கூடுதல் லாபத்தை திருப்பித் தந்த எம்ஜிஆர்; வாங்க மறுத்த நாகிரெட்டி!

தமிழ் சினிமாவில் இப்படியும் நடந்திருக்கிறது!
கூடுதல் லாபத்தை திருப்பித் தந்த எம்ஜிஆர்; வாங்க மறுத்த நாகிரெட்டி!

ஒரு படம் எடுப்பது மிகப்பெரிய விஷயமல்ல. அந்தப் படத்தை எந்த மனவருத்தமும் இல்லாமல், எடுத்து முடிக்கவேண்டிய சிக்கல்கள் இன்றைக்கு சினிமாத் துறையில் அதிகரித்துவிட்டன. தயாரிப்பாளர் ஒரு பக்கம், இயக்குநருக்கு ஒரு சிந்தனை, நடிகருக்கென ஒரு பாதை என மூன்று விஷயங்களும் கைகோத்து ஒரு படம் எடுத்து முடிப்பதென்பதே இப்போது சாதனையாகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்தில் சினிமாத்துறையில் நிகழ்ந்தவையெல்லாமே அற்புதம்; ஆச்சரியம்; அதிசயம்!

சின்னச்ச்சின்ன வேடங்களில் நடித்து, நாயகனாக உருவெடுத்தவர் எம்ஜிஆர். நாயகனாகிய பிறகும் படங்கள் பெரிதாகப் போகாமல், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, தனக்கென மார்க்கெட் வேல்யூவை உருவாக்கிக் கொண்டார். ஒரு படத்தில் தான் நடிப்பதென்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராமல் பார்த்துக் கொள்வார் எம்ஜிஆர். செலவுகளை இழுத்துவிடமாட்டார்.

அதேபோல், இயக்குநருக்கு என்ன தேவையோ அவற்றை தன் நடிப்பில் மட்டுமன்றி சண்டை மற்றும் பாடல் காட்சிகளிலுமாக வழங்கிவிடுவார். இதைவிட முக்கியமாக, எம்ஜிஆர் நடித்த படங்களில் நடிக்கும் துணை நடிகர்கள் தொடங்கி லைட்மேன்கள் வரைக்கும் சம்பளப் பட்டுவாடாவெல்லாம் முடிந்ததா இல்லையா என்பதையெல்லாம் அறிந்து வைத்துக் கொள்வார்.

சம்பளம் கிடைக்காத பட்சத்தில், தயாரிப்பாளரிடம் சென்று எல்லோருக்குமான சம்பளப் பாக்கியை தரச் செய்துவிடுவார் எம்ஜிஆர். ஒருவேளை தயாரிப்பாளருக்கு பணச்சிக்கல் என்று தெரிந்தால், தன் சம்பளத்தைப் பிறகு வாங்கிக் கொள்ளவும் முன்வருவார். ’மீதமுள்ள எனக்கான பாக்கியை தரவே வேண்டாம்’ என்றும் சொல்லியிருக்கிறார். சில தருணங்களில், தனது வீட்டிலிருந்து தருவித்த பணத்தை தயாரிப்பாளர் கைகளால் அனைத்துக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு சம்பளமாக கொடுக்கச் செய்த சம்பவங்களும் நிறையவே நடந்திருக்கின்றன.

‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் எம்ஜிஆர் செய்த செயல் புதுமையானது. ‘இப்படியெல்லாம் கூட இருப்பார்களா?’ என்று நெகிழச் செய்கிற சம்பவம் இது.

அதற்கு முன்னதாக சிவாஜி குறித்து சிறு நினைவூட்டல்.

முக்தா பிலிம்ஸ் கம்பெனிக்கு பல படங்கள் கொடுத்திருக்கிறார் சிவாஜி. ‘நிறைகுடம்’ எனும் மிகக்குறைந்த பட்ஜெட் படத்தில் சிவாஜி நடித்துக் கொடுத்தார். அதற்கென ஒரு சம்பளமும் வழங்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிக வசூலான நிலையில், முக்தா சீனிவாசனும் அவர் அண்ணன் முக்தா ராமசாமியும் சிவாஜி வீட்டுக்கு வந்து ஒரு கவரைக் கொடுத்தார்கள்.

அதில் தமிழகம் முழுவதும் ‘நிறைகுடம்’ படத்தை விநியோகஸ்தர்களுக்கு விற்ற தொகையின் கணக்கும் வசூல் செய்திருந்த கணக்கும் இருந்தன. ‘’யோவ் சீனா, இந்த லிஸ்ட்டையெல்லாம் ஏன் எங்கிட்ட காட்றே?’’ என்று சிவாஜி கேட்டார். இன்னொரு கவரைக் கொடுத்தார் முக்தா சீனிவாசன். அதில் குறிப்பிட்ட தொகை இருந்தது. சிவாஜிக்கு குழப்பம்.

