
தன் அம்மாவை நம்ப வைத்து ஏமாற்றிச் சென்ற தந்தையை, காத்திருந்து பழி வாங்கும் மகனின் கதைதான் 'மைக்கேல்'.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், கெளதம் வாசுதேவ் மேனன், திவ்யான்ஷா கெளசிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கக் கூடிய 'மைக்கேல்' இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
எப்படி இருக்கிறது 'மைக்கேல்'?
மும்பையில் பிரபல தாதாவாக வலம் வரும் குருநாத் (கெளதம் வாசுதேவ்மேனன்) எதிர்பாராத ஒரு சமயத்தில் இக்கட்டில் மாட்டிக் கொள்ள, அவரை மைக்கேல் (சந்தீப் கிஷன்) காப்பாற்றுகிறார். பின்னர் தன்னைக் கொலை செய்ய முயற்சித்தவனையும், அவனது மகளையும் (கதாநாயகி திவ்யான்ஷா) கொல்ல, கெளதம் மேனன் சந்தீப்பை டெல்லிக்கு அனுப்புகிறார். அங்கு திவ்யான்ஷா உடன் சந்தீப்புக்கு காதல் முளைக்க, கெளதம் சொன்ன அசைன்மெண்ட்டை முடிக்காமல் இழுத்தடிக்கிறார். இந்த விஷயம் கெளதம் மேனனின் மகனுக்கு தெரிய வர, அப்பாவின் இடத்தை பிடிக்கும் ஆசையில் சந்தீப்புடன் மோதுகிறார்.
இவர்கள் மோதல் என்னவானது? கெளதம் மேனனுக்கும் சந்தீப்புக்கும் என்ன தொடர்பு? மைக்கேலின் பின்னணி என்ன என்பதாக, 90'களின் காலக்கட்டத்தில் நடப்பதாக விரிகிறது கதை.
ஏக்கம் நிறைந்த கண்களும், சாந்தமான முகமும், இறுகிய உடம்புமாக 'மைக்கேல்'லாக மாறி இருக்கிறார் சந்தீப். படத்தில் அவருக்கு குறைவான வசனங்கள்தான். ஆனால், முதல் பாதியில் அமைதியாகவும் ஆக்ரோஷமாகவும் நகரும் இவரது நடிப்பு இரண்டாம் பாதியில் ஒரே மாதிரியான முகபாவனைகளில் அலுப்பு கூட்டுகிறது. கதையில் மும்பை தாதாவாக கெளதம் வாசுதேவ் மேனன், சிறப்புத் தோற்றத்தில் வரும் விஜய்சேதுபதி, வரலட்சுமி, நாயகன் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் என அனைவருமே சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.
கதாநாயகியாக திவ்யான்ஷா நடிப்பில் இன்னும் அழுத்தம் கூட்டியிருக்கலாம். 90'களில் நடக்கும் கதை என்பதால் அதற்கேற்றாற்போல, ரெட்ரோ லுக்கில் செட் அமைப்புகளும் கிரண் கெளசிக்கின் ஒளிப்பதிவும் திரையரங்கில் பார்க்கும்போது அட்டகாசமான அனுபவத்தைக் கொடுக்கிறது. சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசை பல இடங்களில் ரசிக்க வைத்தாலும், படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை தொடரும் ஆக்ஷன் காட்சிகளால் இரைச்சலாகவே எஞ்சி நிற்கிறது.
'மைக்கேல்' என படத்தலைப்பில் இருந்து கதாநாயகனை மையப்படுத்திய கதையாகவே நகரக்கூடிய இதில், 'எப்புட்ரா' என ஏகப்பட்ட லாஜிக் மீறிய ஹீரோயிசம். நூறு பேர் வந்தாலும் ஒற்றை ஆளாக சமாளிப்பது, எத்தனை முறை குண்டடி வாங்கினாலும் மீண்டு வருவது, வலுவில்லாத காதலுக்காக நீளும் இரண்டாம் பாதி என கதை பல இடங்களில் சோதிக்கிறது. ஆங்காங்கே, 'நாயகன்', 'கே.ஜி.எஃப்' படங்களின் சாயலும் வந்து போகிறது. படத்தில் கதாபாத்திரங்களுக்கான வசனங்களை விட இரத்தமும் வன்முறையுமே ஓவர் டோஸாகி இருக்கிறது.
'புரியாத புதிர்', 'இஸ்பேட் ராஜா இதயராணியும்' எடுத்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி 'மைக்கேல்' படத்தில் முதல் பாதியை மெதுவாகவும், இரண்டாம் பாதியில் இன்னும் பொறுமையை சோதிக்கும் வகையிலும் கதையை நகர்த்தி இருக்கிறார். இதில் இரண்டாம் பாகத்துக்கான லீட் வேறு வைத்திருக்கிறார்கள். ரெட்ரோ ஸ்டைல் மேக்கிங்கிற்காகவும் தேவையான பொறுமை இருந்தாலும் ஒருமுறை 'மைக்கேல்'லை திரையரங்குகளில் பார்க்கலாம்.