’சுயம்வரம்’ நிகழ்ச்சி: இந்தி பாடகருக்கு மனைவி ஆகிறார் பிரபல தமிழ் நடிகை

’சுயம்வரம்’ நிகழ்ச்சி: இந்தி பாடகருக்கு மனைவி ஆகிறார் பிரபல தமிழ் நடிகை

சேனல் ஒன்றில் நடந்த சுயம்வர நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் நடிகை, பிரபல இந்தி பாடகருக்கு மனைவி ஆகிறார்.

பிரபல இந்தி சின்னத்திரை நடிகை ஆகன்ஷா புரி. இவர் தமிழில், கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், விஷாலின் ஆக்‌ஷன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்துள்ள இவர், சன் டி.வியில் ஒளிபரப்பான ’விநாயகர்’ என்ற பக்தி தொடரில், பார்வதி தேவியாக நடித்திருந்தார்.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பிரபலமான இவர், ஸ்டார் பாரத் சேனல் நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிரபல பாடகர் மிகா சிங்- மணமகளைத் தேர்வு செய்யும் சுயம்வர நிகழ்ச்சி அது. இதில் 12 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். கடைசி கட்டத்துக்கு 3 பேர் தேர்வானார்கள். அதில், நடிகை ஆகன்ஷா புரியை பாடகர் மிகா சிங் தனது மனைவியாகத் தேர்வு செய்துள்ளார்.

அதற்கு அடையாளமாக நிகழ்ச்சியில் அவருக்கு மாலை அணிவித்துள்ளார். அதோடு நடிகை ஆகன்ஷாவின் பெற்றோரைச் சந்தித்தும் அவர் ஆசிபெற்றார். நடிகை ஆகன்ஷா மணம் புரியும் பாடகர் மிகா சிங் கடந்த 10 வருடத்துக்கும் மேலாக நண்பர்களாக உள்ளனர்.

மிகா சிங், ஆகன்ஷா புரி
மிகா சிங், ஆகன்ஷா புரி

நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோடில் உணர்ச்சி வசப்பட்ட ஆகன்ஷா, மிகா சிங்கை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்றும் அவர் எப்போதும் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருக்கிறார் என்று உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்தார். இந்நிலையில் மிகா சிங், ஆகன்ஷா புரியை மனைவியாக தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி இன்று இரவு ஒளிபரப்பாகிறது.

பாடகர் மிகா சிங், இந்தியில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். பஞ்சாபி, தெலுங்கு, கன்னடப் பாடல்களையும் பாடியுள்ள இவர், பல தனி ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். இவர், பிரபல பாடகர் தலேர் மெஹந்தியின் சகோதரர்.

ஆகன்ஷா புரி, மிகா சிங்
ஆகன்ஷா புரி, மிகா சிங்

நடிகை ஆகன்ஷாவும், மிகாவும் காதலித்து வருவதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கடந்த வருடமே செய்திகள் வெளியானது. அப்போது அதை மறுத்த ஆகன்ஷா, ’’அவர்கள் வீட்டில் நடந்த பூஜையில் நான் கலந்துகொண்டேன். அதை வைத்து ரசிகர்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறுகின்றனர். அது அவர்களின் எதிர்பார்ப்பு. எங்கள் குடும்பத்துக்கும் அவருக்கும் நெருங்கிய பந்தம் இருக்கிறது. எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. அப்படியொரு எண்ணம் இல்லை’’ என்று கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in