எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சொன்ன ‘என்னப் பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!’

- ஆண்டுகள் ஐம்பது கடந்தும் எனர்ஜியும் உற்சாகமும் தரும் ‘ரகசிய போலீஸ் 115’
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சொன்ன ‘என்னப் பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!’

எம்ஜிஆர் படங்கள் என்றாலே எப்போதுமே எனர்ஜிதான். அவ்வளவு ஏன்... எம்ஜிஆரின் முகம் பார்த்தாலே மொத்த உற்சாகமும் கிடைத்துவிடும் பலருக்கு. தமிழ் சினிமாவில், குடும்பக் கதை, காதல் கதை, சண்டைக்காட்சிகள் நிறைந்த கதை, சஸ்பென்ஸ் கதை என்றெல்லாம் இருக்கின்றன. ஆனால், இந்த ஃபார்முலாக்களையெல்லாம் கடந்தும் எம்ஜிஆர் நடித்தார். அதை ‘எம்ஜிஆர் ஃபார்முலா’ என்றே திரையுலகம் கொண்டாடியது.

அந்த எம்ஜிஆர் ஃபார்முலாவை வைத்துக்கொண்டுதான் இன்றைய ஹீரோக்கள் வரைக்குமான படங்கள் பண்ணப்பட்டு வருகின்றன. அப்படி ஆக்‌ஷன், குடும்பம், கலகலப்பு, கைகலப்பு என்று ஜூஸ் போட்டுக் கொடுத்ததுதான் ‘ரகசிய போலீஸ் 115’.

படத்தின் தலைப்பே எம்ஜிஆரின் வேலையைச் சொல்லிவிடும். ரகசிய உளவாளி எம்ஜிஆர். கொள்ளைக் கூட்டத்தைப் பிடிப்பதற்கு மேலும் பெரிய பதவியைக் கொடுத்து அனுப்பி வைப்பார்கள். அந்தக் கொள்ளைக்கூட்டத்தில் ஏகப்பட்ட கூட்டம் இருக்கும்.

நம்பியார், அசோகன் என்று பெரிய கூட்டமே இருக்கும். எம்ஜிஆர் யாரென்று தெரியாமல், ஜெயலலிதா அந்தக் கூட்டத்தில் இருக்கும் பெண்ணிடம் அடிமையாகக் கிடக்கும் அண்ணனை வேவு பார்க்கும் வேலைக்கு எம்ஜிஆரை நியமிப்பார். அதற்கு அப்பாவையெல்லாம் காரணம் சொல்லியிருப்பார். ஜெயலலிதாவின் அண்ணன் அசோகன் என்பது இன்னொரு சுவாரஸ்யம்.

இந்த நிலையில், எம்ஜிஆருக்கு பார்வையற்ற அம்மாவும் தங்கையும் உண்டு. அந்தத் தங்கை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தன்னைப் பறிகொடுத்துவிடுவார். அந்த இன்ஸ்பெக்டர், எம்ஜிஆரின் நண்பர்தான். ஆனால், எம்ஜிஆரின் தங்கையை ரகசிய விவாகம் செய்து, குழந்தையையும் கொடுத்த அவர்... நம்பியார்.

கொள்ளைக்கூட்டத்துக்கு தலைவனும் நம்பியார்தான். ஒருகட்டத்தில் அம்மா விபத்தில் சிக்கி இறந்துவிட, தங்கை எங்கோ சென்றுவிட, இன்னொருபக்கம் கொள்ளைக்கூட்டத்தை வேவு பார்க்கும் வேலையில் தீவிர கவனம் செலுத்துவார் எம்ஜிஆர். பக்கத்தில் ஜெயலலிதாவும் இருக்க, காதலுக்குச் சொல்லவா வேண்டும்.

அந்த ஊரில் நாகேஷ் இருப்பார். அவரிடம் அடைக்கலமாக வருவார் புஷ்பமாலா. இவர்களுக்குள் நடக்கும் கூத்துகளும் நாகேஷ் செய்கிற சேட்டைகளும் தனி எபிசோடுகளாகவே இருக்கும்.

நம்பியாரைப் பார்த்துவிடும் எம்ஜிஆரின் தங்கை குமாரி பத்மினி, அவரிடம் சென்று கதறுவார். கண்ணீர் விடுவார். நம்பியாருக்குக் குழப்பமாக இருக்கும். ‘இவர் யாரென்றே நமக்குத் தெரியாதே’ என்பது போல் முழிப்பார். அப்போதுதான் இன்னொரு நம்பியார் இருக்கிறார். இதில் இரட்டை வேடம் அவருக்கு என்பதே தெரியவரும். போலீஸ் நம்பியாரை அடைத்துவைத்துவிட்டு, போலீஸ்காரர் போல் வேடமிட்டுக் கொண்டு, கொள்ளைச் செயல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்பார் வில்லன் நம்பியார்.

