’சிங்’ வேடத்தில் எம்ஜிஆர் அசத்திய ‘சங்கே முழங்கு!’

சங்கே முழங்கு
சங்கே முழங்கு

தமிழ் சினிமாவில், திரையில் பார்க்கிறபோதே வைட்டமின்கள் மற்றும் பாஸிடீவ் சிந்தனைகளை நமக்குள் கடத்தி, உற்சாகப்படுத்துகிற ‘பூஸ்டர்’ மக்கள் திலகம் எம்ஜிஆர். அவர் நடித்த எல்லாப் படங்களிலுமே, இந்த போஷாக்குகளை நமக்குக் கடத்திவிடுவார். இதுதான் அவர் வெற்றிக்கான முதல் மந்திரம். அப்படி அவர் நாதம் எழுப்பி அறைகூவல் விடுத்ததுதான் ‘சங்கே முழங்கு’.

சிறுவயது அண்ணனும் தங்கையும் அனாதையாக வளர்வார்கள். ரயிலில் அவர்களின் உதவியால், வக்கீல் ஒருவரின் மனைவிக்கு நகை பறிபோகாமல் இருக்கும். அதனால் அவர்களை, தன் வீட்டுக்கு அழைத்துவருவார் அந்தப் பெண்மணி. ஆனால், வக்கீல் ஏற்றுக்கொள்ளமாட்டார். அவர்களை சத்திரத்தில் விடும்படி சொல்லிவிடுவார். அந்தச் சத்திரத்தில், கொள்ளையர் கூட்டம் ஒன்று காரில் வரும் மிகப்பெரிய வைர நகைக்கடை வியாபாரியிடம் கொள்ளையடிப்பது பற்றி பேசும். இதைக் கேட்ட அந்தச் சிறுவனும் சிறுமியும் காவல்துறைக்கு தகவல் கொடுப்பார்கள். அதனால், கொள்ளையர்களிடம் இருந்து அவர் தப்பிப்பார். அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து, தன் பிள்ளைகளைப் போலவே வளர்ப்பார். அவர்களும் இனிதே வளருவார்கள். அண்ணனின் பெயர் முருகன். தங்கையின் பெயர் சிவகாமி.

சிங்கப்பூரிலும் இங்குமாக தொழில் நடத்தி வரும் அந்த முதலாளிக்கு, மேனேஜர் ஒருவர் இருப்பார். அவர் கொள்ளையடித்துக் கொண்டுவரப்படும் வைரங்களையும் நகைகளையும் விற்றுக் காசு பார்ப்பார். இதற்கெல்லாம் அந்த வக்கீல் ஐடியா கொடுத்து உதவுவார். மேனேஜரின் ஊழல்களை எல்லாம் முருகன் தன் வளர்ப்புத் தந்தைக்கு தெரிவிக்க, உடனே இந்தியாவுக்கு வருவார் தந்தை.

ஏற்கெனவே அவர் வெற்றுப் பேப்பர்களிலும் செக்குகளிலும் பத்திரங்களிலும் மேனேஜரிடம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருப்பார். இந்த நிலையில், இந்தியாவுக்கு வந்த அவருக்கு அன்றிரவு முருகன் உணவு எடுத்துவரச் செல்வார். இதைத் தெரிந்து கொண்ட மேனேஜரும் வக்கீலும் அந்த உணவில் வைரத்துகள்களைப் போட்டுவிட, அந்த உணவைச் சாப்பிட்டவர் இறந்துபோவார். கொலைப்பழி முருகன் மீது விழும். மேலும், ‘’நீ தப்பி ஓடிவிடு. அப்போதுதான் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கமுடியும்’’ என்று வக்கீல் சொல்ல, அதன்படியே தலைமறைவாவார் முருகன். இது மேலும் அவர் குற்றத்தைச் செய்ததற்கான ஆதாரமாகப் பார்க்கப்படும்.

இதே சந்தர்ப்பத்தில், லதா என்பவரைக் காதலிப்பார் முருகன். அவரின் அப்பா சிங் வம்சத்தைச் சேர்ந்தவர். ரயிலில் மாறுவேடத்தில் வரும் முருகன், லதாவின் அப்பா தவறவிட்டுச் சென்ற பணப்பையைக் கொண்டுவந்து கொடுப்பார். கொலைப்பழி விவரம் அவர்களுக்குத் தெரியவரும். ‘’எந்த காவல்துறை உன்னை தேடிக்கொண்டிருக்கிறதோ, அதே காவல்துறையில் சேர்ந்தால்தான் உண்மையான குற்றவாளிகளை நீ கண்டுபிடிக்கமுடியும்’’ என லதாவின் அப்பா சொல்வார். மேலும், தன் உறவினரின் பெயரான கிருபாசிங் எனும் பெயரில் அவருக்கு எல்லா அத்தாட்சிகளையும் பெற்று, தேர்வெழுத வைப்பார் சிங். கிருபா சிங் எனும் பெயரில் காவல்துறையிலும் சேருவார் முருகன். வைர வியாபாரியைக் கொன்ற முருகனைத் தேடும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்படும். அதாவது அவரையே தேடச் சொல்லி அவரிடம் பொறுப்பைக் கொடுப்பார்கள்.

