வித்யாசாகர் : ‘மலரே மெளனமா...’ என்று பாடவைத்த மெல்லிசையின் நாயகன்!

- மணிவிழா பிறந்த நாளில் சிறப்புப் பகிர்வு
வித்யாசாகர்
வித்யாசாகர்

திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நமக்கான, நம் மனதுக்கான இசையை வழங்குவதற்காக கலைஞர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், மெல்லிசை மன்னர்கள், திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன், வி.குமார் என்று தொடங்கி, இசைஞானி இளையராஜா, கங்கை அமரன், சந்திரபோஸ், சங்கர் கணேஷ், தேவா, ஏ.ஆ.ரஹ்மான், அனிருத் என்று அந்தப் பட்டியல் நீளமாகப் பயணித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த வரிசையில் எவரின் பாணியிலும் இல்லாமல் இசையமைத்தவர்களை, காலம் தனியாகக் குறித்துவைத்துக் கொண்டாடும். அவரின் இசைக்குள் தங்களின் வாழ்க்கையைக் கோத்துப் பார்த்து, அமைதிகொள்ளும். அப்படியான இசையைக் கொடுத்து நமக்குள் இதம் சேர்த்தவர்களில் வித்யாசாகரும் ஒருவர்!

வித்யாசாகர்
வித்யாசாகர்

ஆந்திரம்தான் வித்யாசாகரின் சொந்தபூமி. ஆனாலும் அங்கிருந்து, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என்றெல்லாம் மிகப்பெரிய ரவுண்டு வந்து, தன் இசையால் எல்லா மொழியின் காதுகளையும் குளிரச்செய்தார். இசைக்கு மொழியேது என்பதை, அவரின் ஒவ்வொரு பாடல்களும் நிரூபித்தன.

சகல இசைகளையும் கற்றுத் தேர்ந்த இளையராஜா, மேற்கத்திய இசையை தன்ராஜ் மாஸ்டரிடம் கற்றுக் கொண்டார். அதேபோல், இசையில் பல நுணுக்கங்களை அறிந்திருந்த வித்யாசாகர், அதே தன்ராஜ் மாஸ்டரிடம் சென்று, மேற்கத்திய இசையைக் கற்றறிந்தார். வித்யாசாகரின் அப்பா ராமச்சந்திர ராவுக்கும் இசைக்கும் தொடர்பு உண்டு. அவரொரு இசைக்கலைஞர். அம்மா சூரியகாந்தம் அன்பைக் குழைத்து ஊட்டிவிட, தந்தை ராமச்சந்திர ராவ் இசையை ஊட்டி வளர்த்தார். நம்மூரில் தந்தை பெரியார் போல, அங்கே 19-ம் நூற்றாண்டில் சமூகத்தில் மாபெரும் புரட்சிகளையும் சீர்த்திருத்தங்களையும் செய்வதற்குப் போராடிய ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் என்பவரின் நினைவைப் போற்றும் வகையில் மகனுக்கு வித்யாசாகர் எனப் பெயரிட்டார்கள்.

1989-ம் ஆண்டு, டாக்டர் ராஜசேகர் நடித்த ‘பூமனம்’ திரைப்படம் முதல் படமாக வித்யாசாகருக்கு அமைந்தது. அதேவருடத்தில் வந்த ‘சீதா’ பெயர் தரவில்லை என்றபோதும் அடுத்து வந்த ‘நிலாப்பெண்ணே’ இவரின் இசையை எல்லோரும் கவனிக்கும் வகையில் ஈர்த்தது. இதேசமயத்தில், தெலுங்குப் பக்கமும் அழைப்பு வரத்தொடங்கியது. ’மைனர் ராஜா’, ’அல்லரிபிள்ளா’, ‘ஒன் பை டூ’ என ஆண்டுக்கு இரண்டு மூன்று படங்கள் வந்தன. வந்த வாய்ப்புகளையெல்லாம் பேர்சொல்லும் படங்களாக, முணுமுணுக்கும் பாடல்களாகத் தந்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இந்தசமயத்தில் நம் ’ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுனுக்கு நன்றி சொல்லவேண்டும். வித்யாசாகரின் முழுத்திறமையையும் நமக்கு அடையாளம் காட்டியவர் இவர்தான். தொடர்ந்து தான் இயக்கி நடித்த படங்களில் வித்யாசாகரைப் பயன்படுத்திக் கொண்டே வந்தார். வித்யாசாகரும், தன் வித்தைகளால், எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார். கதையிலும் சரி, ஆக்‌ஷனிலும் சரி, இசையிலும் சரி, ‘ஜெய்ஹிந்த்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து வந்த ‘கர்ணா’வும் கவிதையும் களேபர ஆக்‌ஷனுமாகச் சேர்ந்து கலக்கியது. ‘மலரே மெளனமா’ பாடலைக் கேட்கும்போது ரசிகர்கள், மெளனமாக இருந்து அந்த மெலடியில் கரைந்து போனார்கள்.

