எம்ஜிஆரின் ‘நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்’ பாட்டு!

பாட்டு வரியை படத்தின் டைட்டிலாக்கிய எம்ஜிஆர்!
எம்ஜிஆரின் ‘நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்’ பாட்டு!

’நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால், இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்’ என்று கவிஞர் வாலி எழுத, சாட்டையைச் சுழற்றிக் கொண்டு விளாசித் தள்ளியபடி, சிரித்துக் கொண்டே பாடிய எம்ஜிஆருக்கு, அதையடுத்து மிகப்பெரிய இமேஜ் கூடியது. அந்தப் படம் ‘எங்க வீட்டு பிள்ளை’. 1965-ல் வெளியான இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆணையிட்டால்’ என்ற பாடலின் முதல் வரியில் கட்டுண்டுபோன எம்ஜிஆர், தன் படத்துக்கு இந்த டைட்டிலை வைக்கச் சொன்னார். அதுதான் ‘நான் ஆணையிட்டால்’ என்று வெளியானது.

அந்தக் கொள்ளைக்கூட்டம், மிகப்பெரியது. திட்டமிட்டு, கொள்ளையடிப்பதில் சூரப்புலிகள். இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கு ஒரு தலைவன் உண்டு. அவன் சொல்படி எல்லோரும் கட்டுண்டு செயல்படுவார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த பாண்டியா, கொஞ்சம் கொஞ்சமாக மனம் திருந்துகிறான். திரும்பி, பழைய வாழ்க்கைக்கே செல்லவேண்டும் என விரும்புகிறான்.

‘கொள்ளைச் செயல் பாவம்’ என சிந்திக்கிறான். ‘திருந்தி வாழ்வதே, இதுவரை வந்த பழிகளைத் துடைக்கும்’ என்பதில் உறுதியாக இருக்கிறான். தன் தலைவனிடம் தன் கருத்தைச் சொல்லுகிறான். புரியவைக்க முயலுகிறான். ‘நமக்குப் பிறகும் இந்த அவப்பெயர், பரம்பரை பரம்பரையாக வந்து சேரும்’ எனப் புரியவைக்கிறான். அந்த தலைவனுக்கு எல்லாமும் புரிகிறது. ‘இதுவும் சரிதான்’ என்று யோசிக்கிறார் தலைவர். ‘செய்த பாவமெல்லாம் போதும்’ என்று தன் குழுவினரிடம் அறிவிக்கிறார். முக்கால்வாசி பேருக்கும் நிம்மதி. ‘அப்பாடா...’ என பெருமூச்சு விடுகிறார்கள். இனி நெஞ்சு நிமிர்த்தி நடக்கலாம் என்று பெருமிதம் கொள்கிறார்கள்.

ஆனால், அந்தக் கூட்டத்தில் இருக்கும் வேலையாவுக்கு இதில் உடன்பாடில்லை. முறைக்கிறான். எதிர்க்கிறான். இப்படி நம் கொள்ளைத் தொழிலையே சின்னாபின்னப்படுத்திய பாண்டியா மீது ஆத்திரம் கொள்கிறான். ஒரு கொலையைச் செய்துவிட்டு, அந்தக் கொலையை பாண்டியா மீது போடுகிறான். அதில் இருந்து தப்பிக்க வழி தேடுகிறார் பாண்டியா.

இந்த சமயத்தில், பணக்காரர் ஒருவருக்கு மகனாக நடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அங்கேயும் ஒரு கெட்டவன் இருக்கிறான். மேனேஜர் குமார் தீய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். அவனுக்கு பாண்டியாவின் வருகை இடைஞ்சலாக இருக்கிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல், வேலையாவும் மேனேஜர் குமாரும் கூட்டு சேர்ந்து பாண்டியாவை அழிக்கப்பார்க்கிறார்கள். இதன் நடுவே, பாண்டியாவுக்கு பூக்கிறது காதல். ஒருபக்கம் காதல், இன்னொரு பக்கம் வேலையாவின் சூழ்ச்சி, மற்றொரு பக்கம் மேனேஜர் குமாரின் தகிடுதத்தம் எல்லாவற்றையும் சமாளித்து, அவற்றிலிருந்து பாண்டியா ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் கதை!

பாண்டியனாக எம்ஜிஆர். மாலா எனும் கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா. கண்ணகியாகவும் காவேரியாகவும் சரோஜாதேவி. வேலய்யாவாக நம்பியார். மேனேஜராக ஆர்.எஸ்.மனோகர். கொள்ளைக்கூட்டத் தலைவன் முத்துவீரனாக ஓ.ஏ.கே.தேவர். செழியன் எனும் கேரக்டரில் அசோகன்.

