
தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், ‘மெல்லிசை மன்னர்’ எனப் போற்றப்படுபவர்.
1928-ல் கேரள மாநிலம் பாலக்காடு, எலப்புள்ளியில் பிறந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தமிழ் சினிமாவில் முக்கியமான இசை அமைப்பாளராகத் தொடர்ந்த அவர், சிறந்த பாடகராகவும் குணசித்திர நடிகராகவும் விளங்கினார்.
2015-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் அவர் காலமானார். இந்நிலையில், கேரள மாநில அரசு, அவருக்கு நினைவு மண்டபம் கட்ட முடிவு செய்து, முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அவர் இசை பயின்ற பாலக்காட்டில் இந்த மண்டபம் கட்டப்படுகிறது. கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் இதை அறிவித்துள்ளார்.