எழுத்தாளரை கொண்டாடிய எம்ஜிஆர் - சிவாஜி: ஆரூர்தாஸ்க்கு அன்புடன் சேர்ந்த பரிசுகள்!

எம்ஜிஆர் - ஆரூர்தாஸ் - சிவாஜி
எம்ஜிஆர் - ஆரூர்தாஸ் - சிவாஜிஆரூர்தாஸை மதித்த எம்ஜிஆர், சிவாஜி; இருவரும் தனிப்பட்ட முறையில் கொடுத்த பரிசுகள்!

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ஏகப்பட்ட படங்களுக்கு தன் வசனங்களால் புத்துயிர் கொடுத்து, கதாபாத்திரங்களுக்கும் கதைகளுக்கும் கனமும் பேரழகும் சேர்த்த எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் ஆரூர்தாஸ். இந்தப் பக்கம் எம்ஜிஆர் படங்களுக்கு வசனம் எழுதினார்; அந்தப் பக்கம் சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுதினார். தேவர் பிலிம்ஸ், ஏவி.எம். முதலான பல நிறுவனங்களின் படங்களுக்கும் வசனங்கள் எழுதினார்.

சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதுகிற வாய்ப்பு மட்டும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. ஜெமினி கணேசனும், சாவித்திரியும் ஆரூர்தாஸ் மீது அன்பும், அவர் எழுத்துகளின் மீது நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள். ‘பாசமலர்’ படம் எடுக்க முடிவு செய்யப்பட்டிருந்த தருணம் அது. ஜெமினி கணேசனும் சாவித்திரியும் சிவாஜியிடம் சென்று, ‘ஆரூர்தாஸ் நல்லா எழுதுவாரு. அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என்று சிவாஜியிடம் சொல்ல, சிவாஜி பீம்சிங்கிடம் சொல்ல, பிறகு சிவாஜியும் பீம்சிங்கும் ஆரூர்தாஸை அழைத்துப் பேச, ‘பாசமலர்’ படத்தில் இருந்து சிவாஜி படங்கள் பலவற்றுக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதினார்.

நடிகர்திலகத்துக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. முக்தா சீனிவாசனை, ‘சீனா’ என்றுதான் அழைப்பார். கே.பாலாஜியை ‘பகதூர்’ என்று செல்லமாக அழைப்பார். அதேபோல், ஆரூர்தாஸை ‘ஆரூரான்’ என்றுதான் சிவாஜி அழைத்து வந்தார். அந்த அளவுக்கு நட்பு பலப்பட்டது.

தாயைக்காத்த தனயன்
தாயைக்காத்த தனயன்

‘’ஒரே சமயத்தில் எம்ஜிஆர் படங்களுக்கும் சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுதியது நானாகத்தான் இருப்பேனென்று நினைக்கிறேன். இரண்டுபேருமே என் மீது அளவற்ற பிரியம் வைத்திருந்தார்கள். 1962ம் ஆண்டு, எம்ஜிஆரின் ‘தாயைக்காத்த தனயன்’ படத்துக்கும் வசனம் எழுதினேன். அதேபோல், சிவாஜியின் ‘படித்தால் மட்டும் போதுமா?’ படத்துக்கும் வசனம் எழுதினேன். இதிலொரு சுவாரஸ்யம்... இரண்டு படங்களும் சொல்லிவைத்தது மாதிரி ஒரே நாளில் ரிலீஸ் ஆனது’’ என்று ஆரூர்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

எம்ஜிஆரின் ‘தாயைக்காத்த தனயன்’ படமும் வெற்றிப் படமாக அமைந்தது. அதேபோல், சிவாஜி நடித்த ‘படித்தால் மட்டும் போதுமா’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் வேறு. ஆனால் சென்னை ஏரியா விநியோக உரிமையை, ‘தாயைக்காத்த தனயன்’ படத்துக்கு எம்ஜிஆர் பிக்சர்ஸும் ‘படித்தால் மட்டும் போதுமா?’ படத்தை சிவாஜி பிலிம்ஸும் வாங்கி ரிலீஸ் செய்தன.

இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. 100 நாட்களைக் கடந்து ஓடின. மவுண்ட் ரோடு பிளாசா தியேட்டரில் ‘தாயைக் காத்த தனயன்’ வெளியானது. மிட்லாண்ட் தியேட்டரில், ‘படித்தால் மட்டும் போதுமா?’ வெளியானது. நூறு நாட்களைக் கடந்தும் இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர் கூட்டம் அலைமோதியது.

