அமிதாப் கேரக்டரில் எம்ஜிஆர்: 'பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ?’

அமிதாப் கேரக்டரில்  எம்ஜிஆர்: 'பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ?’

இந்திய சினிமா என்றாலே அக்காலத்தில் இந்தி சினிமாதான் அடையாளம். அதேபோல் இந்தியில் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால், அதை ரீமேக் செய்யும் உரிமையைப் பெற தமிழ் உட்பட இதர மொழிகளின் சினிமா களங்களில் போட்டாபோட்டி நடக்கும். ஏவி.எம். மாதிரியான புகழ்பெற்ற நிறுவனங்கள், இந்திப் படங்களோடு வங்காள படங்களையும் வாங்கி ரீமேக் செய்யும். அப்படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் அடையும். நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி, பெரும்பாலான இந்திப் படங்களை தமிழுக்குத் தக்கபடி எடுத்து அசாதாரண வெற்றிகளை அடைந்தவர்!

இங்கிருந்தும் இந்திக்கு படங்கள் சென்றிருக்கின்றன என்றாலும், ஒப்பீட்டளவில் அவை குறைவே. ஸ்ரீதர், கே.பாக்யராஜ், மணிரத்னம் ஆகியோரின் வருகைக்குப் பின்னரே தமிழ்ப் படங்கள் ரீமேக் ஆவது அதிகரித்தது.

எழுபதுகளில், எம்ஜிஆரின் இந்தி ரீமேக் படங்கள் கவனம் ஈர்த்தன. அப்படி இந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படத்துக்கு, ‘சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ என்று அவர் பாடிய பாடலில் இருந்தே தலைப்பு வைத்தார்கள். அதுதான் ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்பில் தமிழில் வெளியானது.

தவறான வழியில் சென்று பிடிபட்டு, சிறைத்தண்டனை அனுபவித்து வெளியே வருவார் எம்ஜிஆரின் அப்பா. தன் மனைவியையும் மகனையும் பார்ப்பார். மனம் மாறுவார். தன் கூட்டத்தின் தலைவனிடம் சென்று, ‘இனிமேல் நான் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடப்போவதில்லை. என்னை விடுவியுங்கள்’ என்று கேட்பார். அப்படியே ஆகட்டும் என்று கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் நாடகமாடுவான்.

பிறகு தீபாவளித் திருநாளன்று, அவரைக் கொல்லத் திட்டமிட்டு வீடுதேடி வருவான் கொள்ளைக் கூட்டத் தலைவன். அங்கே அப்பாவுடன் கண்ணாமூச்சி ஆடுகிற சிறுவன், அப்போதுதான் பீரோவுக்குள் ஒளிந்திருப்பான். அப்பா அம்மாவை கொள்ளைக் கூட்டத் தலைவன் சுட்டுக் கொல்வதை பீரோவுக்குள் ஒளிந்தபடி பார்ப்பான் சிறுவன். கொன்றவன் கையில் தொங்கும் குதிரை பொம்மை பிரேஸ்லெட் சிறுவன் மனதில் நன்கு பதிந்துவிடும்.

ராமு என்கிற அந்த சிறுவன் வளர்ந்து இன்ஸ்பெக்டர் ஆகிறான். ஊரில் சூதாட்ட விடுதி நடத்திக் கொண்டிருக்கும் அப்துல் ரஹ்மானை அழைத்து அனைத்தையும் நிறுத்துமாறு இன்ஸ்பெக்டர் ராமு சொல்கிறார். அவரும் சூதாட்ட விடுதியை மூடிவிட்டு, மெக்கானிக் ஷாப் வைத்து வாழ்க்கையை ஓட்டுகிறார்.

அந்த ஊரில், சாணை பிடிக்கும் தொழில் செய்கிறாள் மாலா (நடிகை லதா). ஒரு குற்றத்தை மாலா பார்த்திருப்பார். ‘அந்தக் குற்றத்தை நீ பார்த்தாய் என்பது எனக்குத் தெரியும். உண்மையைச் சொல். ஆபத்து வராமல் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று ராமு சொல்ல, அவளும் குற்றவாளியை அடையாளம் காட்ட அவன் பிடிபடுவான்.

அடுத்தடுத்து மாலாவுக்கு தொல்லைகள் அதிகரிக்க, ராமு அடைக்கலம் தருகிறார். இதில் இருவருக்கும் காதல் மலர்கிறது. மனம் திருந்தி வாழும் அப்துல் ரஹ்மானை தனது சகோதரனாகவே பாவிக்கும் ராமு, மாலாவை அவரிடம் ஒப்படைத்து பாதுகாக்குமாறு சொல்வார்.

