’மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்!’ : மனதில் தனியிடம் பிடித்த பாட்டு!

- சிவாஜி - ஜெயலலிதாவின் இணைப்பில் உருவான ‘பாட்டும் பரதமும்’
’மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்!’ : மனதில் தனியிடம் பிடித்த பாட்டு!

காதலுக்கு பல தடைகள் வந்திருக்கின்றன. அதைக் கடந்து ஜெயித்திருக்கிறார்கள். அதேபோல் சந்தேகம் எனும் நோய், மிகப்பெரிய தடையாக இருந்து காதலுக்குக் கட்டையைக் கொடுத்த படங்களும் உண்டு. அந்தத் தடைகளைக் கடந்து ஒருவரையொருவர் புரிந்து கொள்வதும் உணர்ந்து கொள்வதுமாக இருந்துவிட்டால்... அங்கே காலங்கள் கடந்தும் காதல் ஜெயிக்கும்! ‘பாட்டும் பரதமும்’ அப்படிச் சொன்ன கதைகளில்... படங்களில் ஒன்று!

மிகப்பெரிய செல்வச் சீமான் மேஜர் சுந்தர்ராஜன். அவரின் மகன் சிவாஜி. இவருக்கு இருக்கிற கம்பெனிகளை நிர்வாகம் செய்வதற்கு, 24 மணி நேரமே போதவில்லை. இந்தநிலையில், அப்பா கட்டிக் கொடுத்த பள்ளியில் விழா. அதில், பரத நடனம். தலைமையேற்கச் சொல்லி சிவாஜிக்கு அழைப்பு, தட்டிக் கழிக்கப் பார்த்தும் முடியவில்லை. சிவாஜி செல்கிறார்.

ஆர்.எஸ்.மனோகர் மிகப்பெரிய நடன ஆசிரியர். இவரின் மகள் ஜெயலலிதா. தந்தையே குருவாகக் கொண்டு, பரதக் கலையைக் கற்றுக் கொண்டவர். அந்தப் பள்ளி விழாவில், ஜெயலலிதா தன் குழுவினருடன் ஆடுகிறார். ‘’மணியாயிருச்சு’’ என்று சிவாஜி சொல்ல, ஆட்டத்தை பாதியில் நிறுத்துகிறார்கள். தலைமையேற்கும் சிவாஜியைப் பேச அழைக்கிறார்கள்.

‘’எனக்கு இந்த டான்ஸெல்லாம் தெரியாது. அதுக்கெல்லாம் எனக்கு நேரமும் இல்ல. கையைக் காலை இப்படியும் அப்படியுமா உதைக்கறதை டான்ஸ்னு சொல்லி, அதைப் பாக்கறதெல்லாம் வேஸ்ட்’’ என்று சிவாஜி பேச, கொதித்துப் போகிறார் ஜெயலலிதா. ‘’பாராட்டு வாங்கறதுக்கு எப்படி தகுதி தேவையோ, அதேபோல, பாரட்டறதுக்கும் தகுதி வேணும்’’ என்று மைக்கிலேயே சொல்கிறார் ஜெயலலிதா.

சிவாஜியின் சகோதரி மகன் விஜயகுமார். சிவாஜியின் நிர்வாகத்துக்கு உதவிகரமாக இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு வர வேண்டிய டான்ஸ் நிகழ்ச்சிகளை ரத்து செய்யவைக்கிறார் விஜயகுமார். ஆனால், இதையெல்லாம் செய்தது சிவாஜிதான் என்று நினைத்து, கோபமாக சென்று சிவாஜியைச் சந்தித்து நியாயம் கேட்கிறார் ஜெயலலிதா. அப்போதுதான் இதெல்லாம் விஜயகுமாரின் வேலை என்பது சிவாஜிக்கும் ஜெயலலிதாவுக்கும் தெரியவருகிறது. மீண்டும் சபாக்களில் நடனமாட வாய்ப்பு கிடைக்கிறது. அனாதை இல்லத்துக்கு நிதி திரட்ட, நடன நிகழ்ச்சி ஒன்று. நிதியும் தருகிற சிவாஜி, நடனம் காணவும் செல்கிறார். இப்படியாக வளர்கிறது காதல்.

முதலில், ஜெயலலிதாவின் அப்பா ஆர்,எஸ்,மனோகர் எதிர்க்கிறார். ‘’எம் பொண்ணைப் போலவே பரதக்கலை தெரிஞ்சவங்களுக்குத்தான் எம் பொண்ணைக் கொடுப்பேன்’’ என்று சொல்ல, மனோகரின் சகோதரி சுகுமாரியிடம் சென்று, பரதம் கற்றுக் கொண்டு, சிவாஜியும் ஜெயலலிதாவும் நடனமாடுகிறார்கள். ஜெயிப்பது யாராக இருக்கும்? வேறு யார்? சிவாஜிதான்! அதன் பின்னர் திருமணத்துக்கு சம்மதிக்கிறார்.

