எம்.என்.நம்பியார் : ’ரீல் வில்லன், ரியல் ஹீரோ!’

- ‘நம்பியார்த்தனம்’ என்று தெறிக்கவிட்ட மகா கலைஞன் நினைவுநாள்!
எம்.என்.நம்பியார் : ’ரீல் வில்லன், ரியல் ஹீரோ!’

கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டாலே ஐயப்ப சீசன் எல்லா மாநிலங்களிலும் களைகட்டத்தொடங்கிவிடும். இன்றைக்கு சபரிமலைக்கு கார்த்திகை, மார்கழி மாதங்களில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்களென்றால், அதற்கான ஆரம்ப விதையை அந்தக் காலத்தில் தூவியர்கள் ஒரு சிலர் உண்டு. அவர்களில் மிக முக்கியமானவர்... ‘குருசாமி’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் முரட்டுத்தனமான வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார். கண்களை உருட்டி, கரகரவெனப் பேசி, கைகளைப் பிசைந்து நம்மையெல்லாம் கிடுகிடுக்க வைத்த நடிப்புச் சூரர்!

எம்.நடராஜன் காலம் தொடங்கி இன்றைக்கு ஜெகபதி பாபு வரைக்கும் நம் தமிழ் சினிமாவில்தான் எத்தனையெத்தனை வில்லன் நடிகர்கள். கமல், ரஜினி, சத்யராஜ் முதலானவர்களெல்லாம் கூட வில்லன் ரோல் செய்துவிட்டுத்தான் நாயகனானார்கள். ரகுவரன், பாபு ஆண்டனி, ‘காக்க காக்க’ ஜீவன் என்றெல்லாம் நம்மை மிரட்டியெடுத்த நடிகர்களும் மனோகர், அசோகன், பி.எஸ்.வீரப்பா முதலான அந்தக் கால நடிகர்களும் ஏகத்துக்கும் இருந்தார்கள். இருக்கிறார்கள்.

ஆனால், வில்லத்தனம் எனும் வார்த்தையை மாற்றி நாம் நமக்குள், நம்மிடம் பழகி, நயவஞ்சக குணம் செய்வோரிடம் சொல்லுகிற வார்த்தை... ‘இந்த ‘நம்பியார்த்தனம்லாம் வைச்சுக்காதே’ என்பதுதான். வில்லத்தனம் என்றாலே முதல், முழு, தனி அகராதியைக் கொடுத்து அசாத்திய சாதனை செய்தவர் நம்பியார்தான்!

மிகச் சாதாரணமான இடத்தில் தொடங்கியது நம்பியாரின் வாழ்க்கைப் பயணம். கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில், சிரக்கல் எனும் ஊருக்கு அருகே, பெருவமூர் எனும் கிராமத்தில், ’கேளு நம்பியார்’ என்பவருக்குப் பிறந்த கடைசிக் குழந்தைதான் எம்.என்.நம்பியார். அதாவது, மாஞ்சேரி நாராயணன் நம்பியார். எட்டாவது வயதில் தந்தையை இழந்த நிலையில், ஊட்டியில் இருந்த சகோதரரின் தயவு நாடி அங்கே சென்றார். 1919-ம் ஆண்டு பிறந்தவர், 1946-ம் ஆண்டு, தன் உறவுக்காரப் பெண் ருக்மிணியைத் திருமணம் செய்துகொண்டார்.

ஏவி.எம். தயாரித்து, கே.பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தில் நம்பியார் நடிக்கவில்லை. ஆனால், படத்தின் முதல் காட்சியில், வயதான ஐயா ஒருவர் வயலில் வேலைப் பார்ப்பார். அவரின் மனைவியான பாட்டியம்மா உணவு எடுத்து வருவார். உணவை எடுத்து உருட்டிக் கொடுப்பார். அதை வாங்கிய தாத்தா, முதல் கவளத்தை மனைவிக்கு ஊட்டிவிடுவார். ‘விளக்கு வச்ச நேரத்துலெ’ என்று பாடலும் டைட்டிலும் ஆரம்பமாகும். இந்த தாத்தா, பாட்டி சம்பவத்துக்கு பாக்யராஜ் சாருக்கு நம்பியாரும் அவர் மனைவியும்தான் இன்ஸ்பிரேஷன் என்று அவரை பேட்டி எடுத்த தருணத்தில் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

சரி... நம்பியாரின் பால்யத்துக்குள் நாமும் சென்று பயணிப்போம்.

