
சமீபத்தில், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘மின்னல் முரளி’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் சூப்பர் ஹீரோவான ‘மின்னல் முரளி’யாக நடித்திருக்கும் டொவினோ தாமஸை விட, வில்லன் கதாபாத்திரமான ஷிபு வேடத்தில் நடித்த குரு சோமசுந்தரத்தின் நடிப்பை அனைவரும் பாராட்டிவருகின்றனர். டொவினோ தாமஸ் முதலில் இந்த வேடத்தில் நடிக்கத்தான் விரும்பியுள்ளார். ஆனால் அவர் கதாநாயகன் கதாபாத்திரத்துக்குத் தேர்வாக, குரு சோமசுந்தரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஷிபு கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரத்தைப் பார்த்து வியந்தவர்களில் மோகன்லாலும் ஒருவர். இதைத் தொடர்ந்து தான் இயக்கும் ‘பரோஸ் - நிதி காக்கும் பூதம்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தந்திருக்கிறார். இது மோகன்லால் இயக்கும் முதல் திரைப்படம். அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். ஜிஜோ புன்னூஸ் எழுதிய நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இதுவொரு ஃபேன்டஸி திரில்லர்.
‘ஆரண்ய காண்டம்’, ‘ஜோக்கர்’ திரைப்படங்களைத் தவிர்த்து, குரு சோமசுந்தரத்தை ஒழுங்கான முறையில் தமிழ் சினிமா பயன்படுத்தவில்லை. தற்போது அவருக்கான அங்கீகாரத்தை மலையாள சினிமா அளித்துள்ளது. குரு சோமசுந்தரம் போன்ற நடிகர்களைத் தமிழ் சினிமா நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.