நேரத்தில் மகனுக்காகவே உயிர்வாழும் பாசமிகு தந்தையாக மாறுவது திரைக்கதை எழுதியவரின் வசதிக்கேற்ற தடாலடி மாற்றமாகத் தெரிகிறது. உள்ளுக்குள் அவ்வளவு பாசத்தை வைத்திருப்பவர் வெளியில் அவ்வளவு கொடூரமான கண்டிப்பை ஏன் காண்பித்தார் என்பதற்கு வலுவான காரணம் இல்லை. இந்தக் குறையையும் தாண்டி இவை சொல்லப்பட்ட காட்சிகளில் இருக்கும் உணர்வுபூர்வமான தருணங்கள் ரசிக்கவைக்கின்றன.

திடீரென்று தனக்குள்ள எழுத்துத் திறமையைத் தெரிந்துகொள்ளும் நாயகன் உடனடியாக இயக்குநராக படிப்படியாக முன்னேறுவதிலும் நம்பகத்தன்மையோ சுவாரசியமோ இல்லை. இந்த விஷயத்தில் நாயகனுக்கு சில தடைகள் வருகின்றன என்றாலும் அவை அனைத்தும் புறக்காரணிகள் சார்ந்த தடைகளாகவே இருக்கின்றன. மற்றபடி நாயகனின் படைப்பூக்கத் திறமை மடைதிறந்த வெள்ளம்போல் பிரவாமகமெடுப்பதும் இயக்குநராக உருவெடுப்பதும் போட்டி நிறைந்த குறும்படப் போட்டியில் வெற்றிபெறுவதும் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன. சினிமா நாயகர்களுக்கு மட்டுமே இப்படி எல்லாம் நிகழும்.

சிவகார்த்திகேயன் வழக்கம்போல் இளமையாக இருக்கிறார். கல்லூரி மாணவராகவோ ஏன் பள்ளி மாணவராகவோகூட அவருடைய தோற்றப் பொருத்தம் சரியாகவே இருக்கிறது. நடனம், நகைச்சுவை ஆகியவற்றிலும் வழக்கம்போல் விருந்து படைக்கிறார். ஆக்‌ஷனிலும் சென்டிமென்ட் நடிப்பிலும் மென்மேலும் முன்னேறியிருக்கிறார். ப்ரியங்காவுக்கும் மாணவியாக தோற்றப் பொருத்தம் சரியாகவே இருக்கிறது. நடிப்புக்குத்தான் பெரிதாக வாய்ப்பில்லை.

ஒழுக்கத்தை வலியுறுத்தும் பேராசிரியராக எஸ்.ஜே. சூர்யா மீண்டும் ஒரு முறை சிறப்பாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்துக்குத் தேவையான கண்டிப்பையும் அதிகாரத் தொனியையும் நக்கலையும் தோற்றம் உடல்மொழி, குரல், முகபாவங்கள் என அனைத்திலும் கச்சிதமாகக் கொண்டுவந்திருக்கிறார். சமுத்திரக்கனியும் எமோஷனல் காட்சிகள் நிறைந்த கனமான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். நகைச்சுவை நடிகர் பட்டாளத்தில் பாலா மட்டுமே கவனம் ஈர்க்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் தாளம்போட வைக்கின்றன. பின்னணி இசையில் படத்துக்குத் தேவையானதைத் தந்திருக்கிறார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்ப விஷயங்களில் குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் இல்லை.

கலகலப்பையும் சென்டிமென்டையும் கலந்து ஒரு கலவையான கமர்ஷியல் படத்தைக் கொடுக்க முயன்றுள்ள அறிமுக இயக்குநர், கனமான காட்சிகள் நிறைந்த கடைசி அரை மணி நேரத்தால் கரையேறுகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in