அம்மா பாடல்தான் படத்தின் ஆன்மா: ’கணம்’ இயக்குநர்

நடிகை அமலா அக்கினேனி
நடிகை அமலா அக்கினேனி

தாங்கள் வெளியிட்டுள்ள அம்மா பாடல்தான், ’கணம்’ படத்தின் ஆன்மா என்று அதன் இயக்குநர் ஸ்ரீகார்த்திக் சொன்னார்.

அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ‘கணம்’. சர்வானந்த் ஹீரோவாக நடித்துள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படங்களுக்குப் பிறகு தமிழில் அவர் நடித்துள்ள படம் இது. அமலா அக்கினேனி, நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுஜித் சராங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தயாரிக்கிறது. தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரில் உருவாகிறது. இந்தப் படத்தில் இடம்பெறும் அம்மா பாடல் நேற்று வெளியானது. உமா தேவி எழுதிய பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

பாடல் பற்றி இயக்குநர் ஸ்ரீகார்த்திக் கூறும்போது, “அம்மா பாடல் தான் இந்தப் படத்தின் ஆன்மா. இது கதையை மேம்படுத்தும் பாடல் மட்டுமல்ல, இந்தப் பாடல் தான், இந்தப் படம். ஒரு வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று சொல்வேன். 3 வருடங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் பாடலை உருவாக்கினோம். இது கதையின் தன்மையை இன்னும் சிறப்பானதாக ஆக்குவதை உணர்ந்தோம். படப்பிடிப்பின் போது எல்லோரும் நேர்கோட்டில் சிந்திக்க இந்தப் பாடல் தான் உதவியது.

தெலுங்கில், மறைந்த பாடலாசிரியர் சிரிவெண்ணெலா எழுதிய கடைசி பாடல்களில் ஒன்று இது. முதலில் தெலுங்கில் பாடலைத் தயார் செய்திருந்தாலும் அதைத் தமிழுக்கு அப்படியே மாற்றவில்லை. பாடலின் கருவை வைத்துத் தமிழில் மொத்தமாக புதிய வரிகளை உருவாக்கி இருக்கிறோம். தனது அம்மாவை இழந்தவர்களுக்கு இந்தப் பாடல் தாலாட்டாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை தரும் பாடலாக இது இருக்கும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in