நம்பியார் ஒருபக்கம், ஆர்.எஸ்.மனோகர், அசோகன் என ஒவ்வொரு பக்கமும் நடிப்பில் கலக்கியிருப்பார்கள். முக்கியமாக, ஓ.ஏ.கே.தேவர் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருப்பார். ‘அப்பு தி கிரேட்’ எனும் கேரக்டரில் நாகேஷின் லொள்ளு அதகளம் பண்ணும்.

எம்ஜிஆரின் சுள்ளாப்பும் சுறுசுறுப்பும் படத்துக்கு மிகப்பெரிய பலம். போதாக்குறைக்கு அவருடைய காஸ்ட்யூம்கள் ரொம்பவே ரசிக்க வைத்தன. சரோஜாதேவிக்கும் கே.ஆர்.விஜயாவுக்கும் படத்தில் பெரிய வேலையெல்லாம் இல்லை. ஓ.ஏ.கே.தேவர் தன் மிடுக்கான குரலால், பேசுகிற ஒவ்வொரு வசனங்களும் நறுக்சுருக்கென இருக்கும்.

'கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே/ என்னைத் தடுத்துத் தடுத்து வெட்கம் மறைக்குமே/ நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே/ உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே’ என்றொரு பாடல். 'உயரும்போது மயங்கி விடாமல் நீ கூட வா/ உயரும் போது மயங்கி விடாமல் நீ கூட வா/ நான் மயங்கினாலும் மறந்து விடாமல் நீ தேட வா/ நான் மயங்கினாலும் மறந்து விடாமல் நீ தேட வா/ என்னை நீ தேட வா/ நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா’ என்றொரு பாடல்.

சத்யா பிலிம்ஸ் பேனரில் ஆர்.எம்.வீரப்பன் இந்தப் படத்தைத் தயாரித்தார். திரைக்கதையையும் அவரே எழுத, வித்வான் வே.லட்சுமணனும் பாண்டுரங்கனும் இணைந்து வசனம் எழுதினார்கள். கறுப்பு வெள்ளைப் படமானாலும் தன் ஒளிப்பதிவால் பி.என்.சுந்தரம் ஜாலம் காட்டினார். சாணக்யா இயக்கினார்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ஜாக்ஸன் துரையாகவும் ‘கோழி கூவுது’ படத்தில் ‘அண்ணே அண்ணே சிப்பாயண்ணே’ பாடலுக்கும் வந்த சி.ஆர்.பார்த்திபன் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.

1965-ம் ஆண்டு பொங்கலுக்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ வெளியானது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘நான் ஆணையிட்டால்’ படத்தை வெளியிட முடிவு செய்திருந்தார் ஆர்.எம்.வீரப்பன். ஆனால், ஏவி.எம். நிறுவனம் எம்ஜிஆரை வைத்து முதன்முதலாக எடுத்த ‘அன்பே வா’ படத்தை 1966-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடலாம் என விரும்பியது. இதுகுறித்து எம்ஜிஆரிடம் கேட்க, எம்ஜிஆரோ ‘’ஆர்.எம்.வீரப்பனிடம் கேட்டுக்கொள்ளுங்கள்’’ என்று சொல்ல, ‘’சரி... ‘அன்பே வா’ படம், பொங்கலுக்கு வரட்டும்’’ என்று வீரப்பன் விட்டுக்கொடுக்க, அதன்படி, பொங்கல் நன்னாளில் வெளியானது ‘அன்பே வா’. அதையடுத்து 20-வது நாளில்... பிப்ரவரி 4-ம் தேதி வெளியானது ‘நான் ஆணையிட்டால்’.

‘அன்பே வா’, ‘சந்திரோதயம்’, ’தனிப்பிறவி’, ’தாலி பாக்கியம்’, ’நாடோடி’, ‘பறக்கும் பாவை’, ’முகராசி’, ‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘நான் ஆணையிட்டால்’ என வெளியாகி பெரும்பாலான படங்கள் வசூல் குவித்தன. ‘அன்பே வா’, ‘பறக்கும் பாவை’ தவிர, மற்ற எல்லாப் படங்களுமே கறுப்பு வெள்ளைப் படங்கள்தான்!

நான் ஆணியிட்டால் வெளியாகி, 57 ஆண்டுகளாகிவிட்டாலும், ‘தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை குருடர்கள் கண்ணைத் திறந்துவைப்பேன்’ பாடலும் ‘நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன் என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்’ பாடலும் இன்றைக்கும் நம் உணர்வுகளில் ஊடுருவியிருக்கின்றன!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in