படிக்க வசதியில்லை. வறுமை எல்லாவிதங்களிலும் முட்டுக்கட்டை போட்டது. 13-வது வயதில் ‘ஏதேனும் ஒரு வேலை கிடைத்தால் போதும்’ என்று நினைத்தவர், நவாப் ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். வேலை கிடைத்தது. நடிப்பதற்கு அல்ல... சமைப்பதற்கு! சமையல் செய்பவருக்கு உதவியாளராக இருந்தார். பிறகு பல வருடங்கள் கழித்துதான் நடித்தார்.

இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். நம்பியார் உள்ளூர், வெளியூர் என சினிமாப் படப்பிடிப்புக்குச் செல்லும்போது, திரைப்பட யூனிட் தருகிற உணவைச் சாப்பிடமாட்டார். ஹோட்டல்களில் சாப்பிடுவது அவருக்குப் பிடிக்காது. மனைவியை தன்னுடன் அழைத்துக்கொள்வார். எந்த ஊராக இருந்தாலும் அங்கே மனைவி சமைத்து அவர் கையால் சாப்பிடுகிற வழக்கம் கொண்டிருந்த அவர், நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில் சமையல் உதவியாளராகத்தான் சேர்ந்தார்.

1935-ம் ஆண்டு மும்பை என இன்றைக்கு அழைக்கப்படும் பம்பாய்க்கு சென்றார்கள் நம்பியாரும் அவரது மனைவியும். ‘பக்த ராமதாஸ்’ எனும் திரைப்படத்தில் அக்கண்ணா எனும் கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்தார். மாதண்ணா எனும் கேரக்டரில் நம்பியார் நடித்தார். நம்பியார் என்றதும் நமக்குள் வில்லத்தன பிம்பம் கண்ணெதிரே வந்து மிரட்டுமல்லவா... ஆனால், ‘மாதண்ணா’ எனும் காமெடிக் கதாபாத்திரம்தான் முதலில் அவருக்குக் கிடைத்தது. இதுதான் நம்பியாரின் முதல் படம். இதில் நடித்ததற்கு 40 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள்.

இதேகட்டத்தில் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்துவந்தார் நம்பியார். நாடகத்தில் அவருக்கு அப்போது மாதச்சம்பளம் மூன்று ரூபாய். நடிகர் சாரங்கபாணிக்கு கையில் ஏதோ பிரச்சினை. அந்த சமயத்தில் நம்பியாருக்கு அந்த வாய்ப்பு வந்தது. தொடர்ந்து சாரங்கபாணிக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்பு நம்பியாருக்குக் கிடைத்தது. நம்பியாரின் நடிப்பைப் பார்த்துவிட்டு, ‘அட...’ சொல்லி வியக்காதவர்களே இல்லை.

1944-ம் வருடம்... நம்பியாரின் வாழ்வில் மிக முக்கியமான ஆண்டு. டி.கே.கிருஷ்ணசாமியின் நாடகக் குழு இவரை அழைத்துச் சேர்த்துக் கொண்டது. ’கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுரு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நாடகத்தில் நடித்ததால் பெரும் புகழைப் பெற்றார் நம்பியார். அதேபோல் இந்த நாடகத்தில் புகழடைந்த இன்னொருவர் எஸ்.வி.சுப்பையா.

இந்த நாடகத்தைப் பார்த்த கோவை ஜூபிடர் பிக்சர்ஸ், நம்பியாரை நான்கு படங்களுக்கு ஒப்பந்தம் செய்தது.’வித்யாபதி’, ‘ராஜகுமாரி’ படங்களில் நடித்தார். ‘கஞ்சன்’ என்ற படத்தில் நாயகன் வேடம். கஞ்சத்தனமில்லாமல் தன் நடிப்பை வெளிப்படுத்தினார். அறிஞர் அண்ணாவின் ‘வேலைக்காரி’ படத்திலும் நாயகனாக ஜொலித்தார். ’கல்யாணி’, ‘கவிதா’ என வரிசையாக ஹீரோவாக நடித்தார்.

