ஜி.கே.வெங்கடேஷ்: தேன் சிந்தும் வானம் தந்த ‘மெலடி மேதை’

95-வது பிறந்தநாளில் சிறப்புப் பகிர்வு
ஜி.கே.வெங்கடேஷ்: தேன் சிந்தும் வானம் தந்த ‘மெலடி மேதை’

’எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கோ வாழ்ந்து...’ எனும் வாசகம் மிகப் பிரபலம். இது எல்லோருக்கும் பொருந்துகிற வரிகள்தான் என்றாலும் கலைஞர்களுக்கு ரொம்பவே பொருந்தும். கலைஞர்களுக்கு இனம், மொழி, தேசம் என்கிற எல்லைகளெல்லாம் இல்லை. காற்றுக்கு எல்லை இல்லை என்பது போலத்தான், அந்தக் காற்றின் வழியே இசையை அனுப்பி நம் மனதுக்குள் கம்பீரமாக உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள் இசைக்கலைஞர்கள். அப்படியான இசை பிரம்மாக்களில் ஒருவர்... ஜி.கே.வெங்கடேஷ்.

ஹைதராபாத் நகரில் 1927 செப்டம்பர் 21-ம் தேதி பிறந்தார். குருஜாதா கிருஷ்ணதாஸ் வெங்கடேஷ் என்பதுதான் பெயர். அதுவே ஜி.கே.வெங்கடேஷ் என்றானது. அங்கேயே பள்ளிப்படிப்பு. சிறு வயதிலேயே இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. வீணை வாசிக்கச் சென்றார். வீணையில் இவரின் விரல்கள் விளையாடின. இதைப் பார்த்த பலரும், ‘பின்னாடி, பெரிய வீணை வித்வானா வரப்போறான்’ என்றுதான் சொன்னார்கள். ஆனால் பின்னாளில், வீணை முதலான பல வாத்தியக் கருவிகளை இசைப்பதிலும் அவற்றின் நுட்பங்களை அறிந்து அதில் வியக்கத்தக்க இசையை வழங்குவதிலும் மிகப்பெரிய மேதையாகத் திகழப்போகிறார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

திரை இசையில் நாட்டம் கொண்டிருந்த வெங்கடேஷ், சினிமாவுக்குள் நுழைய பல முயற்சிகள் மேற்கொண்டார். ஒருவழியாக, சென்னைக்கு வந்தவருக்கு, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதனையும் ராமமூர்த்தியையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

’’மெல்லிசை மன்னர்களைச் சந்தித்ததும் அவர்களின் பழக்கம் ஏற்பட்டதும்தான் என் வாழ்வில் மிக முக்கியமான தருணம். கடவுளின் ஆசி கிடைத்துவிட்டதாகவே உணர்ந்தேன். அந்த இசை மாமேதைகளுடன் இருந்து இசையைக் கற்றுக்கொண்டேன். அவர்களுடன் பல படங்களுக்குப் பணியாற்றியதெல்லாம் என் பாக்கியம்’’ என சிலிர்ப்புடன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் ஜி.கே.வெங்கடேஷ்.

ஜி.கெ.வெங்கடேஷ்
ஜி.கெ.வெங்கடேஷ்

’படித்தால் மட்டும் போதுமா?’, ‘பாவ மன்னிப்பு’ முதலான பல படங்களில் மெல்லிசை மன்னர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றினார். அந்தச் சமயத்தில் கன்னடப் படத்துக்கு இசையமைக்க வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் உதவிக்காக அவர் அந்தப் பையனைச் சேர்த்துக்கொண்டார். ஜி.கே.வெங்கடேஷின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, அந்தப் பையன் அவர் சொன்ன சங்கதிகளையெல்லாம் தன் விரல்நுனியில் வைத்துக்கொண்டு வரிசைக்கிரமமாகச் சொல்ல, அந்தப் பையன் மீது அன்பும் பிரியமும் ஏற்பட்டது.

கன்னடத்தில் ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்தால் அந்தப் பாடல்கள் எல்லாமே ஹிட் என்ற நிலை உருவானது. பாடல்களின் வெற்றியால் படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. கன்னடத்தின் சூப்பர் ஸ்டார்களான ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் முதலான மிகப்பெரிய ஹீரோக்களுக்கும் இயக்குநர்களுக்கும் ஜி.கே.வெங்கடேஷ் கால்ஷீட் கிடைத்துவிட்டதென்றாலே, படம் பாதி வெற்றி உறுதி என்று பேசிக்கொள்வார்கள், கன்னடத் திரையுலகில்! அவருடனேயே வளர்ந்த அந்தப் பையன் வேறு யாருமல்ல... இசைஞானி இளையராஜா!

’இளையராஜாவுக்கு குரு என்று எவருமில்லை. அவர் ஒரு சுயம்பு. தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட சிற்பி அவர். தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டவர். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பது மட்டுமல்ல... கடவுளால் இசைக்காக அனுப்பிவைக்கப்பட்டவர்’ என்று ஒரு மேடையில், ‘பாடும் நிலா’ எஸ்பிபி இளையராஜாவைப் பற்றிச் சொன்னார். ஆனாலும் ‘என் வாழ்வில் குருமார்கள் உண்டு. இசையுலகில் எனக்கு குரு தன்ராஜ் மாஸ்டர். அதேபோல், ஜி.கே.வெங்கடேஷ். இவர்களைத் தவிர, ஏகலைவன் போல் மெல்லிசை மன்னரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்’ என்று இளையராஜா மனம் திறந்து தெரிவித்திருக்கிறார்.