‘’இந்தப் படத்துக்கு குறைச்சலாத்தான் சம்பளம் கொடுத்தோம். ஆனா நல்லாவே லாபம் வந்திருக்கு. அதனால இப்போ நீங்க என்ன சம்பளம் வாங்கறீங்களோ, அந்த சம்பள பாக்கிதான் இது’’ என்று முக்தா ராமசாமி விளக்கம் கொடுக்க, கோபமாகிவிட்டார் சிவாஜி. ‘’அந்தச் சம்பளத்துக்கு ஒத்துக்கிட்டு நடிச்சது நடிச்சதுதான். கூடுதலா ஒரு ரூபா கூட வாங்கமாட்டேன்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் சிவாஜி. அவர்கள் கொடுக்க, சிவாஜி மறுக்க... இனிய இழுபறியின் ஒரு கட்டத்தில், ‘’சரி, நான் பணத்தை வாங்கிக்கிறேன். ஆனா ஒரு கண்டிஷன்; இது ‘நிறைகுடம்’ படத்துக்காக வாங்கிக்கலை. அடுத்து நாம சேர்ந்து செய்யப் போற படத்துக்காக வாங்கிக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டார். அந்த தருணத்தில் முக்தா சகோதரர்கள் சிவாஜியின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டனர்.

இப்போது ‘எங்க வீட்டு பிள்ளை’க்கு வருவோம்.

தெலுங்கில் என்.டி.ஆரை வைத்து எடுத்த ‘ராமுடு பீமுடு’ மிகப்பெரும் வசூலானதை அடுத்து, அதையே தமிழில் ’எங்க வீட்டு பிள்ளை’ என்று எடுத்தார் திரையுலக ஜாம்பவான் நாகிரெட்டியார். எம்ஜிஆர், சரோஜாதேவி, நம்பியார், நாகேஷ், ரங்காராவ், பண்டரிபாய் முதலானோர் நடித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

’எம்ஜிஆர் பிக்சர்ஸ்’ என்றொரு நிறுவனம் எம்ஜிஆர் வைத்திருந்தார் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். பெரும்பாலும் அவருடைய படங்களை சென்னை முதலான சில ஏரியாக்களுக்கு வாங்கி விநியோகித்து வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் எம்ஜிஆர். அதன் பின்னர் வந்த கமல், ரஜினி கூட, விஜய் முதலான நடிகர்கள் கூட சம்பளம் ப்ளஸ் இந்த ஏரியா டிஸ்டிரிபியூஷன் என்று ஆரம்பத்திலேயே பேசி எழுதி கையெழுத்து போட்டு ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். இதெல்லாம் சினிமாவில் வழக்கம்தான்.

அப்படித்தான், விஜயா வாஹினி கம்பைன்ஸ் சார்பில் நாகிரெட்டியார் - சக்ரபாணி தயாரித்த ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தின் சென்னை ஏரியா உரிமையை எம்ஜிஆர் பிக்சர்ஸ் கேட்டது. ‘எம்ஜிஆரே கேட்கிறார்’ என்று, மற்றவருக்குத் தரும் தொகையை விட சற்றே குறைத்துக் கொண்டு எம்ஜிஆர் பிக்சர்ஸ்க்கு ‘எங்க வீட்டு பிள்ளை’யின் சென்னைக்கான விநியோக உரிமை கொடுக்கப்பட்டது.

தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படம் ஏழு தியேட்டர்களில் வெள்ளிவிழா என்று சொல்லப்படும் 175 நாட்கள் கண்டதென்றால், அது ‘எங்க வீட்டு பிள்ளை’தான். திருச்சி ஜூபிடரில் 236 நாட்கள் ஓடி ரிக்கார்டு செய்தது இந்தப் படம்.

சென்னையிலும் செம கலெக்‌ஷன். அதிரிபுதிரியான வசூல். ‘இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுக்கும்; வசூலைக் குவிக்கும்’ என்று எம்ஜிஆர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ‘இந்தத் தொகைக்கு படத்தை வாங்கி விநியோகித்தால், இத்தனை சதவிகிதம் லாபம் வரும்’ என்றொரு கணக்கு உண்டு. ஆனால் அந்த சதவிகிதக் கணக்கையெல்லாம் கடந்து, எம்ஜிஆருக்கு மிகப்பெரிய தொகை லாபமாகக் கிடைத்தது.

