‘எம்ஜிஆர் அப்ப எங்க வீட்லதான் குடியிருந்தார்!’

95 வயது ஒளிப்பதிவு உதவியாளரின் ஃப்ளாஷ்பேக்
‘எம்ஜிஆர் அப்ப எங்க வீட்லதான் குடியிருந்தார்!’
சீத்தாபதி

‘பட்சிராஜா ஸ்டுடியோ’, ‘சென்ட்ரல் ஸ்டுடியோ’ என 1950-களில் கொடிகட்டிப் பறந்த கோவையில் எம்ஜிஆர், என்டிஆர், கண்ணாம்பா, சிவாஜி, லலிதா பத்மினி, பானுமதி உள்ளிட்டோர் நடித்த பல்வேறு படங்களுக்கு கேமரா உதவியாளராய் இருந்த சி.கே. சீத்தாபதி, 95 வயதில் பழுத்த பழமாய் கோவை ராமநாதபுரத்தில் வசிக்கிறார் என்று கேள்வியுற்று அவரை சந்தித்தேன்.

கோவை பழைய சுங்கத்துக்கு கிழக்கே, திருச்சி சாலையில் ஒரு பர்லாங் தொலைவில், இடதுபுறச் சந்தில் உள்ளது சீத்தாபதி வீடு. இவருடன் இருப்பவர் ஒரே ஒரு சமையல் உதவியாளர். ஒரு மகன் அமெரிக்காவில் டாக்டர். ஒரு மகள் வெளியூரில் வசிக்கிறார். “இந்தப்பகுதி எல்லாம் எங்க விவசாய பூமியாக இருந்தது. அப்பவே லே-அவுட் போட்டு விற்றாச்சு. மிச்சமிருப்பது இந்த வீடு மட்டுமே!’’ என்றவர், நாம் கேட்டதும்... தனது சினிமா வாழ்க்கையின் பழைய நினைவுகளுக்குள் புகுந்தார்.

சீத்தாபதி டைட்டில் கார்டு- மனோகரா படத்தில்
சீத்தாபதி டைட்டில் கார்டு- மனோகரா படத்தில்

‘‘1947-ல் ஜெகதலப் பிரதாபன் படத்தில் கேமரா மேன் கிருஷ்ணன்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தேன். அடுத்தது பட்சிராஜா ஸ்டுடியோவுல 3 வருஷம் ஓடுச்சு. பிரகாஷ்ன்னு ஒருத்தர் கூட இருந்தேன். அடுத்தது மலையாளப்படம் பிரசன்னான்னு பண்ணினேன். அப்புறம் மெட்ராஸ் போயி 6-7 வருஷம் நெப்ட்யூன் ஸ்டுடியோவுல வேலை பார்த்தேன். என் சகோதரி கணவர் கோவிந்த் சவுண்ட் இஞ்சினியர். அவர் சொந்தமா பல படங்கள் எடுத்தார். அதுலயும் வேலை செஞ்சேன். இடையில் சிங்களம் போனேன். அசோக்குமார்கிட்ட ‘சீதா ஜெயவர்த்தனே’ன்னு ஒரு படம் பண்ணினேன்.

மறுபடி தமிழ்நாட்டுக்கு திரும்பினதும், சொந்தப்படம் எடுக்க ஆசை. நண்பர்கள் பார்ட்னரா சேர்ந்தாங்க. ‘தர்மபத்தினி’ படத்துப் பேரு. முக்கால்வாசி படம் எடுக்குறதுக்குள்ளயே பார்ட்னர்களுக்குள்ளே ஃபைனான்ஸ் தகராறு. மொத்தப் படத்தையும் அவங்களுக்கே கொடுத்துட்டேன். அதுல ரூ. 3 லட்சம் நஷ்டம். என் மனைவியோட நகைகளை விற்றுத்தான் கடனை அடைச்சேன். அத்தோட சினிமாவையே வெறுத்துட்டேன்” என்றவரிடம், தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், கருணாநிதி, சிவாஜி பற்றிப் பேச்சை திருப்பினேன்.