’’அன்றொருநாள் காலை எம்ஜிஆரின் அடுத்தப் படத்துக்கு வசனம் எழுதச் சென்றேன். எம்ஜிஆர் என்னை அழைத்தார். ‘’போன படம் (தாயைக் காத்த தனயன்) வெற்றி அடைஞ்சதுக்கு நான் உனக்கு பரிசே தரலியே. உனக்கு என்ன வேணும் கேளு’’ என்று கேட்டார். நான் கூச்சப்பட்டு, ‘’அதெல்லாம் எதுவும் வேணாம்ணே. உங்க அன்பு இருந்தா அதுவே போதும்ணே’’ என்று சொன்னேன். ‘’அப்படியா? சரி நான் பாத்துக்கறேன்’’ என்று சொல்லிவிட்டார் எம்ஜிஆர்.

சிவாஜி
சிவாஜி

அன்று காலையில் எம்ஜிஆர் படத்துக்கு எழுதிவிட்டு, மதியத்தில் சிவாஜியின் படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றேன். சிவாஜி என்னை தனியே அழைத்தார். ‘’டேய் ஆரூரான்... ‘பாசமலர்’ நல்லாப் போச்சு. அதுக்கும் உனக்கு விசேஷமா எதுவும் தரலை. இப்போ, ‘படித்தால் மட்டும் போதுமா?’வும் நல்லா ஓடிருக்கு. உனக்கு என்ன வேணுமோ கேளு. அண்ணன்கிட்ட இருந்தா உடனே குடுத்துடுறேன். இல்லேன்னா, வாங்கிட்டு வந்து குடுக்கறேன்’’ என்று சிவாஜி சொன்னார். எம்ஜிஆரிடம் சொன்ன பதிலையே சிவாஜிக்கும் சொன்னேன். ‘’அட ஆரூரா... அன்புதான் நிறைய இருக்குதே. வேறென்ன வேணும்’’ என்று அடிக்காத குறையாக கேட்டார். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்’’ என்று கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ஆரூர்தாஸ்.

இரண்டு நாள் ஓடியிருக்கும். எம்ஜிஆர் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து ஆரூர்தாஸுக்கு அழைப்பு. உடனே வரும்படி அழைத்தார்கள். ஆரூர்தாஸும் சென்றார். அங்கே எம்ஜிஆர் காத்திருந்தார். மிகப்பெரிய வெள்ளித்தட்டு. அதன் நான்கு மூலைகளிலும் தங்கத்தகடுகள் பொருத்தப்பட்டிருந்தன. தட்டுக்கு நடுவே எம்ஜிஆர் பிக்சர்ஸ் ‘தாயைக் காத்த தனயன்’ வெற்றிக்கு ஆரூர்தாஸ் அவர்களுக்கு அன்பளிப்பு’ என்று பொறிக்கப்பட்டிருந்தது. அந்தத் தட்டினை ஆரூர்தாஸுக்கு வழங்கினார் எம்ஜிஆர்.

மூன்றாவது நாள்... சிவாஜி பிலிம்ஸ் கம்பெனியில் உடனே வரச் சொல்லி அழைத்திருந்தார்கள். ஆரூர்தாஸும் சென்றார். ஒரு சிங்கம் போல சிவாஜி அங்கே அமர்ந்திருந்தார். மூன்றரை சவரன் எடை கொண்ட, ஒரு உள்ளங்கையை விட அகலமான, தங்கப்பதக்கம் ஒன்றை ஆரூர்தாஸுக்கு வழங்கிவிட்டு, அப்படியே அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார் சிவாஜி. அந்தப் பதக்கத்தில், சிவாஜி பிலிம்ஸ் லோகோ உடன்... ‘படித்தால் மட்டும் போதுமா’ - ’100வது நாள் வெற்றிவிழா’ என்று பொறிக்கப்பட்டிருந்தது.

’’எம்ஜிஆரும் சிவாஜியும் சரி... இந்தப் பரிசுகளைக் கொடுத்து தங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை, அந்த இரண்டு மேதைகளின் படங்களுக்கும் எழுதுகிற வாய்ப்பு கிடைத்ததும், அவர்களிடம் நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு கிடைத்ததும் என் வாழ்வின் ஆகச்சிறந்த பரிசாக நான் நினைக்கிறேன்’’ என்று நெகிழ்ந்து தெரிவித்துள்ளார் ஆரூர்தாஸ்.

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில், எழுத்தாளர்களை எப்படியெல்லாம் கெளரவித்திருக்கிறார்கள் என்பதற்கு இவையெல்லாம் ‘சோறுபத’ உதாரணங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in