‘’வித்யாசாகர் எனும் இசைக்கலைஞன், இந்தப் பாடலுக்கான டியூனை அனுபவித்துக் கொடுத்தார். எங்கள் இஷ்டத்துக்குப் பாடவைத்தார். நாங்கள் அப்படித்தான் அந்த இசைக்குள்ளேயும் வைரமுத்துவின் வரிகளுக்குள்ளேயும் கலந்து, கொஞ்சிக்குழைந்து பாடலுக்குள் உருகிப்போனோம். மிகச்சிறந்த டியூன்களைப் போடுபவர் வித்யாசாகர்’’ என்று இந்தப் பாடலை மேடைகளில் பாடும்போதெல்லாம் வித்யாசாகரைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் எஸ்பி.பி.

’நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்’ என்று விஜய்யும் சுவலட்சுமியும் நடிக்க, அந்த மெட்டுக்குள் தங்கள் காதலைப் பொருத்திப் பிணைத்துக் கொண்ட ரசிகர்கள், ஏராளமானோர் இருக்கிறார்கள்.

இந்தப் படங்களும் பாடல்களும் வந்த தருணத்தில், இந்தப் பக்கம் ஆந்திராவுக்குப் பறப்பார். மறுநாள் தமிழகத்துக்கு வருவார். மூன்றாவது நாள் கேரளக்கரையோரம் சென்றுவிட்டு, அப்படியே ‘யு டர்ன்’ அடித்து பெங்களூருவுக்கு வந்து இறங்குவார். எல்லா மொழியினரின் மனதின் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்துகொண்டார் வித்யாசாகர்.

ஒருபடத்தில் ஆறு பாடல்கள் என்றால், அதில் இரண்டு மெலடிப் பாடல்களாவது வித்யாசாகருக்காகவே உருவாக்கிவிடுவார்கள் இயக்குநர்கள். அதில் உருகி உருகி டியூன் போட்டு, புல்லாங்குழலையும் தபேலாவையும் மிருதங்கத்தையும் கிடாரையும் கலந்து, நம்மை அந்த இசைக்கடலுக்குள் நீந்தவைத்துவிடுவார்.

இயக்குநர் தரணி, ‘எதிரும்புதிரும்’, ‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’ எனத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டார் வித்யாசாகரை! ‘உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?’ என்று சொல்லி, காதல் வளர்க்காத இளைஞர்களே இல்லை அப்போது! ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் ரஜினி சண்டையிடும் காட்சிக்கு ஒருவிதமான பாடலை பாலசந்தர் கேட்க, மெல்லிசை மன்னரும் அதைக் கொடுத்து அசத்தினார். அதேபோல், ‘தூள்’ படத்தில் விக்ரம் எல்லோரையும் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்க, ‘ஏய்... சிங்கம் போல’ என்று பரவை முனியம்மா பெருங்குரலெடுத்து பாடி நடிக்க, திரைக்குள்ளே நாமே நுழைந்து, அடியாட்களை நாமே வெளுத்துத் துரத்திவிட்ட உணர்வை வித்யாசாகர் கொடுத்தார். தியேட்டரில் விசில் பறந்தது.