‘‘எம்ஜிஆர் ரொம்ப பின்னாடிதான் வந்தாரு. அண்ணாதுரை வேலைக்காரி எடுத்தப்ப, கருணாநிதி சிங்காநல்லூர்ல இருந்து வருவார். அப்பப்ப பார்ப்பேன். தியாகராஜபாகவதர், எஸ்.ஏ.சாமி, டி.எஸ்.பாலையா, நம்பியார், கண்ணாம்பா, பானுமதி, டி.ஆர்.ராஜகுமாரின்னு நடிகர்கள் எல்லாம் இதே ராமநாதபுரத்தில்தான் தங்கியிருந்தாங்க. அப்படித்தான் எம்ஜிஆரும். இங்கிருந்து 2 வீடு தள்ளி ஒரு ஓட்டு வீட்டுலதான் இருந்தார். அதுவும் எங்க வீடுதான். மாசம் ரூ.100 வாடகை. ஒரு தடவை சென்னைக்குப் போனவர், திரும்பி வந்தப்ப வி.என்.ஜானகிய வீட்டுக்கு கூட்டீட்டு வந்துட்டார். அப்புறம் 3 வருஷம் எங்க வீட்லதான் ஜானகியோட குடியிருந்தார் எம்ஜிஆர். அவருக்கு என் தேககட்டு மேல எப்பவும் ஈர்ப்பு அதிகம். நான் அவரை விட உயரம். கோதாபட்டியில போய் பயிற்சி எடுத்த மாதிரி உடம்பு. ஒரு தடவை, ‘ஆண்டவரே.. கொஞ்சம் வாங்க. உங்க உடம்பை இப்படிக் காட்டுங்க, படம் எடுக்கணும்’ன்னு ‘மஸில்ஸ்’ காட்டற மாதிரி போஸ் கொடுக்கச் சொல்லி அவரே போட்டோ எடுத்தார்’’ என்றவர், கொஞ்ச நேரம் அந்த நினைவில் மூழ்கின மாதிரி கண்களை மூடி யோசித்தார்.

‘‘எம்ஜிஆர் கூட இவ்வளவு நெருக்கமா பழகியிருக்கீங்க. சென்னை போன பிறகு அவரைப் போய் பார்த்தீங்களா?’’ என்று நான் கேட்டதும் கண் திறந்தார்.

‘‘ஒரே ஒரு தடவை பார்த்தேன். சென்னையில் தாய்க்குப் பின் தாரம் பட ஷூட்டிங்ன்னு நினைக்கிறேன். நான் போனதும், ‘ஆண்டவரே’ன்னு கட்டிப்பிடிச்சிக்கிட்டார். அதுக்கு அப்புறம் நாங்க பார்த்துக்கவே இல்லை. எம்ஜிஆர் மாதிரியே என்டிஆரும் அப்ப எனக்கு ரொம்ப பழக்கம்தான்” என்றவர், அடுத்ததாக ஜெயலலிதாவின் தாய் சந்தியாவைப் பற்றிப் பேசினார்.

‘‘சந்தியா அப்ப ரொம்ப அழகா இருப்பாங்க. ஜெயலலிதாவோட சின்னம்மா விந்தியாதான் சந்தியாவைக் கூட்டீட்டு எங்கிட்ட வந்தாங்க. விந்தியா ‘ரத்தபாசம்’ன்னு ஒரு படத்துல வில்லியா நடிச்சதுல அறிமுகம். சந்தியாவை ‘எதிர்பாராதது’ ன்னு ஒரு படத்துல புக் பண்ணீட்டு, திடீர்னு அந்தப் படத் தயாரிப்பாளர் அவரை நீக்கிட்டார். அந்தத் தயாரிப்பாளர் எனக்கு நெருக்கம். ஃபைசல் பேசித்தரச் சொன்னாங்க. பேசிப் பார்த்தப்ப வேறொரு நடிகையை சந்தியா கேரக்டருக்கு தேர்ந்தெடுத்ததோட இல்லாம, அவங்களே அந்தப் படத்துக்கு பெருந்தொகை ஃபைனான்ஸ் செய்யறதா தெரிஞ்சுது. அதனால அவங்களுக்கு காரியம் கை கூடவில்லை. அப்ப ஜெயலலிதா ரொம்ப சின்னப் பொண்ணு” என்றார்.

‘‘எம்ஜிஆர், என்டிஆர், ஜெயலலிதான்னு 3 பேருக்கும் உங்களுக்கும் ஆதிகால நெருக்கம் இருக்கு. அவங்க முதல்வர் ஆன பிறகு அவங்களை சந்திச்சீங்களா?’’ என்று கேட்டேன்.

‘‘என்டிஆர், எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் உயர்ந்த நிலைக்கு வந்துட்டாங்க. நானோ 1956-லேயே சினிமாவுக்கு முழுக்குப் போட்டு, அவங்க சம்பந்தப்பட்ட புகைப்படங்களை குப்பையில தூக்கி் வீசிட்டேன். சினிமாவையே மறந்துட்டேன். என் சகோதரி குடும்பம் சினிமா தொடர்புல, பழைய நட்புல இருந்தாங்க. அவங்களும் இறந்துட்டாங்க. இதையும் நண்பர்கள் வற்புறுத்தி, இப்ப நீங்க வந்து கேட்டதால இதைப் பத்தி பேசறேன்’’ என்றவர், அப்படியே கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார். அங்கிருந்து நாம் விடைபெற்றோம்.

Related Stories

No stories found.