இந்தநிலையில் சிவாஜியும் ஜெயலலிதாவும் நெருங்கிப் பழகுகிறார்கள். நெருக்கமாகிறார்கள். கையில் இருக்கும் மோதிரத்தை ஜெயலலிதாவுக்கு அணிவித்து திருமணம் செய்துகொண்டுவிட்டோம் என்று சொல்கிறார்.

ஊரில் இருந்து அப்பா மேஜர் வருகிறார். தன் காதலியை அப்பாவுக்கு அறிமுகப்படுத்துகிறார் சிவாஜி. ‘’கூத்தாடுற பொம்பளையையெல்லாம் கல்யாணம் பண்ணிக்க அனுமதிக்க முடியாது’’ என மறுக்கிறார் மேஜர். இதனிடையே ஒரு சின்ன சதி செய்யப்படுகிறது. அந்தச் சூழ்ச்சிக்குள் சிக்குகிற சிவாஜி, ஜெயலலிதாவை சந்தேகப்படுகிறார். இருவரும் பிரிகிறார்கள். ஒருகட்டத்தில் உண்மையெல்லாம் சிவாஜிக்குத் தெரிகிறது. ஜெயலலிதாவைத் தேடிப் போகிறார். ஆனால், அவர் அங்கே இல்லை. எங்கோ சென்றுவிட்டார்.

பிறகு சொத்து சுகங்களையெல்லாம் விட்டுவிட்டு, நடனப் பள்ளியே கதியென்று இருக்கிறார் சிவாஜி. குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அங்கே சிங்கப்பூரில் தன் தோழியின் அரவணைப்பில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஜெயலலிதா, அங்கேயே வாழ்ந்து வருகிறார்.

இதனிடையே, அப்பா மேஜர், மனோகரின் தங்கை சுகுமாரியுடன் ஒருகாலத்தில் உறவு வைத்துக்கொண்டிருந்ததும் அவர்களுக்கு மகள் ஒன்று பிறந்து குமரியாக வளர்ந்திருக்கிறாள் என்பதும் சிவாஜிக்குத் தெரிகிறது. அப்பாவிடம் சென்று, ’’அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என்கிறார். அதன்படியே விஜயகுமாருக்கும் சுகுமாரி மகளுக்கும் திருமணம் நடக்கிறது. இந்த சமயத்தில், வெளிநாட்டில் இருந்து வருகிற ஜெயலலிதா, தன் காதலன் சிவாஜிக்குத்தான் திருமணம் நடக்கிறது போல... என்று புரிந்துகொண்டு, வேதனையுடன் வெளிநாடு செல்கிறார்.

பிறகு சிவாஜியும் ஜெயலலிதாவும் ஒன்று சேர்ந்தார்களா... அவர்களுக்கு குழந்தை பிறந்ததா... வளர்ந்து என்னாவானான் என்பதையெல்லாம் சொல்கிறது ‘பாட்டும் பரதமும்’.

சிவாஜி கணேசன் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லுவார்கள். இந்தப் படத்தில் பரதக் கலைஞராக நடித்தார் சிவாஜி. அவருக்கு ஜோடியாக ஜெயலலிதா. சிறந்த நடிப்பை ஜெயலலிதா வெளிப்படுத்திய படங்களில் இந்தப் படமும் ஒன்று. தெலுங்கில் வந்த இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்தார்கள். சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தாக்களில் ஒருவரான பாலமுருகன், அட்டகாசமான வசனங்களை எழுதினார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் அமைந்திருந்தன. அருண் பிரசாத் மூவிஸ் பேனரில் படங்களைத் தயாரிக்கும் இயக்குநர் பி.மாதவன், இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கினார்.

சிவாஜியின் அப்பாவாக மேஜர் சுந்தர்ராஜன், சகோதரரின் மகனாக விஜயகுமார், ஜெயலலிதாவின் அப்பாவாக ஆர்.எஸ்.மனோகர், ஜெயலலிதாவின் அத்தையாக சுகுமாரி. மனோகரின் நடனக்குழுவில் இருப்பவராக மனோரமா, கூடுவாஞ்சேரி குப்புசாமி என்ற பெயரில் பெண்களைப் பார்த்து பல்லிளிக்கும் மைனராக எம்.ஆர்.ஆர்.வாசு, அவரின் கைத்தடியாக பகோடா காதர் என பலரும் நடித்திருந்தார்கள்.

சிவாஜியும் ஜெயலலிதாவும் முதிர்ந்த காலத்தில், இணைவார்கள். அநேகமாக, ஜெயலலிதா நரை முடி விக், மூக்குக்கண்ணாடி சகிதமாக வயதான தோற்றத்தில் இந்தப் படத்தில் நடித்தார். இந்த ஜோடியின் மகன் அருண் எனும் கேரக்டரில் சிவாஜியே நடித்தார்.

