இன்றைக்கும் ‘இளையநிலா பொழிகிறது இதயம் வரை நனைகிறது!’

- 41-ம் ஆண்டில் ‘பயணங்கள் முடிவதில்லை’
பயணங்கள் முடிவதில்லை
பயணங்கள் முடிவதில்லை

பயணம் என்பது எப்போதுமே சுகமானதுதான். இந்த நம்முடைய பயணத்தில்தான் எத்தனையெத்தனை சுவாரஸ்யங்கள். வலிகள். வேதனைகள். நெகிழவும் மகிழவும் செய்யக்கூடிய தருணங்கள். ஒரு கலைஞனின் இசைப்பயணத்தையும் காதலையும் சொன்னவிதத்தில்... இன்னமும் அதனுடன் பயணித்துக் கொண்டே இருக்கிறோம். இந்த ‘பயணங்கள் முடிவதில்லை!’

‘பயணங்கள் முடிவதில்லை’ என்று சொல்லும்போதே, நம் மனதுக்குள் மொத்தப் படமும், காற்றடித்து விரிந்து படபடக்கிற புத்தகப் பக்கங்கள் மாதிரி, தடதடக்கத் தொடங்கிவிடும்தானே! எளிமையும் ஏழ்மையுமாக, இசையும் பாடலுமாக, அன்பும் காதலுமாக நம்மை வசீகரித்த அந்தப் பயண சுகங்கள் அலாதியானவை!

தோழியின் வீட்டுக்கு வருகிறாள் ராதா. இவள்தான் நாயகி. அங்கே, தான் எழுதிய கவிதையைத் தோழிக்குப் படித்துக்காட்டுகிறாள். அந்தக் கவிதைக் காகிதங்கள், மாடி அறையின் ஜன்னலில் இருந்து பறந்து, பக்கத்தில் உள்ள ஒண்டுக்குடித்தன போர்ஷனுக்குள் விழுகிறது. ‘பழம் நழுவி பாலில் விழுந்தது போல்’ என்பார்களே! அப்படித்தான் அந்தக் கவிதை, ஒண்டுக்குடித்தன போர்ஷனுக்குள் ஒண்டிக்கொண்டிருக்கும் ரவியின் கைக்கு வருகிறது. இவனே நாயகன். பாடகனும் கூட! ஆனால் என்ன... இவனுக்கொரு மேடை இன்னும் கிடைக்கவில்லை. ஒரு மைக்கில் கூட இன்னமும் பாடவில்லை. ரிக்கார்டிங் கனவுகளுடன், சினிமா ஆசையுடன் பசிக்கும்போதெல்லாம் பாடலைப் பாடி பசியாறுகிறவனுக்கு, அந்தக் கவிதை, பாடலாகத் தெரிகிறது. மனதுக்குள் டியூனாக விரிகிறது. பாடத் தொடங்குகிறான்.

அவளுடைய கவிதை, கிடார் இசையின் உதவியுடன், பாடலாகிறது. அந்தப் பாடலிலும் குரலிலும் மெய்ம்மறக்கிறாள் ராதா. பாடியவனின் முகத்தை மறுநாள் பார்க்கிறாள். ஏழ்மைக்கு வாக்கப்பட்ட, பாட்டிலும் இசையிலும் பசியாறுகிற ரவிக்கு... உணவுக்கு வழியில்லை. உடுத்திக்கொள்ள நல்ல உடையுமில்லை. அவனுடைய நிலையையும் நிலையற்ற திசை தெரியாமல் பயணிக்கும் வாழ்க்கையையும் தோழி சொல்ல, அதைக் கேட்டு உருகுகிறாள் ராதா.

