சத்யா மூவீஸ் படத்தை தள்ளிப்போட்டதற்காக, ஏவிஎம்-ல் கூடுதல் சம்பளம் வாங்கிய எம்ஜிஆர்: அந்தப் பணத்தை என்ன செய்தார்?

சத்யா மூவீஸ் படத்தை தள்ளிப்போட்டதற்காக, ஏவிஎம்-ல் கூடுதல் சம்பளம் வாங்கிய எம்ஜிஆர்: அந்தப் பணத்தை என்ன செய்தார்?

ஏவி.எம். தயாரிப்பில் எத்தனையோ நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சிவாஜி, கமல் முதலான எண்ணற்ற நடிகர்களையும் நடிகைகளையும் அறிமுகப்படுத்திய பிரம்மாண்டமான ஏவி.எம். நிறுவனம், எம்ஜிஆரை வைத்துப் படமெடுக்க முன்வந்தது. எம்ஜிஆரும் ஒப்புக்கொண்டார். அதன்படி உருவானதுதான் ‘அன்பே வா.’

படத்தின் கதையைக் கேட்டதும் எம்ஜிஆர் ரொம்பவே யோசித்தார். ‘’நமக்கென்று ஒரு பாணி இருக்கும். அதெல்லாம் இல்லையை இதில்’’ என்று மெய்யப்பச் செட்டியாரிடம் கேட்டார். ‘’இந்தக் கதைக்கு நீங்கள்தான் மிகச்சரியாக இருப்பீர்கள். உங்களுக்கும் உங்கள் ரசிகர்களுக்கும் இந்தப் படம் புதியதொரு அனுபவத்தைக் கொடுக்கும்’’ என்று ஏவி.எம். தரப்பில் விளக்கமும் உறுதியும் தரப்பட்டது.

அதேபோல், சிம்லாவில் படப்பிடிப்பு என்பதும் தமிழ் சினிமாவுக்கு புதியதொரு லொகேஷன். வண்ணப்படமாகவும் உருவாகிய இந்தப் படத்தில், எம்ஜிஆர், சரோஜாதேவி, நாகேஷ், மனோரமா, டி.ஆர்.ராமச்சந்திரன், டி.பி.முத்துலட்சுமி, அசோகன் முதலானோர் நடித்தார்கள். கவிஞர் வாலி பாடல்களை எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். நடிகர் திலகம் சிவாஜியை வைத்து ரசித்து இயக்கியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1966ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. 1965ம் ஆண்டுவாக்கில், படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வருடத்தில்தான் எம்ஜிஆர் - சரோஜாதேவி நடித்து, சாணக்யா இயக்கி, விஜயா வாஹினி ராமாநாயுடு - சக்ரபாணி தயாரித்த ‘எங்க வீட்டு பிள்ளை’ வெளியானது. அதாவது 1965ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கலுக்கு வெளியானது ‘எங்க வீட்டு பிள்ளை’. இதன் பிறகுதான் ‘அன்பே வா’ படத்துக்கு ஒப்பந்தமாகி, நடித்துக்கொண்டிருந்தார் எம்ஜிஆர்.

அது செப்டம்பர் மாதத் தொடக்கம். அப்போது ஏவி.எம். செட்டியாருக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. ‘’எங்க வீட்டு பிள்ளை போல, இந்த ‘அன்பே வா’ படத்தையும் பொங்கல் திருநாளில் ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்குமே. அதிலும் எம்ஜிஆர் - சரோஜாதேவி. இதிலும் அவர்களே நடிக்கிறார்கள். அதுவும் கலர்ப்படம். இதுவும் கலர்ப்படம். எம்ஜிஆரிடம் இதுசம்பந்தமாகப் பேசி, செப்டம்பர் மாதம் முழுவதும் கால்ஷீட் கொடுத்து உதவும்படி கேளுங்கள்’’ என்று மெய்யப்பச் செட்டியார் சொல்ல, ஏவி.எம்.சரவணன், எம்ஜிஆரிடம் இதுகுறித்துப் பேசினார்.