இயக்குநர் எழிலும் அஜித்தும் இணைந்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் எல்லாப் பாடல்களையும் கவிதை மாதிரி ரசனை வாசனையைச் சேர்த்து இசையாக்கித் தந்தார். ‘கில்லி’ படத்தின் ‘அர்ஜுனன் வில்லு’ மாதிரி பறந்துவரும் இசை ஒரு பக்கம். ‘கொக்கர கொக்கரக்கோ’ என்று உதித் நாராயண், அவருக்கே உண்டான ஸ்டைலில் பாடுகிற இசை இன்னொரு பக்கம் என்று ‘கபடி’ விளையாடினார், ‘கில்லி’ படத்தில்!

பி.வாசு இயக்கத்தில், ரஜினி நடித்த ‘சந்திரமுகி’ படத்தை மறந்துவிடமுடியுமா என்ன? ‘சந்திரமுகி’யின் ஆட்டத்துக்கு இணையாக எல்லாப் பாடல்களையும் கொடுத்து அசத்தினார். ‘ரிப்பீட்டு...’ என்று உற்சாகமானார்கள் ரசிகர்கள். ‘தேவுடா தேவுடா’ என்று முணுமுணுத்துக் கொண்டாடினார்கள். ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக்கூடாதா?’ என்று கெஞ்சிக்கொஞ்சி காதல் உணர்த்திய பாடலில் கட்டுண்டு போனார்கள். ‘ரா ரா...’ என்று ஷிவாங்கியின் அம்மா ஒருபக்கம் மிரட்ட, ஜோதிகா கண்களை உருட்ட... இசையில் தன் வித்யா லீலைகள் மொத்தத்தையும் அங்கே சமர்த்திருந்தார் வித்யாசாகர்.

‘அன்பே சிவம்’ படத்தின் பாடல்களுக்கு வித்யாசாகருக்கு, காலத்துக்கும் அன்பைப் பொழியும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் நாம்! நாட்டுக்கு மெசேஜ் சொல்லும் சேதிப் பாட்டு, ‘எதாச்சும் போதை ஒண்ணு எப்பவுமே வேணும் கண்ணு, இல்லாட்டி மனுசனுக்கு சக்தி இல்ல’ என்று உதித்தும் ‘தாய்ப்பாலும் போதை தரும் சாராயம் போதை தரும் ரெண்டையுமே பிரிச்செடுக்க புத்தி இல்ல’ என்று கமலும் பாட, அந்தப் பாடலின் தாளக்கட்டுக்குள் நாம் போதையாகித்தான் போனோம்.

கரு.பழனியப்பனின் ‘பார்த்திபன் கனவு’ படத்தில் பாடல்கள் மிகப்பெரிய பங்கு வகித்தன. ‘ஆலங்குயில் கூவும் ரயில்’ என்ற பாடலில் மெல்லிசையைத் தவழவிட்டிருந்தார். அதேபோல், இயக்குநர் லிங்குசாமியும் தன் பங்குக்கு வித்யாசாகரை மிக நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். ‘ரன்’ படத்தில் அத்தனை பாடல்களும் நமக்குள் இன்றைக்கும் தடதடத்துக் கொண்டிருக்கின்றன. ‘காதல் பிசாசே காதல் பிசாசே’ என்று ஆடவைத்த பாடலும் உண்டு. 'தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ/ டீக்கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ’ என்ற பாடலுக்கு தியேட்டரில் டீன் ஏஜ் குரூப் குத்தாட்டம் போட்டது.

இப்படித்தான் என்றில்லாமல் எல்லா விதமான இசையும் கொடுக்கிற வித்யாசாகர், மெல்லிசையில் கூடுதல் மகத்துவத்தைக் கொடுத்தார். கொடுத்துக்கொண்டிருக்கிறார். 1963-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி பிறந்த வித்யாசாகருக்கு 60-வது பிறந்தநாள்.

அறுபதில் அடியெடுத்துவைக்கும் வித்யாசாகரை, ‘நூறாண்டு காலம் வாழ்க’ என வாழ்த்துவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in