அந்தக் கூட்டத்தில் அசோகனும் ஒருவர். வெண்ணிற ஆடை நிர்மலா, அந்தக் கூட்டத்தில் விருப்பமில்லாமல், அடிமை போல் இருப்பார். வெண்ணிற ஆடை நிர்மலாவை காதலிப்பது போல் அன்பொழுகப் பேசி, கொள்ளைக்கூட்ட ரகசியங்களை கறந்துவிட எம்ஜிஆர் திட்டம் போட்டு வேலை செய்வார். இவையெல்லாம் தெரிந்து வெண்ணிற ஆடை நிர்மலா கொல்லப்படுவார். எம்ஜிஆர் யார் என்கிற விஷயங்களெல்லாம் ஜெயலலிதாவுக்கு கடைசியில்தான் தெரியவரும். நாகேஷின் உதவியுடன் அந்தக் கூட்டத்தை வளைப்பார். உண்மையான போலீஸ் நம்பியாரை மீட்பார். எல்லோரையும் ஒடுக்கி, கைது செய்து, வெற்றிவாகை சூடுவார். இப்படியொரு படம், வெற்றிவாகை சூடாமல் இருந்துவிடுமா என்ன?

பி.ஆர்.பந்துலு தனது ‘பத்மினி பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் பேனரில் தயாரித்து இயக்கிய படம். சக்தி கிருஷ்ணசாமி வசனம் எழுதினார். கே.டி.சந்தானம், எஸ்.என்.லட்சுமி, என்னத்தே கன்னையா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

படம் முழுக்க எம்ஜிஆரின் ராஜாங்கம்தான். ஜெயலலிதாவுடன் அவர் செய்கிற லூட்டியும் காதலும் மோதலும் ரசனையும் ரகளையாக இருக்கும். அசோகன் வழக்கம் போல, புதுப்புது மேனரிஸங்கள் மூலம் கலக்கியிருப்பார். நம்பியார் மிடுக்கும் கோப முகமும் கொண்டு, மிரட்டியிருப்பார். நாகேஷின் காமெடி கலகல, லகலகவென இருக்கும்.

ஆரம்ப காலத்திலிருந்தே சிவாஜியை வைத்து ஏகப்பட்ட படங்களைக் கொடுத்த பி.ஆர்.பந்துலு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இணைந்து அடுத்தடுத்து எம்ஜிஆரை வைத்து நிறையப் படங்களை இயக்கினார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படம்தான் எம்ஜிஆருக்கு மட்டுமின்றி பி.ஆர்.பந்துலுவுக்கும் கடைசிப்படமாக அமைந்தது சோகம். படத்தின் பாதியிலேயே இறந்துவிட, இயக்குநர் ப.நீலகண்டனின் உதவியுடன் எம்ஜிஆரே இயக்கி முடித்தார் அந்தப் படத்தை. சிவாஜியுடன் ஏற்பட்ட பிணக்கு, பிணக்காகவே இருந்தது. எம்ஜிஆரிடம் சென்ற பந்துலு, அதன் பிறகு சிவாஜியை வைத்து இயக்கவே இல்லை. அதேபோல், தொடர்ந்து ஹிட் படங்களாகக் கொடுத்து எம்ஜிஆர் ஃபார்முலாவின் படி, படங்களை வழங்கினார் பந்துலு. அதில் ‘ரகசிய போலீஸ் 115’ படமும் ஒன்று.

கவியரசர் கண்ணதாசனும், வாலியும் பாடல்களை எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். வண்ணப்படமாக வந்தது. ஜெயலலிதாதான் நாயகி என்றாலும் படத்தின் கதைக்குள், கதைக்குள் வரும் திருப்பத்துக்குள்ளெல்லாம் அவர் வரவே இல்லை. எம்ஜிஆரைப் பார்ப்பது, அவருடன் பேசுவது, சண்டை போடுவது, பாட்டுப்பாடுவது, காதலிப்பது என்ற வேலையை மட்டும் செய்திருந்தார்.