‘’அடடா... ஆர்.எம். வீரப்பனின் தயாரிப்பிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் படத்தைப் பொங்கலுக்கு வெளியிடுவதாக அவர் திட்டமிட்டிருக்கிறார். என்னதான் இருந்தாலும் அவர்தான் தயாரிப்பாளர். அவரிடம் கேட்டுப்பாருங்களேன்’’ என்று எம்ஜிஆர் சொன்னார். அவர் நினைத்திருந்தால், ‘சத்யா மூவீஸ்’ ஆர்.எம்.வீரப்பனுக்கு ஒரு போன் போட்டு, ‘நம்ம படத்தைக் கொஞ்சம் தள்ளி ரிலீஸ் பண்ணலாம்’’ என்று உத்தரவே போட்டிருக்கலாம். ஆனால், என்னதான் நண்பராக இருந்தாலும், எம்ஜிஆர் அந்த நிலையில் ஆர்.எம்.வீரப்பனை ஒரு தயாரிப்பாளராகவே பார்த்து உரிய மரியாதையை அளித்தார்.

இதன் பிறகு, ஏவி.எம். சரவணன், ஆர்.எம்.வீரப்பனைச் சந்தித்து விவரம் சொன்னார். ‘’கடந்த வருடம் பொங்கலுக்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ வந்தது போல, வருகிற பொங்கலுக்கு ‘அன்பே வா’ வந்தால் நன்றாக இருக்குமே என்று அப்பச்சி (மெய்யப்பச் செட்டியார்) ஆசைப்படுகிறார். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்’’ என்று கேட்டார். ஒருநிமிடம் கூட யோசிக்காமல், ‘’அப்பச்சியோட ஆசையா இது. ஏவி.எம். எவ்ளோ பெரிய நிறுவனம். எங்கிட்ட போய் இதைக் கேக்கறீங்களே! உங்க படத்தை தாராளமா பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணுங்க. அதுக்குத் தகுந்தது போல, செப்டம்பர்ல, சின்னவர் (எம்ஜிஆர்) எங்களுக்குக் கொடுத்த கால்ஷீட்டை நீங்க எடுத்துக்கோங்க’’ என்று சொன்னார் ஆர்.எம்.வீரப்பன்.

அதன்படி செப்டம்பர் மாதம் முழுவதும் எம்.ஜி.ஆர். ‘அன்பே வா’ படத்தில் நடித்துக் கொடுத்து, டப்பிங் பேசியும் முடித்துக் கொடுத்தார். ஏவி.எம். நினைத்தது போலவே, 1966ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக, ‘அன்பே வா’ வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதேபோல், சத்யா மூவீஸ் நிறுவனத்துக்காக,எம்ஜிஆர் நடித்து ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘நான் ஆணையிட்டால்’ திரைப்படம், பிப்ரவரி 4ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது.

செப்டம்பார் மாதம் கால்ஷீட் மாற்றிக் கொடுத்து நடித்துக் கொடுத்ததற்காக, எம்ஜிஆர் ஏவி.எம். நிறுவனத்திடம் கூடுதல் சம்பளமாக 25 ஆயிரம் கேட்டார். அவர்களும் வழங்கினார்கள். ஆனால், சிம்லாவில் இருக்கும்போதே இந்தப் பணத்தை எம்ஜிஆர் கேட்க, உடனடியாக ஏற்பாடு செய்து அத்தொகை எம்ஜிஆருக்குக் கொடுக்கப்பட்டது.

‘அன்பே வா’ படத்துக்காக, எம்ஜிஆர் கூடுதல் சம்பளமாக வாங்கிய 25 ஆயிரம் ரூபாயை என்ன செய்தார் தெரியுமா? அங்கே இருந்த ராணுவ வீரர்களின் நிவாரண நிதிக்கு வழங்கினார்! அதுதான் எம்ஜிஆரிஸம். அவர்தான் எம்ஜிஆர்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in