இதற்கிடையே கொள்ளைக் கூட்டத்தின் சேட்டைகள் அதிகரிக்கின்றன. அவர்களை அடக்கும் போராட்டத்தில் கொள்ளையர் தலைவனை ராமு பல முறை சந்திக்கிறார். எச்சரிக்கிறார். படத்தின் இறுதிக் காட்சியின்போது, கொள்ளைக் கூட்டத் தலைவனின் கையில் இருக்கும் குதிரை பொம்மை பிரேஸ்லெட்டைப் பார்க்கிறார். தனது தாய் தந்தையை கொன்றவனை பழிவாங்குகிறார். கொள்ளைக் கூட்டமும் அடியோடு ஒழிகிறது. இன்ஸ்பெக்டர் ராமுவும் மாலாவும் இணைகிறார்கள்.

1973ம் ஆண்டு, இந்தியில் ‘சஞ்ஜீர்’ எனும் பெயரில் இந்தப் படம் வெளியாகி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இந்தித் திரையுலகின் மிக முக்கியமான கதாசிரியர்களாக கோட்டை கட்டி, கொடி நட்டு ஆட்சி புரிந்த சலீம் - ஜாவேத்தின் கதை இது. எம்ஜிஆர் நடித்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் அமிதாப் நடித்தார். அமிதாப்பின் திரையுலகில், இந்த வெற்றிப்படம் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. அதேபோல், அப்துல் ரஹ்மான் கதாபாத்திரத்தில் நடித்த இந்தி நடிகர் பிரான் பிரமிக்கவைத்தார்.

அமிதாப்புக்கு கரவொலி கிடைத்ததோடு பிரானின் ஸ்டைலான நடிப்பு மற்றும் நகைச்சுவையில் ரசிகர்கள் கிறுகிறுத்துப் போனார்கள். இதன் தமிழ் ரீமேக்கில் அமிதாப்பின் இன்ஸ்பெக்டர் வேடத்தில் எம்ஜிஆர் நடித்தார். அதேபோல, பிரான் நடித்த அப்துல் ரஹ்மான் கேரக்டரிலும் எம்ஜிஆரே நடித்தார். ஆக எம்ஜிஆரின் இரண்டு வேடப் படங்களின் பட்டியலில் ‘சிரித்து வாழவேண்டும்’ படமும் சேர்ந்தது. எம்ஜிஆர், லதா ஆகியோருடன் நம்பியார், மனோகர், ஆர்.செளந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன், வி.எஸ்.ராகவன், எஸ்.வி.ராமதாஸ், வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்தார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கவிஞர் வாலியும் புலவர் புலமைப்பித்தனும் பாடல்களை எழுதினார்கள். ’உலகம் என்னும்..’ எனும் பாடலை புலமைப்பித்தன் எழுதினார். எம்ஜிஆருக்காக ஷேக் சலாமத், டி.எம்.எஸ் என ஒரே பாடலுக்கு இரண்டு பேர் குரல் கொடுத்திருந்தார்கள்.

’எண்ணத்தில் நலமிருந்தால்..’ மற்றும் ‘ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்’ பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ’மேரா நாம் அப்துல்ரஹ்மான்’ என்ற பாடலின் வரிகள் பெரிய அளவுக்குப் பிரபலமாயின.

அதேபோல், ’கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..’ என்ற பாடலில் வாலி கொஞ்சிக்கொஞ்சி எழுதியிருப்பார். டி.எம்.எஸ்.ஸும் ஜானகியும் பாடினார்கள். ’பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ’ எனும் பாடலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

'கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்/ கடல் நீலம் என விழிக் கோலம் என்ன/ கடல் நீலம் என விழிக் கோலம் என்ன/ அந்தப் பார்வை எந்தன் மீதோ/ அந்தப் பார்வை எந்தன் மீதோ/ கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..’ என்று பாடி முடிக்கும் போது, ‘ஸ்.. ஆஆஆஆஆ’ என்பார் ஜானகி.

’செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக/ தந்திட வந்தேன் காணிக்கையாக/ காணிக்கை ஏது நான் தரும் போது/ காணிக்கை ஏது நான் தரும் போது/ காதலில் சுவை ஏது நான் வழங்காது/ கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’ என்று எழுதினார் கவிஞர் வாலி.

’நினைக்கையில் கொதிப்பாக/ அணைக்கையில் குளிராக/ நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக/ இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக’ என்றும்

’ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்/ ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்/ நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்/ கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’ என்றும் எழுதப்பட்ட வரிகள் அதிகம் சிலாகிக்கப்பட்டன.

’வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே/ நான் ஒரு சுகம் காண நேர்ந்தது உன்னாலே/ மறைப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி/ மறைப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி/ எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி/ எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி’ என்று பாடலின் வரிகளையும் மக்கள் வெகுவாய் ரசித்துக் கேட்டார்கள்.

'பொன் மனச் செம்மலை புண் படச் செய்தது யாரோ அது யாரோ/ உன் மனம் என்பதும்

என் மனம் என்பதும் வேறோ அறிவாரோ’ என்ற போகும் பாடலில்..

’உன்னை ஒரு சேய் போல் நான் தாலாட்ட/ வண்ணச் சிறு செவ்வாயில் தேனூட்ட/ உன்னை ஒரு சேய் போல் நான் தாலாட்ட/ வண்ணச் சிறு செவ்வாயில் தேனூட்ட/ திருமேனி நலமாகலாம்

திகட்டாத சுகம் காணலாம்/ திருமேனி நலமாகலாம் திகட்டாத சுகம் காணலாம்/ விலகாமல் நாம் விளையாடலாம்’ என்று பயணிக்கும் வரிகளுக்காக பொன்மனச்செம்மலையும் வாலியையும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

படத்தில் குறைகளுக்கும் பஞ்சமிருக்காது. அப்படியான டெக்னிக்கல் குறைபாடுகளின் பட்டியல் நீளமானது. முக்கியமாக எம்ஜிஆரின் காஸ்ட்யூம் ரசனைக் குறைவாக இருந்தது. இஸ்லாமியராக வரும் எம்ஜிஆர் பேசுவது, ’சேட்’ பாஷையா, இதர வடக்கத்திய பாஷையா, இல்லை இஸ்லாமிய பாஷையா என்கிற குழப்பமும் தென்படும். அக்காலத்தின் பெரும்பாலான படங்களில் இப்படித்தான் இஸ்லாமிய மற்றும் சேட்டு கதாபாத்திரங்களை இழுத்துக் கடித்து வசனம் பேச வைத்தார்கள்.

வில்லன் நம்பியாரின் கையிலிருக்கும் குதிரை பொம்மை பிரேஸ்லெட்டை சிறுவயதில் பார்த்திருக்கும் எம்ஜிஆர், கடைசி வரை அப்பா அம்மாவைக் கொன்றவர்களைத் தேடவே மாட்டார். ஒருவேளை ’குதிரை பொம்மை வேண்டாம்; கழுதையோ கழுகோ கொண்ட பிரேஸ்லெட் போட்டுக்கலாம்’ என்று நம்பியார் முடிவு செய்திருப்பின் கதை மற்றும் கதாநாயகன் நிலை என்னவாகியிருக்கும்? இந்தளவுக்கு எல்லாம் எம்ஜிஆர் படத்தில் எதிர்பார்ப்பவர்களும் அக்காலத்தில் குறைவு.

வி.எஸ்.ராகவனின் கதாபாத்திரமும் அவர் நடித்த விதமும் ரொம்பவே பேசப்பட்டது. தன் மகளுக்குத் தீங்கு செய்துவிட்ட வில்லன் கூட்டத்தை போலீஸிடம் காட்டிக் கொடுக்கிற இன்ஃபார்மராகவும், அடிக்கடி மகளை நினைத்து உருகுவதுமாக கலக்கியிருப்பார்.

கே.பாலசந்தரின் இயக்கத்தில், ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தைத் தயாரித்த ‘இதயம் பேசுகிறது’ மணியன், வித்வான் வே.லட்சுமணனுடன் இணைந்து அப்படத்தைத் தயாரித்தது போலவே, ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தையும் தயாரித்தார். விகடன் எஸ்.எஸ்.பாலன் இயக்கினார். உலகம் முழுவதும் சுற்றிவந்து பயணக் கட்டுரை எழுதி பெயர் பெற்ற ‘இதயம் பேசுகிறது’ மணியன், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக வெளிநாடுகளில் செய்த உதவிகளுக்காக, இப்படத்துக்கும் ‘இதயவீணை’ படத்துக்கும் கால்ஷீட் அள்ளி தந்திருந்தார் எம்ஜிஆர்.

1974-ஆம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வெளியானது ‘சிரித்து வாழவேண்டும்’. படம் வெளியாகி 48 வருடங்களாகின்றன. தற்போது, படத்தை டிஜிட்டலில் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘அடிமைப்பெண்’, ‘கர்ணன்’, ‘வசந்தமாளிகை’ போல இதுவும் ஹிட் அடிக்கட்டும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in