எனது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக்காக காத்திருந்தேன்..!

‘ரோமியோ’ மிருணாளினி ரவி நேர்காணல்
மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி
Updated on
4 min read

விக்ரமுடன் ‘கோப்ரா’ படத்தில் மிருணாளினி ரவி டூயட் பாடி நடித்த ‘டம் டம்’ பாடல் இளசுகள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது அடுத்த பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக மிருணாளினி நடித்துள்ள ‘ரோமியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி

முதலிரவு அறையில் பால் சொம்பை விஜய் ஆண்டணி பிடித்திருக்க, மிருணாளினியோ கையில் கோப்பையைப் பிடித்து அதில் மதுவை ஊற்றுவது போல காட்சியில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். தெலுங்கிலும் கால் பதித்து இரண்டு வெற்றிப் படங்களைத் தந்திருக்கும் மிருணாளினியிடம் காமதேனு டிஜிட்டலுக்காக பிரத்யேகமாக பேசியதிலிருந்து...

மிக நிதானமாக படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறீர்கள். என்ன காரணம், வாய்ப்புகள் சிக்கவில்லையா?

வாய்ப்புகளுக்கு குறைவில்லை. ஆனால், எல்லாவற்றையுமே சிறந்த வாய்ப்புகள் என்று சொல்லமுடியாது. ‘டப்ஸ்மாஷ்’ மூலம் பிரபலமான எனக்கு சினிமாவில் சின்னக் கேரக்டரில் நடித்து விட்டாலே போதும் என்பதுதான் 4 வருடத்துக்கு முந்தைய கனவாக இருந்தது. அந்தக் கனவு நிறைவேறிய பிறகு ஒரு பெரிய ஹீரோவுடன் ஹீரோயினாக நடித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். அது ‘எனிமி’, ‘கோப்ரா’ படங்களின் வழியாக அடுத்த 2 வருடங்களில் சாத்தியமாகிவிட்டது.

மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி

ஒவ்வொரு கட்டத்தைக் கடக்கும்போதும் ஒன்றைக் கற்றுக்கொண்டுதான் முன்னேறுகிறோம். பெரிய ஹீரோ படங்களுக்குப் பிறகு மீண்டும் மீண்டும் அதே மாதிரி ஒரு பாடல், ஹீரோவின் ‘லவ் இன்ட்ரஸ்ட்’ ஆக வந்துபோவது என்று வாய்ப்புகள் வந்தபோது, இவைதான் ஏற்கெனவே நமக்குக் கிடைத்துவிட்டதே... இப்போது நாம் யார், நமக்கு என்ன திறமை இருக்கிறது என்பதை ஆடியன்ஸுக்குக் காட்டுவதற்கான அடுத்த கட்டத்தை நோக்கிப் போகவேண்டும் என்று முடிவு செய்தேன்.

அப்படிச் செய்யும்போதுதான் மிருணாளினிக்காக இந்தப் படத்துக்குப் போவோம் என்று ஆடியன்ஸ் வருவார்கள். அந்த நிலையை எனக்காக நான் தான் உருவாக்க முடியும். எனவே, எனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதில் தவறில்லை என்று தோன்றியது. அப்படியொரு வாய்ப்பு, விஜய் ஆண்டனி சாருடன் நான் எதிர்பார்த்தது போலவே ‘ரோமியோ’ படத்தில் அமைந்தது.

’ரோமியோ’ படத்தின் ஃபர்ஸ் லுக் பரபரப்பாக இருக்கிறது. புதுமணப் பெண்ணாக தோன்றியிருக்கும் நீங்கள். கையில் மதுக் குப்பியை வைத்திருக்கிறீர்கள்… என்ன கதை? உங்கள் கதாபாத்திரம் என்ன?

கிட்டத்தட்ட என்னுடைய சொந்தக் கதைப்போலத்தான் இப்படத்தின் கதையும். அதனாலேயே இந்தப் படத்தின் கதாபாத்திரத்துடனும் என்னை நான் உணர்வு ரீதியாக பொருத்திக்கொள்ள முடிந்தது. காதல் மனைவியின் கனவை தனது கனவாக வரித்துக் கொண்டு, அதை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அவளுக்கு துணை நிற்கும் நாயகன், தடைக்கல் எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று துடுக்கும் துணிவுமாக நிற்கும் கதாநாயகி. அவளது குணத்துக்கு நேர் எதிராக அமைதியான மனோபாவம் கொண்ட நாயகனாக விஜய் ஆண்டனி வருகிறார்.

மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி

மனைவியின் குணம் தெரிந்தாலும் அதை அவர் எப்படி எடுத்துக்கொள்கிறார், அவளை நிபந்தனை ஏதுமின்றி ஆதரித்தாரா, இல்லை பாதியில் கைவிட்டுச் செல்ல முடிவெடுத்தாரா என்று அவரது கதாபாத்திரம் செல்லும். இதுவொரு ஆக்‌ஷன் லவ் ஸ்டோரி. எனக்கும் இதில் ஆக்‌ஷன் உண்டு. என்னை மையப்படுத்தித்தான் கதை.

இதை எப்படி உங்களின் சொந்தக் கதை என்று சொல்கிறீர்கள்?

ஐடி வேலையை விட்டுவிட்டு, சினிமாவுக்குச் செல்கிறேன் என்று நான் சொன்னதும் வீட்டில் ஒரே சண்டை. ஆனால், எனது லட்சியத்திலிருந்து பின் வாங்காமல், எனக்குத் திறமை இருக்கிறது என்பதை ‘டப்ஸ்மாஷ்’ வழியாக நிரூபித்து, அதன் வழியாகவே சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றேன்.

மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி

‘ரோமியோ’ படத்தின் இயக்குநர் கதையைச் சொன்னபோது, எனது போராட்டத்தை அவர் எனக்குத் திரும்பச் சொல்வதுபோல் உணர்ந்தேன். இந்தக் கதாபாத்திரத்துக்கு முக பாவனைகள் மூலம் நடிக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. தங்களுடைய லட்சியத்துக்காக போராடுகிறவர்கள், போராடியவர்கள் அனைவருக்கும் எனது கதாபாத்திரம் பிடித்துவிடும். வாழ்க்கையில் லட்சியத்துக்காகப் போராடாதவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா என்ன?

மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி

விஜய் ஆண்டனி என்றாலே அமைதியாக ஆனால் அட்டகாசமாக நடித்துக் கவர்ந்து விடுபவர். அவருடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

ஒரு மாஸ் ஹீரோ என்பதைத் தாண்டி, இப்படியொரு மனிதரை என் வாழ்க்கையில் கண்டுகொண்டேன். அவரது நட்பும் ஆதரவும் எனக்கு இனி இருக்கும் என்பதையே நான் எனது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். விஜய் ஆண்டனி மாதிரியான மனிதர்கள் அபூர்வமானவர்கள். அவரை சிறந்த ரோல் மாடல் என்று கூடச் சொல்வேன்.

கடின உழைப்பு மட்டுமல்ல... ரொம்பவே முற்போக்கு சிந்தனை கொண்டவர். ‘அகெட் ஆஃப் த டைம்’ என்று சொல்வார்கள் இல்லையா? அதுபோல் யோசிக்கும் ஒருவர். சிறந்த கற்பனை வளம் கொண்டவர். இவ்வளவு கடின உழைப்பால் தான் நான் இந்தப் பொசிஷனில் இருக்கிறேன் என்ற கர்வமோ, நடை உடை பாவனைகளில் அதைக் காட்டிக்கொள்வதோ துளியும் அவரிடம் இல்லை.

மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி

அடக்கமாகவும் ஹம்பிள் ஆகவும் இருப்பதற்கு ஒரு முகம் இருக்குமானால் அது விஜய் ஆண்டனி சார் தான். இதைக் கண் கூடாகப் பார்த்து பழகிவிட்டுச் சொல்கிறேன். படப்பிடிப்பில் அவருக்கான ஷாட் முடிந்ததும் போய் கேரவனில் உட்கார்ந்துகொள்ள மாட்டார். லேப்டாப்பை எடுத்து வைத்து, அதில் தனது அடுத்த படத்தை எடிட் செய்து கொண்டிருப்பார்.

ஏற்கெனவே கம்போஸ் செய்த மெட்டுக்குப் பாடல் எழுதிக்கொண்டிருப்பார். நான் பக்கத்தில் போய் பார்த்தபோது, என்னை வெறும் வேடிக்கை பார்ப்பவளாக மட்டும் இருக்கச் செய்யாமல், பாடல் வரிகளை என்னிடம் படிக்கக் கொடுத்து, இந்த வரிகள் எப்படி இருக்கின்றன என்று கருத்துக் கேட்டார். அரை மணி நேரத்தில் மீண்டும் ஷாட் தயாராகியதும் அதை அப்படியே மூடி வைத்துவிட்டுப் போய் நடிப்பார்.