இப்படித்தான் ஜி.கே.வெங்கடேஷூம், ‘’அண்ணன் பதியை குருவாக ஏற்றுக்கொண்டேன். அவரிடம் வீணை கற்றுக் கொண்டேன். பிறகு ஒவ்வொரு வாத்தியங்களாகக் கற்றுக்கொண்டேன். அந்தக் காலத்தில், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன் ஐயா முதலான மாமேதைகளின் குழுவில் நானும் வேலை செய்திருக்கிறேன். இவர்களுக்கு வீணை மட்டும் வாசித்துக் கொடுத்திருக்கிறேன். பிறகுதான், மெல்லிசை மன்னர்கள் என்னை அரவணைத்து ஆளாக்கினார்கள்’’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் இன்னொரு விஷயம்... வீணை மற்றும் இன்ன பிற வாத்தியங்களைக் கற்றறிந்தாலும் ஆரம்ப காலத்தில் ஆல் இண்டியா ரேடியோவில் கன்னடப் பாடல்களைப் பாடித்தான் கொஞ்சம் பிரபலமானார் ஜி.கே.வெங்கடேஷ். கர்நாடக மாநிலத்தில் ரேடியா அபிமானிகள் பலரும் இவரின் பாடல்களுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்தார்கள். ஆக, பாடும் திறமையும் குரல் வளமும் கொண்டவர். அதையெல்லாம் அறிந்துதான் ‘படித்தால் மட்டும் போதுமா’விலும் ‘பாவமன்னிப்பு’ படத்திலும் வித்தியாசமான சில ஹம்மிங்குகளை வெங்கடேஷுக்குக் கொடுத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

தவிர, “வெங்கடேஷ் மகா திறமைசாலி. நான் அவனுக்கு குருவெல்லாம் இல்லை. என்னுடய நண்பன் அவன். எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் உதவியாளனாக நான் இருந்தது போலவே அவனும் இருந்தான். கலைவாணர் ‘பணம்’ படம் தயாரித்தபோது, நானும் ராமமூர்த்தியும் சேர்ந்து இசையமைக்கத் தொடங்கினோம். வெங்கடேஷும் அந்த சமயத்தில் எங்களை வந்து பார்த்தான். சேர்ந்தான். மற்றபடி அவனுக்கு நான் குருவெல்லாம் இல்லை’’ என்று தோழமையுடன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் மெல்லிசை மன்னர்.

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மீதும் அவரின் குரல் மீதும் ஜி.கே.வெங்கடேஷுக்கு என்னவோ தனி ஈர்ப்பும் பிரியமும் உண்டு. அதனாலேயே, ராஜ்குமார் படங்களுக்கு இசையமைக்கும் போது அவரை படத்தில் பாடவும் செய்துவிடுவார் வெங்கடேஷ். ’மெலடி கிங்’ என்றுதான் கன்னடத் திரையுலகம் இன்றைக்கும் வெங்கடேஷைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. கன்னட மக்களின் செல்போன்களில், ஜி.கே.வி. பாடல்கள் தரவிறக்கம் செய்யப்பட்டு பதிந்துவைத்திருப்பதை இன்றைக்கும் பார்க்கலாம்.

தமிழிலும் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜி.கே.வெங்கடேஷ். ‘தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே’ என்ற பாடல் இன்றைக்கும் நம் இரவுகளுக்கான பாடல். ’தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட...’ என்ற பாடலை ‘அழகு’ எனும் படத்துக்குத் தந்திருப்பார். இசையும் எஸ்பிபி-யின் குரலும் நம்மை அப்படியே அள்ளிக்கொள்ளும்.

’நெஞ்சில் ஒரு முள்’ படத்தில், ‘நேராகவே கேட்கிறேன் ஒரே பதில் நீ இன்று கூறடி ஏன் இன்னுமே என்னிடம் மெளனமோ கண்மணி’ என்ற பாடலை, தீபன் சக்கரவர்த்தியும் வாணிஜெயராமும் பாடியிருப்பார்கள். ’ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற அருகதை எனக்குக் கிடையாது’ என்று ‘தென்னங்கீற்று’ படத்தில் கே.ஜே.ஜேசுதாஸைப் பாடவைத்திருப்பார் ஜி.கே.வெங்கடேஷ். கன்னடத்தைப் போலவே தமிழிலும் மெலடிப் பாடல்களின் தனித்துவம் காட்டினார்.

இளையராஜாவுக்கு ஜி.கே.வெங்கடேஷ் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. அதனால்தான் கமலை வைத்து, ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘சிங்காரவேலன்’ படத்தை தயாரித்தபோது, படத்தில் ஜி.கே.வெங்கடேஷை ஒரு காட்சியில் நடிக்கவைத்து ரசித்தார் இளையராஜா. அதேபோல், ஏவி.எம்மின் ‘மெல்லத்திறந்தது கதவு’ படத்தில் மெல்லிசை மன்னருடன் இணைந்து இசையமைத்தார் இளையராஜா. படத்தில் இசைக்கல்லூரிப் பேராசிரியராகவும் நடிகர் மோகனுக்குத் தந்தையாகவும் ஜி.கே.வெங்கடேஷை நடிக்கவைத்திருப்பார்.

இப்படி ஜி.கே.வெங்கடேஷ் போல் எத்தனையோ மகத்தான இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் என்ன... நாம் அந்த இசையை மட்டும் ரசித்துவிட்டு, அவர்களை கெளரவப்படுத்தத் தவறிவிடுகிறோம். ஜி.கே.வெங்கடேஷ் எனும் அற்புத இசையை, மெலடி இசையைத் தந்தவரை திரையுலகம் இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும்.

1993 நவம்பர் 13-ம் தேதி ஜி.கே.வெங்கடேஷ் மறைந்தார். இன்று 95-வது பிறந்தநாள். ’மெலடி மேதை’ ஜி.கே.வெங்கடேஷை அவரது பாடல்களுடன் கொண்டாடுவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in