’திகம்பர சாமியார்’ எனும் திரைப்படம் நம்பியாரை அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்தியது. இந்தப் படத்தில் 11 வேடங்களில் நடித்தார். அதாவது ‘தெய்வமகன்’ போல் மூன்று வேடங்கள் அல்ல. ‘நவராத்திரி’ போல் ஒன்பது வேடங்கள் அல்ல. ‘தசாவதாரம்’ போல் பத்து கேரக்டர்கள் அல்ல. ஆனால் அந்தக் காலத்தில் ஒவ்வொருவிதமான மாறுவேடங்களுடன் உலா வந்து, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார் நம்பியார்.

இதையடுத்துதான் சிவாஜியின் காலம் வந்தது. எம்ஜிஆரின் காலம் வந்தது. வில்லத்தனத்தில் நம்பியாரின் மேனரிஸங்கள் திரையுலகில் பலராலும் ஈர்க்கப்பட்டன. எம்ஜிஆர் நடிப்பார். நம்பியார்தான் வில்லன். சிவாஜி நடிப்பார். நம்பியார்தான் வில்லன். எஸ்.எஸ்.ஆர். நடிப்பார். நம்பியார்தான் வில்லன். ஜெமினி நடிப்பார். நம்பியார்தான் வில்லன். முத்துராமன் நடிப்பார். நம்பியார்தான் வில்லன். ஜெய்சங்கர் நடிப்பார். நம்பியார்தான் வில்லன். ஹீரோ யாராக இருந்தாலும் அங்கே வில்லத்தனம் பண்ண நம்பியார்தான் பொருத்தமானவர் என்று மொத்தத் திரையுலகினரும் உறுதியாக இருந்தார்கள்.

நம்பியாரைப் பயன்படுத்தாத நாயக நடிகர்களே இல்லை. நம்பியார் வேண்டாம் என்று எந்தத் தயாரிப்பு நிறுவனமும் சொல்லியதே இல்லை. அன்றைக்கு எவையெல்லாம் பிரபல கம்பெனியோ அந்தத் தயாரிப்பு நிறுவனங்கள் நம்பியாரை வாரியணைத்துக் கொண்டன. நடிகர்கள் அப்படித்தான் ஏற்றுக் கொண்டார்கள். இயக்குநர்கள் எல்லோருமே ‘இந்தக் கேரக்டரை நம்பியாரைத் தவிர வேறு யாருமே செய்யமுடியாது’ என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

கிராமத்துப் பண்ணையாராகவும் மைனராகவும் பல படங்களில் நடித்தாலும் தன் உடல்மொழியாலும் பேசுகிற பாஷையாலும் வித்தியாசம் காட்டுவார். ‘எங்க வீட்டு பிள்ளை’ நம்பியார் ஒருமாதிரி. ‘ராமன் எத்தனை ராமனடி’ நம்பியார் ஒருமாதிரி. ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் அடுத்த ஜென்மம் வந்தபோதும் போன ஜென்மத்தில் வாழ்ந்து இந்த ஜென்மத்திலும் தொடர்ந்து காதலைப் பிரிக்கிற கொடூரக் கிழவனாகவும் மிரட்டியிருப்பார். திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டை சண்முகா தியேட்டரில், ஏழாவது படிக்கும் போது, மாலைக்காட்சிக்குப் போய்விட்டு, மூன்று கிலோ மீட்டர் தூரமுள்ள வீட்டுக்கு ‘எங்கே குறுக்கே நம்பியார் கிழவன் வந்துவிடுவாரோ’ என நினைத்து ‘முருகா முருகா’ என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன்.