வியந்து போன எம்ஜிஆர், தான் நினைத்ததை விட லாபமாக வந்த தொகையைப் பிரித்தார். கிட்டத்தட்ட அது மூன்று படங்கள் ஓடினால் கிடைக்கக் கூடிய லாபத் தொகையாக இருந்தது. அந்தத் தொகையை நாகிரெட்டியாருக்கு அனுப்பிவைத்தார். ‘’இந்தப் படம் நான் வாங்கினதை விட, நான்கைந்து மடங்கு லாபத்தைக் கொடுத்திருக்கு. அதனால எனக்குன்னு, குறிப்பிட்ட லாபத்தை மட்டும் எடுத்துக்கிட்டேன். மத்ததை உங்ககிட்ட கொடுக்கறதுதான் முறை. வைச்சிக்கோங்க’’ என்று எம்ஜிஆர் சொன்னார். ஆனால் நாகிரெட்டியார் என்ன செய்தார் தெரியுமா? ‘’என்னதான் இருந்தாலும் நீங்க முதல் போட்டு படத்தை ரிலீஸ் பண்ணிருக்கீங்க. அதனால நஷ்டம் வந்தாலும் உங்களைச் சேர்ந்தது. லாபம் வந்தாலும் அது உங்களுக்குத்தான். இதுல நான் எங்கே வந்தேன்? அதனால பணத்தை நீங்களே வைச்சிக்கங்க’’ என்று நாகிரெட்டியார் மறுத்துவிட்டார்.

அங்கே, சிவாஜிக்கும் முக்தா சீனிவாசனுக்கும் நிகழ்ந்தது மாதிரிதான், இங்கே எம்ஜிஆருக்கும் நாகிரெட்டிக்கும் வாக்குவாதம். ‘’நீங்க வைச்சிக்கங்க’’ என்கிறார் எம்ஜிஆர். ‘’இல்ல இல்ல... நீங்களே வைச்சிக்கங்க’’ என்கிறார் நாகிரெட்டியார். கடைசியில் சின்னவர் என்று கொண்டாடிப் போற்றப்பட்ட எம்ஜிஆரின் பேச்சை நாகிரெட்டியால் தட்டமுடியவில்லை. அதேசமயம், நாகிரெட்டிக்கு பணத்தை வாங்கிக்கொள்ளவும் மனம் இடம்தரவில்லை.

இறுதியாக நாகிரெட்டியார் எம்ஜிஆரிடம், ‘’இங்கே பாருங்க சின்னவரே... இந்தப் பணம் எனக்கு வேணாம். உங்களுக்கும் வேணாம். ஆனா, சின்னவர்கிட்ட போனா நமக்கு உதவி செய்வார்னு உங்களை நம்பி, உங்ககிட்ட எத்தனையோ பேர் வர்றாங்க. நீங்களும் கொஞ்சம் கூட கணக்கெல்லாம் பாக்காம, வள்ளல் போல வாரிவாரிக் கொடுத்துக்கிட்டே இருக்கீங்க. அதனால இந்தப் பணத்தை நீங்களே வைச்சிக்கங்க. அள்ளியள்ளிக் கொடுக்கற மனசு உங்களுக்குத்தான் இருக்கு. உங்ககிட்ட உதவின்னு வர்றவங்களுக்கு இந்தப் பணத்தை கொடுங்க சின்னவரே..’’ என்று எம்ஜிஆர் கொடுத்த பணத்தை எம்ஜிஆரிடமே திருப்பிக் கொடுத்தார் தயாரிப்பாளர் நாகிரெட்டியார்!

சினிமாவுக்குள் இருக்கிற கதைகளும் காட்சிகளும் மட்டுமே அதிசயமும் ஆச்சரியமும் கொண்டதல்ல. பல தருணங்களில், எம்ஜிஆர், சிவாஜியைப் போன்றவர்களும்; முக்தா சீனிவாசன், நாகிரெட்டியாரைப் போன்றவர்களும் கட்டிக்காத்து வளர்த்த தமிழ்த் திரையுலகத்தில், ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் கொடுத்திருக்கின்ற இப்படியான நிஜங்கள் ஏராளம்!

நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே அன்பும் வேண்டும்; நேர்மையும் வேண்டும். நேர்மை இருக்குமிடத்தில் அன்பு தாமாகவே வந்துவிடும் என்பதற்கு வள்ளல் எம்ஜிஆரின் குணமும், திரையுலக ஜாம்பவான் நாகிரெட்டியாரின் குணமுமே எடுத்துக்காட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in