பிறகு, தன் அப்பா கட்டிக்கொண்டிருக்கும் கோயில் விழாவில், அவனுக்குப் பாட வாய்ப்பு வாங்கிக் கொடுக்கிறாள். அவன், பாடுவதற்கு மேடை ஏறுவதற்கு முன்னதாக, மழை வந்து வெளுத்தெடுக்கிறது. மனிதர்கள் சிதறி ஓடுகிறார்கள். அடாது மழையிலும் விடாது பாடுகிறான். மழையில் நனைந்துகொண்டே, அழுதுகொண்டே பாடுகிறான். அதுதான் அவனுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. தவறவிடாமல் பாடுகிறான். பாடலின் நடுவே மழை நிற்கிறது. அங்கேயும் இங்கேயுமாக ஒதுங்கியிருந்த மக்கள், இசை மழையில் நனைகிறார்கள். கரவொலி எழுப்பி, அவன் பாடலை அங்கீகரிக்கிறார்கள்.

அதையடுத்து, டிவி ஸ்டேஷனில் வேலை பார்ப்பவரின் மூலமாக, இன்னொரு வாய்ப்பை வாங்கிக் கொடுக்கிறாள் ராதா. ஏற்கெனவே, கோயிலில் பாட வாய்ப்பு கிடைத்தது யாரால் என்பதே தெரியாமல் தவிக்கிறான் ரவி. இப்போது மறுபடியும் வாய்ப்பு. உதவி செய்தவர் யாரென்பது இப்போதும் தெரியவில்லை. டிவியில் பாடுகிறான். அவனுக்குப் பாடலைப் பாடுவதற்காக, பாடலைப் படியெடுத்து எழுதிக் கொடுக்கிறாள் ராதா. காற்றில் பறந்துவந்த கவிதைக் காகிதங்களிலும், கோயிலில் பாட வாய்ப்பு வந்த கடிதத்திலும் இப்போது எழுதிக் கொடுக்கும் ராதாவின் கையெழுத்திலும் உள்ள ஒற்றுமையை உணர்ந்துகொள்கிறான்.

அந்த எழுத்து, ரசிகையின் கடிதமாக அவனுக்குப் பரிச்சயம். அந்த எழுத்து ‘இளைய நிலா பொழிகிறதே’ எனும் கவிதைப் பேப்பராகத் தெரியும் அவனுக்கு. அந்த எழுத்து, கோயிலில் பாட வாய்ப்பு என்று வந்த கடிதம்... என அறிகிறான். நெகிழ்ந்து நெக்குருகுகிறான்.

டிவியில் பாடுகிற பாடலை, இசையமைப்பாளர் கங்கை அமரன் பார்க்கிறார். கேட்கிறார். யாரென்று விசாரிக்கிறார். வரச்சொல்கிறார். சினிமாவில் பாட வாய்ப்பு தருகிறார். மிகப்பெரிய பாடகராகப் புகழ் பெறுகிறார். காசும்பணமுமாக, வீடும்வாசலுமாக, பேரும்புகழுமாக வளர்ந்து நிற்கிறார். இந்தத் தருணங்களிலெல்லாம் அவனுடனேயே பயணித்து, அவனின் வளர்ச்சிக்காக உறுதுணையாக நிற்கிறாள் ராதா.

இந்த சமயத்தில் வெளியூரில் கச்சேரிக்குச் செல்கிறான் ரவி. ராதாவின் அப்பா, தனது அக்காள் மகனை ராதாவைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லுகிறார். அவள் ரவியைக் காதலிக்கும் விஷயத்தைச் சொல்கிறாள். ’’அவர் ஊரிலிருந்து வந்ததும் கேட்டு சொல்லிடுறேன்’’ என்கிறாள்.

ஆனால், ஊரிலிருந்து வந்ததில் இருந்து வேறுவிதமாக இருக்கிறான் ரவி. அடியோடு மாறிப்போகிறான். ராதாவை முழுவதுமாகப் புறக்கணிக்கிறான். அவள் இல்லாமல் ரிக்கார்டிங் உள்ளிட்ட வேலைகளுக்குச் செல்கிறான். பாராட்டு விழாவின் மேடையில், தன்னைப் பற்றி சொல்லப்போகிறான் என நினைத்தவளுக்கு பெருத்த ஏமாற்றம். பலத்த அவமானம். வெற்றிக்குக் காரணம் ராதா என்று சொல்லுவான் என்று நினைத்திருக்க, அவனோ ‘உழைப்பு’ என்று சொல்லி அவள் மனதை உடைக்கிறான். நொறுங்கிப் போகிறாள்.

