`எனக்குள் அந்த நிமிடம் பேய் பிடித்தது போல ஆகிவிட்டது'- மைக்கை எறிந்த விவகாரத்தில் பார்த்திபன் விளக்கம்

`எனக்குள் அந்த நிமிடம் பேய் பிடித்தது போல ஆகிவிட்டது'-  மைக்கை எறிந்த விவகாரத்தில் பார்த்திபன் விளக்கம்

நடிகர் பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பார்த்திபனும் இந்த படத்தின் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மானும் பேசி கொண்டிருந்தபோது மைக் வேலை செய்யாத காரணத்தால் மைக்கை பார்த்திபன் எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு அப்போதே மேடையில் பார்த்திபன் மன்னிப்பு கேட்டிருந்தாலும் இப்போது அதற்கு விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், " 'இரவின் நிழல்' முதல் பாடல் வெளியீட்டு விழாவை விட நான் மைக்கை தூக்கி எறிந்த சம்பவம்தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது வைரலுக்காக, கவன குவிப்புக்காக வேண்டுமென்றே செய்தேன், நடிப்பு எனவும் பேசப்படுகிறது. என்னை பொறுத்தவரை எல்லா வேலைகளையும் நானே செய்பவன். மேடையில் நாற்காலி தேவைப்படுகிறது என்றால் ஆட்கள் வரும் வரை நான் காத்திருக்க மாட்டேன். நானே எந்தவித தயக்கமும் இல்லாமல் வேலை செய்வேன். கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக சரியான தூக்கம் இல்லை. அதிலும் குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக தூங்கவே இல்லை.

'இரவின் நிழல்' சிங்கிள் நிகழ்ச்சியில் ரஹ்மான் இசை, அலெக்ஸ் பாட்டு, கரு.பழனியப்பன் பேச்சு என அனைத்தும் அருமையாக ஹைலைட்டாக போய் கொண்டிருந்தது. இருபது வருடங்களாக ரஹ்மான் இசையில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அது இந்த படத்தில் நடந்திருக்கிறது. கதை கேட்டதும் அவர் சம்மதித்தது தான் எனக்கான ஃபைனான்ஸ். இதுவரை எந்தவொரு முதல் சிங்கிள் வெளியீட்டிற்கும் ரஹ்மான் வந்ததில்லை. அவரை நானும் அவர் இந்த படத்தையும் பெரிதும் மதிக்கிறோம்.

எந்தவொரு ஸ்பான்சரும் இல்லாமல் பெரும் பொருட்செலவில் இந்த சிங்கிள் வெளியீட்டு நிகழ்வை நடத்தி உள்ளேன். இந்த மன அழுத்தம் மற்றும் ரஹ்மானுக்கு கொடுக்க இருக்கும் கனமான ஷீல்ட் கீழே விழுந்துவிட கூடாது என்ற பதற்றத்தில் அதை தாங்கி பிடித்த வலி என அனைத்தும் சேர்ந்து எனக்குள் அந்த நிமிடம் பேய் பிடித்தது போல ஆகிவிட்டது. மேடைக்கென்று சில நாகரிகங்கள் இருக்கின்றன.

அந்த நிமிடத்தில் நான் அப்படி நடந்து கொண்டதில் ரஹ்மான் துணுக்குற்றதை எல்லாம் பின்பு வீடியோக்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். மற்றபடி அவர் நிகழ்ச்சி முழுவதும் மகிழ்ச்சியாகவே இருந்தார். இப்படி நடந்ததால் அவரிடம் மன்னிப்பு கேட்டு வாய்ஸ் நோட் அனுப்பினேன். ரோபோ சங்கரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் எந்தவொரு விஷயத்தையும் வைரலுக்காக செய்வது கிடையாது. மற்றபடி, இந்த படம் உலகளவில் முதல் முயற்சி" என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in