இன்னொரு சுவாரஸ்யம்... எத்தனையோ படங்களில், சிவாஜிக்கு ஜோடியாகவும் விஜயகுமாருக்கு ஜோடியாகவும் நடித்த ஸ்ரீப்ரியாவின் ஆரம்பக் கால படங்களில் இதுவும் ஒன்று. இதில், விஜயகுமாரின் மகளாக நடித்தார். கடைசியில் மகன் அருண் கேரக்டர் சிவாஜியை, மணம் முடிப்பார் ஸ்ரீப்ரியா.

’மழைக்காலம் வருகின்றது’ என்ற பாடல். வாணி ஜெயராம் பாடினார். ’சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்’ என்ற பாடலை டி.எம்.எஸ்., பி.சுசீலா பாடினார்கள். ’தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு/ தேவிக்குத் தூது செல்ல தென்றலே ஓடு’ என்ற பாடலை மனமுருகிப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்.

’உலகம் நீயாடும் சோலை உறவைத் தாலாட்டும் மாலை’ என்ற பாடல். ஜெயலலிதாவைக் காணோம். எங்கோ சென்றுவிட்டார். ஒரு மயிலைப் பார்ப்பார் சிவாஜி. இருவரும் மயிலாக வந்து பாட்டுப் பாடி நடனமாடுவார்கள். பாடலின் முடிவில், பெண் மயிலான ஜெயலலிதா மறைந்துவிட, மயில் வேடத்துடன் சிவாஜி திரையில் ஒற்றை ஆளாகக் கலங்கி, ஆடமுடியாமல், மெல்ல அசைந்தாடி வருவார். நம் மனம் கனக்கச் செய்யும் வகையில் நடித்திருப்பார் சிவாஜி.

மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்/ மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம்/ பூவைக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம்/ பூவினில் தேனீ சாந்தி முகூர்த்தம்/ கன்னியை நீராட்ட கங்கையின் தீர்த்தம்/ காதலில் கலந்தாலே ஏன் இந்த மாற்றம்/ மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்/ மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம்’ என்ற பாடல், மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்தது.

’ஆதித்தன் மேனியை மேகங்கள் மூட/ ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட/ வசந்தத்தின் பாற்குடம் ஊர்வலம் போக/ வந்துவிட்டேன் கண்ணா மணமகளாக/ மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்/ மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம்’ என்று பி.சுசீலா தன் குரலால் கிறங்கடிப்பார்.

ஏவிய கணைகள் இருபுறம் தாக்க/ ஏலத்துப் பூங்குழல் வானத்தை பார்க்க/ ஆவியில் ஆவியை ஆண்டவன் சேர்க்க/ ஆனந்தம் நான் கொள்ள யாரிடம் கேட்க/ மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்/ மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம்’ என்ற பாடலை இரவுகளில் கேட்டுப் பாருங்கள். கவியரசர், மெல்லிசை மன்னர், டி.எம்.எஸ்., பி.சுசீலா எனும் நால்வர் கூட்டணி, ஒரு தோரண வீதிக்குள் நம்மை அழைத்துச் செல்வது போல் இருக்கும்!

எஸ்.பி.பி.க்கும் ஒரு பாடல் உண்டு. ஆங்கிலம் கலந்த அந்தப் பாடல், மகன் சிவாஜிக்காக! அதேபோல, ஆங்கில ஸ்டைலில் அமைந்த அந்தப் பாடலுக்கு நடுவே, ரசிகர் ஒருவர் கோரிக்கையை பேப்பரில் எழுதித் தருவார். உடனே சிவாஜி, அதாவது எஸ்.பி.பி., ‘அடி என்னடி ராக்கம்மா’ என்கிற ‘பட்டிக்காடா பட்டணமா’ பாடலை, டி.எம்.எஸ். பாடலைப் பாடியிருப்பார். அந்த நான்கு வரியே நமக்கு அமர்க்களமாக இருக்கும்.

ஆனால் என்ன... படம் ஓடவில்லை. ‘பாட்டும் பரதமும்’ என்று தலைப்பு வைத்துவிட்டு, அதையெல்லாம் கடந்து, பணம், செல்வாக்கு, அந்தஸ்து, சந்தேகம் என்றெல்லாம் சுற்றி எங்கோ சென்று, எங்கெல்லாமோ சென்று நிறைவடையும் என்பது கூட தொய்வான திரைக்கதையாகப் பார்க்கப்பட்டது.

1975-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 6-ம் தேதி வெளியானது ‘பாட்டும் பரதமும்’ திரைப்படம். படம் வெளியாகி, 47 ஆண்டுகளாகின்றன. பாட்டும் நன்றாக இருந்தது. பரதமும் ஈர்க்கத்தான் செய்தது. ஆனால் கதைதான் ஈர்க்கவில்லை. ஆனாலும் அந்த ‘மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்’ என்ற பாடல் இப்போது கேட்டாலும் நம்மை என்னவோ செய்யும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in