இதனிடையே, தோழியின் திருமணத்துக்கு ரவியைப் பாடக் கேட்கிறாள் ராதா. ’’15 ஆயிரம் கொடுத்தா பாடுறேன்’’ என்கிறான் ரவி. ’’அவகிட்டயே பணம் கேக்கறீங்களா?’’ என்று அவள் கேட்க, ’’அவ கல்யாணம்ங்கறதாலதான் பணம் கேட்டேன். உன் கல்யாணத்துக்குன்னா ஓசிலயே பாடுவேன்’’ என்கிறான் ரவி. மனம் வெறுத்து, அப்பாவிடம் சொல்லி கதறித் தீர்க்கிறாள். மகளுக்கு, அக்காள் மகனை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார் அப்பா!

ராதாவின் அத்தை மகன், டாக்டர். நிச்சயதார்த்தத்துக்கு, ஊரில் இருந்து வந்திருக்கும் சூழலில், அந்த மாப்பிள்ளை மூலமாக, ரவிக்கு கேன்சர் என்ற திடுக்கிடும் உண்மை ராதாவுக்குத் தெரியவருகிறது. கலங்கிக் கதறுகிறாள். ‘’அவனைத் தப்பா நினைச்சிட்டோமே. அவனுக்கா இந்த நிலை’’ என வெடித்துக் கண்ணீர்விடுகிறாள்.

அங்கே... ரவி, கேன்சரால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். அவனை நினைத்து இங்கே விஷம் குடித்து போராடிக்கொண்டிருக்கிறாள் ராதா. ’’கடைசியா உங்களைப் பாக்கணும் ரவி’’ என்று போனில் சொல்ல, அடித்துப்பிடித்து, அங்கே வருகிறான் ரவி. இருவரும் விழுந்து, சரிந்து, உயிர் துறக்கிறார்கள்.

ரவியாக மோகன். ராதாவாக பூர்ணிமா ஜெயராம் (பூர்ணிமா பாக்யராஜ்). மோகனின் தோழனாக எஸ்.வி.சேகர். பூர்ணிமாவின் தோழியாக ரஜினி. பூர்ணிமா ஜெயராமின் அப்பாவாக, பூர்ணம் விஸ்வநாதன். அந்த ஒண்டுக்குடித்தன வீடுகளின் ஓணராக கவுண்டமணி. டாக்டராக ராஜேஷ். அவ்வளவுதான் படத்தின் கேரக்டர்கள். அடுத்து முக்கியமாக இன்னொரு கதாபாத்திரத்தையும் சொல்லவேண்டும். அது... கிடார்! ஆமாம்... பயணங்கள் முடிவதில்லை படத்தின் மிக முக்கியமான அம்சங்கள்... தெளிவான கதையும் அந்தக் கதைக்குள் இழையோடிய மெல்லிய காதலும் படம் முழுவதும் வியாபித்திருக்கிற இசையும்!

மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி படத்தைத் தயாரித்தார். யதார்த்தமும் நிறைவான நடிப்பும் வழங்குகிற நடிகர் மோகன், ‘மைக்’ மோகன் என பின்னாளில் அழைக்கப்பட்டார். ‘’இதில் எனக்கு உடன்பாடில்லை. நான் மைக் பிடிக்காமலும் பல படங்களில் நடித்திருக்கிறேன். அந்தப் படங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. அப்படியிருக்கும் போது, மைக் மோகன் என்று ஏன் அழைக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை’’ என்று நடிகர் மோகனே பல முறை தெரிவித்திருக்கிறார். அப்படி, மோகன், மைக் பிடித்து நடித்த முதல் படம், ’பயணங்கள் முடிவதில்லை’ தான். இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் தெளிவான திரைக்கதையிலும் அவரின் நகைச்சுவை வசனங்களாலும் வெளியாகி அவர் இயக்கி வெற்றி பெற்ற முதல் படமும் இதுதான்!