எம்ஜிஆருக்கு மேலதிகாரியாக திருச்சி செளந்தர்ராஜன் நடித்திருந்தார். மிடுக்கும் கம்பீரமும் காட்டி அசத்தினார். பாடல்கள் எல்லாமே நல்ல வரவேற்பைப் பெற்றன. ’உன்னை எண்ணி எண்ணி’ என்றொரு பாடல். கண்ணதாசன் எழுத, பி.சுசீலா பாடினார். ’சந்தனம் குங்குமம்’ என்றொரு பாடலும் கண்ணதாசன் தான். பி.சுசீலாதான். ’பால் தமிழ்ப்பால்’ என்றொரு பாடல். கவிஞர் வாலி இந்தப் பாடலில் ‘பால்’ விளையாடுவது ‘பால்’ எனும் வார்த்தையைக் கொண்டு விளையாடியிருப்பார். டி.எம்.எஸ்., சுசீலா இருவரும் பாடினார்கள். ஹிட் வரிசையில் அமைந்த பாடல் இது.

’கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வாராதோ’ என்ற பாடல். டி.எம்.எஸ்., எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்கள். கவியரசரின் பாடல் வரிகள். சொல்லப்போனால், இந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்ததற்கு பல காரணம் உண்டு என்றாலும் பாடலை வேறொரு உயரத்துக்கு எல்.ஆர்.ஈஸ்வரியின் ‘ஹைபிட்ச்’ குரல் கொண்டு சென்றது. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நடுநடுவே சண்டை போட்டுக்கொண்டு, நடுநடுவே காதலித்தும் கொண்டு பாடுகிற ‘என்னப் பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்’ என்கிற பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. டி.எம்.எஸ். குரலில், சுசீலா குரலில் அமைந்த இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

’கண்ணே கனியே முத்தே அருகே வா’ இந்தப் பாடலும் மெட்டும் டி.எம்.எஸ்., ‘கண்ணே’ சொல்ல, சுசீலா, ‘கண்ணே’ சொல்ல, அவர் ‘கனியே’ சொல்ல, இவர் ‘கனியே’ சொல்ல, ரகளை கிளப்பும் பாட்டாக அமைத்திருந்தார் மெல்லிசை மன்னர். ஆக, எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்.

எம்ஜிஆரின் காஸ்ட்யூம் அற்புதமாக இருந்தன. அமர்க்களமாக இருப்பார். ‘’என்னது... ரகசிய போலீஸ் 115, எதிரி நாட்டு எல்லைப் படையினருடன் சிக்கிக்கொண்டுவிட்டாரா?’’ என்று போலீஸ் அதிகாரி போன் தகவலைச் சொல்லுவார். அடுத்து எம்ஜிஆரின் எண்ட்ரி. நீளமாக கோட்டும் தொப்பியும் கூலிங்கிளாஸுமாக ஓடுவார். திரும்புவார். எதிரிப்படையினருடன் சண்டையிடுவார். அருகில் உள்ள ஆற்றிலோ கடலிலோ குதித்து உள்நீச்சலில் வருவார். எதிரிப்படை, துப்பாக்கியால் தண்ணீர் அசைவு கண்டு சுடும். எம்ஜிஆர் கடும் போராட்டங்களுக்குப் பிறகு அக்கரைக்கு வருவார்.

அங்கே ‘இந்திய எல்லை’ என்று எழுதப்பட்ட போர்டு இருக்கும். நம் நாட்டு வீரர்கள் வந்து எம்ஜிஆரிடம் வருவார்கள். மீண்டும் திருச்சி செளந்தர்ராஜனைக் காட்டுவார்கள்.

போன் வரும். ‘’ஓகே... ரகசிய போலீஸ் 115, எதிரிகளிடம் சிக்காமல், இந்திய எல்லைக்கு வந்துவிட்டாரா? வெரிகுட்’’ என்று சொல்லிவிட்டு, சுற்றியிருப்பவர்களிடம் மகிழ்ச்சியாக தகவல் சொல்லுவார். அருமையான காட்சிதான்.

1968-ம் ஆண்டு, ஜனவரி 11-ம் தேதி வெளியானது ‘ரகசிய போலீஸ் 115’. படம் வெளியாகி, 54 ஆண்டுகளாகிவிட்டன. எம்ஜிஆராலும் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடியாலும் மெல்லிசை மன்னரின் அற்புத இசையாலும் பாடல்களாலும் இன்றைக்குப் பார்த்தாலும் நம்மை உற்சாகமாக்கி, நமக்குள் எனர்ஜியை ஏற்படுத்தி விடுகிறார் ரகசிய போலீஸ் 115. இதுதான் எம்ஜிஆரின் வெற்றி ரகசியம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in