தொடங்கியது ‘ஹரா’ படப்பிடிப்பு!

அதிரடி நாயகனாகக் களமிறங்கிய வெள்ளிவிழா நாயகன் மோகன்
தொடங்கியது ‘ஹரா’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் 80-களில் கோலோச்சிய நாயகர்களில் ஒருவரான நடிகர் மோகன், ‘ஹரா’ படத்தில் அதிரடி நாயகனாகக் களமிறங்குகிறார். கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

முதல் நாள் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படம்பிடிக்கப்பட்டது. மென்மையான பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற மோகன், இதில் உற்சாகமாகக் கலந்துகொண்டார்.

இயக்குநர் விஜய் ஸ்ரீ, தயாரிப்பாளர்கள் எஸ்.பி.மோகன் ராஜ் - ஜெயஸ்ரீ விஜய், தொழில்நுட்ப கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

“இதுவரை மோகனைப் பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, 'ஹரா' படத்திலும் அவரது நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள். பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் படத்தின் முக்கிய கருத்தாகும்” என உற்சாகமாகச் சொல்கிறார்கள் படக்குழுவினர்.

சென்னையில் படப்பிடிப்பு முடிந்தவுடன், கோவை மற்றும் ஊட்டியில் படப்பிடிப்பைத் தொடரவிருப்பதாகப் படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in