கோட்சூட்டுப் போட்டுக்கொண்டு எம்ஜிஆரும் நம்பியாரும் நின்றால், யார் ஹீரோ யார் வில்லன் என்றே தெரியாது நமக்கு! உடற்பயிற்சி, மனப்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டு, ஒழுக்கத்தில் உயர்ந்த குணம், பழகுவதில் இனிமை, பக்தியில் மேன்மை என்று வாழ்ந்தார் நம்பியார். கமல், ரஜினிக்கும் வில்லனாக நடித்தார். குணச்சித்திரக் கேரக்டர்களிலும் விக்ரமன் முதலான இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்தினார்கள்.

‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் நம்பியாரை இதுவரை எவருமே பயன்படுத்தாத கோணத்தில் பயன்படுத்தி, டைட்டிலிலும் நம்பியாரின் பெயரைத்தான் முதலில் போட்டு கெளரவப்படுத்தினார் பாக்யராஜ். இதைப் பார்க்கும் போது ‘குடியிருந்த கோயில்’ படத்தில் அப்படியொரு வில்லத்தனம் காட்டி நம்மைப் படுத்தியெடுத்தவரா இந்த நம்பியார் என்று நமக்கே சந்தேகம் வரும்.

படங்களில் கெட்டத்தனமான கேரக்டர்களைக் கெட்டவர்கள் என்றும் நல்ல கேரக்டர்களில் நடிப்பவர்களை நல்லவர்கள் என்றும் வெள்ளந்தி மக்கள் நம்பிவிடுவார்கள். ஆனால், நம்பியாரின் சினிமா கதாபாத்திரங்களுக்கும் நம்பியாரின் யதார்த்த வாழ்க்கைக்கும் கடுகளவுகூட சம்பந்தமே இல்லை. ஐம்பதுகளில், நவாப் ராஜமாணிக்கமும் நம்பியாரும்தான் சபரிமலையையும் ஐயப்ப சுவாமியையும் விரத முறைகளையும் நமக்கு பிரபலமாகவும் எளிமையாகவும் வகுத்துக் கொடுத்தார்கள்.

சிவாஜியையும் வி.கே.ராமசாமியையும் ரஜினியையும் ஏன்... அமிதாப்ஜியையும் மலைக்கு குருசாமியாக இருந்து அழைத்துச் சென்றார் நம்பியார். சபரிமலைக்கு யாத்திரை எப்படி மேற்கொள்ளவேண்டும் என்பதை ஒரு ‘மிலிட்டிரி டிஸிப்ளின்’ குணத்துடன் செயல்பட்டு, பக்தி நெறியைப் பரப்பிய நம்பியாரை, இன்னமும் அந்த உச்சிமலை... சபரிமலையில் யாரேனும் உச்சரித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். நினைவுப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

2008-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி தனது 89-வது வயதில் மறைந்தார். பிறந்து நூற்றாண்டு கடந்தும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார். கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலைக்கு விரதம் தொடங்கும் மாதம். கார்த்திகை மாதம் என்றாலே தீப வழிபாட்டுக்கு உரிய மாதம்.

நெறி பிறழாமல், அன்பு பிசகாமல், பக்தி மாறாமல், இல்லத்தையும் உள்ளத்தையும் கோயிலாகவே பாவித்து வாழ்ந்த நடிகர் நம்பியார் என்பவர், வில்லன் நம்பியார் என்பவர், குணச்சித்திர நடிகர் நம்பியார் என்பவர்... எல்லாவற்றுக்கும் மேலாக குருசாமி நம்பியார் என்று போற்றப்படும் ஐயப்ப பக்தர் நம்பியார் ... கார்த்திகை மாதத்தில் ஐயப்ப விரத காலத்தில், நிரந்தர விரதம் இருக்கச் சென்றுவிட்டார். அந்த ஆன்மிக ஜோதியில் இரண்டறக் கலந்துவிட்டார் என்றுதான் மெய் சிலிர்க்கச் சொல்லுகிறது சபரிமலை தேவஸ்தானம்!

சபரிமலைக்கு வருடந்தோறும் பக்தர்கள் சென்றுகொண்டே இருப்பார்கள். நம்பியாரை எந்த குருசாமியாவது கன்னிச்சாமிகளுக்கு கதைகதையாகச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

நாமும் நடிகர் நம்பியாரைப் போற்றுவோம்; குருசாமி நம்பியாரை வணங்குவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in