படத்தின் மிகப்பெரிய பலம், இளையராஜா. ’இளைய நிலா பொழிகிறதே’ என்ற பாட்டு, படம் வெளியாவதற்கு முன்னதாகவே ஹிட்டடித்தது. பூர்ணிமாவை வெறுப்பேற்ற... ’’அவருடைய முகம்... அவருடைய கண்கள்... அவருடைய குரல்...’’ என்று ரஜினி சொல்லும் இடத்தில், ஒரு பிஜிஎம்... ஒரு ஹம்மிங் என்று மாற்றி மாற்றி விளையாடியிருப்பார் இளையராஜா. அதற்கும் கரவொலி கிடைத்தது.

கவுண்டமணியின் ஆரம்பக்கட்ட படங்களில் இதுவும் முக்கியமான படம். கவுண்டமணியின் ’‘இந்தச் சென்னை மாநகரத்திலே... இப்படிப்பட்ட பில்டிங்கைக் கட்டி...’’ என்கிற வசனத்தைப் பேசாத ரசிகர்களே இல்லை. ‘ராகதீபம் ஏற்றும் நேரம்’, ‘தோகை இளமயில் ஆடிவருகிறது’, ஏ... ஆத்தா... ஆத்தோரமா வாரீயா’, சாலையோரம் சோலை ஒன்று’, ‘மணியோசை கேட்டு எழுந்து’, ‘வைகறையில் வைகைக் கரையில்...’ என்று எல்லாப் பாடல்களுமே ஒன்ஸ்மோர் ரகப் பாடல்கள்தான்.

தமிழகத்தில் திரையிட்ட எல்லா ஊர்களிலும், தியேட்டர்களிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடின. கோவை, சேலம், திருச்சி, நெல்லை முதலான ஊர்களில் 200 நாட்களைக் கடந்து ஓடியது. சென்னை, மதுரை முதலான ஊர்களில் 400 நாட்களுக்கும் மேல் ஓடின.

பாடகராக நடித்த மோகனை மறக்கவில்லை ரசிகர்கள். பூர்ணிமாவின் கதாபாத்திரம் மனதில் அப்படியே நிற்கிறது. கிடார் இசை செவிகளில் அப்படியே தங்கிவிட்டன. இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், தமிழ் சினிமா வரலாற்றில் அருமையான இடத்தைப் பதித்தார். தொடர் வெற்றிகளைக் குவித்தார். எண்பதுகளின் மிக முக்கியமான இயக்குநர் எனும் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

கோவைத்தம்பி படம் என்று தயாரிப்பாளர் பற்றி ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள். ‘’இளையராஜான்னாலே எல்லாப் பாடலும் ஹிட்டாகிடும்பா’’ என்று ரசிகர்கள் உறுதியாகச் சொன்னார்கள்! இதில் ‘ஆத்தா ஆத்தோரமா வாரியா’ பாடல், பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது. கோயில் விழாக்களிலும் திருமண விழாக்களிலும் பொங்கல் விழாக்களிலும் இந்தப் பாடலைத் திருப்பித் திருப்பி ஒலிபரப்பி, குரூப்குரூப்பாக ஆடி மகிழ்ந்தார்கள் இளைஞர்கள்!

1982-ம் ஆண்டு, பிப்ரவரி 26-ம் தேதி வெளியானது ‘பயணங்கள் முடிவதில்லை’. அதே ஆண்டு ஜனவரி 26-ம் தேதி கிட்டத்தட்ட இதே காதல், கேன்சர் முதலான விஷயத்தைக் கருவாகக் கொண்டு, ‘வாழ்வே மாயம்’ வெளியானது. ‘வாழ்வே மாயம்’ படம் வெற்றி பெற்றது. ‘பயணங்கள் முடிவதில்லை’ பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

படம் வெளியாகி, 41 ஆண்டுகளாகின்றன. ஆனால், ’இளையநிலா பொழிகிறதே... இதயம் வரை நனைகிறதே’ என்று இன்றைக்கும் நிலா... இளையநிலாவாகவே இருக்கிறது; இன்றைக்கும் ராஜ இசையில் நனைந்தபடியே இருக்கிறோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in