இப்போது, அந்த மேனேஜர், முதலாளி கையெழுத்திட்ட வெற்றுப் பேப்பர்களை நிரப்பி, மொத்த சொத்துகளையும் அபகரித்து, கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அவருக்கு உதவுவது போல், கிருபா சிங் சென்று உண்மைகளைக் கண்டறிந்து, ’’என் வளர்ப்பு அப்பாவை நான் கொல்லவில்லை. இவர்கள் செய்த சதியே காரணம்’’ என்பதை கோர்ட்டில் நிரூபித்து விடுதலையாவார். மேனேஜரும் வக்கீலும் ஜெயிலுக்குப் போவார்கள்.

எம்ஜிஆர்தான் முருகன். பிறகு கிருபா சிங். முருகனின் தங்கை சிவகாமியாக, குமாரி நிர்மலா. முதலாளியாகவும் வளர்ப்பு அப்பாவாகவும் வி.எஸ்.ராகவன். மேனேஜர் நடராஜனாக அசோகன். வக்கீல் வராகசாமியாக வி.கே.ராமசாமி. லதாவாக லட்சுமி. அவரின் அப்பாவாக டி.கே.பகவதி. வி.கே.ராமசாமியின் மனைவியாக ஜி.சகுந்தலா. எம்ஜிஆரின் நண்பராக சோ.

தகதகவென வண்ணப்படமாக வந்து, காட்சிகளும் கண்களைப் பறித்தன. போதாக்குறைக்கு எம்ஜிஆர், லட்சுமியின் காஸ்ட்யூம்களும் கவனம் ஈர்த்தன. சிங் வேடத்தில் எம்ஜிஆர் நடித்தது புதுமையாகவே பார்க்கப்பட்டது. ‘மாட்டுக்கார வேலன்’ படத்துக்குப் பிறகு, எம்ஜிஆருடன் லட்சுமி ஜோடி சேர்ந்தார், இந்தப் படத்தில்!

அசோகனும் வி.கே.ராமசாமியும் சேர்ந்து செய்யும் சதித்திட்டங்கள் அனைத்தும் பரபரப்பைக் கூட்டுவதற்கு உதவின. அதிலும் அசோகனின் நடிப்பும் ‘முருகன்..’ என்று ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் சொல்லுவது போல, இதில் வேறொரு ஸ்டைலில் அழுத்தம் கொடுத்துச் சொல்லுவதும் அசத்தலாக இருக்கும். அதேபோல், ‘’அந்த முருகனை தெருவுக்குக் கொண்டு வந்து நடக்கவிடலேன்னா... நான்... நடராஜன் இல்ல நடராஜன் இல்ல...’’ என்று கைவிரல்களை நடப்பது போல் காட்டி நடித்த இடத்தில் அப்ளாஸ் அள்ளியது.

கண்ணதாசன் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் இசையமைத்தார். எல்லாப் பாடல்களும் இனிமையைச் சேர்த்து குழைத்துக் கொடுத்தன. நடன இயக்குநராக தங்கப்பன் மாஸ்டர் பணியாற்ற, அவரின் உதவியாளராகப் பணியாற்றினார் உலக நாயகன் கமல்ஹாசன்.

படத்தில், எம்ஜிஆர் அணிந்திருக்கும் ஆடைகள், லட்சுமி அணிந்திருக்கும் ஆடைகள், படத்தின் வீட்டின் சுவர்கள், சோபாக்கள், திரைச்சிலைகள் என்று பல இடங்களில், கறுப்பு சிவப்பு நிறங்கள் பளிச்சிடும். அதேபோல, நாளிதழைப் படிப்பார் எம்ஜிஆர். அதில், ‘திமுக அமோக வெற்றி’ என்று முதல் பக்கச் செய்தி இருக்கும். அதேபோல், எம்ஜிஆர், அறிஞர் அண்ணாவின் புத்தகத்தைப் படிப்பது போல் காட்சி இருக்கும். இப்படி பல இடங்களில், எம்ஜிஆர், தன் எண்ணத்தையும் கட்சியையும் கொள்கையையும் ஏதோவொரு வகையில் சொல்லிக்கொண்டே இருந்தார்.

நடிகை லட்சுமி, வழக்கம் போல் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார். காதலன் கொலையாளி எனப் புரிந்துகொண்டு கலங்கும் காட்சியிலும் அவரை தன் தந்தையும் புரிந்துகொண்டுவிட்டார் என நெகிழ்ந்து போவதும், எம்ஜிஆர் இரவு பகல் பார்க்காமல், படித்துக்கொண்டிருக்க, அவருக்கு உதவி செய்யும் இடங்களிலும் லட்சுமி தன் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தினார்.

’ஜிபன் ம்ருத்யு’ என்கிற பெங்காலிப் படத்தைத்தான் தமிழில் சங்கே முழங்காக ரீமேக் செய்தார்கள். எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான ப.நீலகண்டன் இயக்கினார்.

1972-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி வெளியானது ‘சங்கே முழங்கு’. படம் வெளியாகி, 51 ஆண்டுகளாகின்றன. சிங் வேடத்தில் வந்த எம்ஜிஆரின் நடிப்பும், அவருக்கு ஜோடியாக நடித்த லட்சுமியின் நடிப்பும் எம்ஜிஆர் ரசிகர்கள் மனதில் என்றைக்கும் நீங்காத இடத்தைப் பிடித்து நிற்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in