2023-ல் வெளியாகிறது எம்ஜிஆரின் பொன்னியின் செல்வன்

அனிமேஷன் பட போஸ்டர் வெளியீடு
போஸ்டர்
போஸ்டர்

எம்ஜிஆரின் நிறைவேறாத கனவுகளில் ஒன்று பொன்னியின் செல்வன் திரைப்படம். 1950-களில் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ கதை, ‘கல்கி’ வார இதழில் தொடராக வெளிவந்தபோதே, அதன் வெற்றி எம்ஜிஆரைக் கவர்ந்தது. எனவே, 1958-ம் ஆண்டு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து ‘பொன்னியின் செல்வன்’ கதையின் உரிமையைப் பெற்ற அவர், அதைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கினார். இயக்குநர் மகேந்திரன் உட்பட பலரிடம் அந்தக் கதையைக் கொடுத்து, திரைக்கதையாக மாற்றச் சொன்ன அவர், கடைசியில் தானே அந்தப் படத்தை இயக்குவதென முடிவெடுத்தார். படத்தை எம்ஜிஆர் பிலிம்ஸே தயாரிக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பும் வெளியானது.

அந்தப் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் நடிப்பார் என்றும், மற்ற கதாபாத்திரங்களில் ஜெமினி கணேசன், பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி, வைஜெயந்தி மாலா, நம்பியார், டி.எஸ்.பாலையா உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்றும் கூறப்பட்டது. ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ அளிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ என்று போஸ்டர்கூட வெளியிடப்பட்டு பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியானது. ஆனால், படப்படிப்பு தொடங்கப்படவே இல்லை.

விளம்பரம்
விளம்பரம்

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கோச்சடையான் படத்தை ரஜினியை வைத்து அனிமேஷன் செய்து எடுத்ததுபோலவே, எம்ஜிஆரை வைத்து பொன்னியின் செல்வனை எடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. ‘சனீஸ்வர் அனிமேஷன்’ நிறுவனத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு, எம்ஜிஆர் பிறந்தநாளான ஜனவரி 17 அன்று படத்தின் ஒரு பாடல் காட்சியும் வெளியிடப்பட்டது. ‘பெரியார் குத்து’ பாடல் புகழ், ரமேஷ் தமிழ்மணி இசையில், பாகுபலி படத்துக்கு பாடல் எழுதிய மதன் கார்க்கியின் வரிகளில் அந்தப் பாடல் உருவாகியிருந்தது. தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் இந்தப் படம் உருவாகி வருவதாகவும் சொன்னார்கள். ஆனால், இதுவரையில் படம் வெளியாகவில்லை.

இந்தச் சூழலில், பிரபல சினிமா மக்கள் தொடர்பாளரான நிகில் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “எம்ஜிஆரின் கனவு நிறைவேறப் போகிறது. வந்தியத் தேவனாகவும், அருண்மொழித் தேவனாகவும் எம்ஜிஆர் நடிக்கும் பொன்னியின் செல்வன், அனிமேஷன் படத்தின் போஸ்டரை அவரது பிறந்தநாளான இன்று வெளியிடுகிறோம். இந்தப் படத்தை அஜய் பிரதீப் இயக்குகிறார். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

படத்தின் போஸ்டரை பாகுபலி படக்குழுவில் பணியாற்றியவர்களே உருவாக்கியிருந்தனர். அழகாகவும் கம்பீரமாகவும் இந்தப் போஸ்டரில் தோற்றமளிக்கிறார் எம்ஜிஆர். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்றும், சாபு சிரில், ஆண்டனி, விஸ்வநாத் சுந்தரம், ஸ்ரீநிதி அஜய் உள்ளிட்டோரும் படக்குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்றும், படம் 2023-ல் உலகம் முழுதும் வெளியாகும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன் குறித்து நிறைய அறிவிப்புகள் வெளிவந்தாலும் எதுவும் நிறைவேறியதில்லை. இது நிறைவேறினால், இன்றைய ஓடிடி உலகில் நிச்சயம் கொண்டாடப்படும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in