இப்படி உடனக்குடன் ‘ஸ்விட்ச் ஓவர்’ செய்துகொள்ளும் ஆற்றால் எல்லாருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அது கடின உழைப்பின் வழியாக, வாழ்க்கை உருவாக்கிய நெருக்கடிகளின் வழியாக உருவானது. ஆனால், தனக்கிருக்கும் பணிச் சுமை, நேரமின்மை பற்றி அவர் முகத்தில் காட்டிக்கொள்ளவே மாட்டார். அவருடைய மகளின் இழப்பையும் அவர் கடந்து வந்தது அவருடைய இந்தப் பணி முறையாலும் இந்த அர்ப்பணிப்பு மிகுந்த குணத்தாலும் தான் என்று நினைகிறேன். இத்தனைக்கும் அவர் அத்தனை சீரியஸான மனிதரும் கிடையாது. நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

விஜய் ஆண்டனியின் பின்னால் அவருடைய மனைவி ஃபாத்திமாவின் பங்கு எந்த அளவுக்கு இருக்கிறது?

மிகச் சிறந்த தம்பதி. ’மேட் ஃபார் ஈச் அதர்’ என்பார்களே... அது அவர்கள்தான். விஜய் ஆண்டனி சாருக்கு முதுகெலும்பு என்றே சொல்லுவேன். கணவரை கவனித்துக்கொள்வது, தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு நிர்வாக ரீதியாக வரும் பிரச்சினைகளை எதிர்கொள்வது ஆகிவற்றில் அவரது ஆளுமை அழகானது. விஜய் ஆண்டனி சாரின் வளர்ச்சியில் ஃபாத்திமா அக்காவுக்கு பெரிய பங்கிருக்கிறது. அதை விஜய் ஆண்டணி சாரே மறுக்கமாட்டார்.

தெலுங்கிலும் கால் பதித்துவிட்டீர்கள்..?

ஆமாம்! ‘ஜிகிர்தண்டா’ படத்தின் தெலுங்கு ரீமேக் வழிகாத்தான் நான் தெலுங்கில் அறிமுகமானேன். ‘கோப்ரா’ படத்துக்குப் பிறகு வந்த படங்கள் அவை. ‘ஆர்கானிக் மாமா... ஹைபிரெட் அல்லடு’, ‘மாமா மச்சீந்திரா’ என அந்த இரண்டு படங்களுமே நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்தன.

மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி

உங்கள் இன்ஸ்டா பக்கத்தில் பிரபலமான கோயில்களில் சாமி தரிசனம் செய்யும் படங்களை நிறையப் போட்டு வைத்திருக்கிறீர்களே.?

படப்பிடிப்புக்காகப் போகும்போது அந்த ஊரில் புகழ்பெற்ற கோயில்கள் இருந்தால் போகாமல் இருக்கமாட்டேன். படப்பிடிப்பு இல்லாமலும் பெரிய ஷேத்திரங்களுக்குப் போய் சாமி தரிசனம் முடித்ததும் ஆற அமர அங்குள்ள சிற்பங்களைப் பார்த்து ரசிப்பேன். அவற்றைப் பற்றிய சிந்தனைகளை ஓட விடுவேன். நம்மிடம் எவ்வளவு சிறந்த சிற்பிகளும் கட்டிட வல்லுநர்களும் இருந்திருக்கிறார்கள் என்று பெருமைப்படுவேன். வருடத்துக்கு ஒருமுறை குலதெய்வக் கோயிலுக்குப் போவதையும் வழக்கமாக வைத்திருக்கிறேன்.

‘ஸீரோ சைஸ்’ உடலமைப்பை எப்படிப் பாராமரிக்க முடிகிறது? மாவுச் சத்துள்ள உணவுகளை முற்றாக தவிர்ப்பீர்களோ..?

அதற்கு வாய்ப்பே இல்லை. மாவுச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்துவிட்டு உணவு என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அதேசமயம் மாவுச்சத்துள்ள இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றின் அளவைக் குறைத்துக் கொண்டு, காய்கறிப் பொரியல், கூட்டு ஆகியவற்றை கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவேன்.

அதேபோல் எண்ணெய்யில் பொரித்தவற்றை தவிர்ப்பதில்லை. என் வயிற்றுக்கு ஒத்துக்குக் கொள்ளும் உணவுகள் எதுவானாலும் அதைச் சாப்பிடுவேன். அதில் ஒரு கட்டுப்பாடு இருக்கும் அவ்வளவுதான். சாப்பிடக் கூடாது என்று சொல்லும் நல்ல உணவுகளையும் நான் முயற்சி செய்து பார்த்துவிடுவேன். எல்லா உணவுகளுக்கும் ஏற்றபடி நம் வயிற்றையும் உடலையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவள் நான். அதேசமயம், இவையெல்லாம் உடல் ஆரோக்கியத்துக்கு கெடுதல் என்று தெரிந்தும் அதை முயன்று பார்க்கும் பழக்கம் எனக்குக் கிடையாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in