படப்பிடிப்பில் மீண்டும் கவனம் செலுத்தும் மேக்னா ராஜ்

படப்பிடிப்பில் மீண்டும் கவனம் செலுத்தும் மேக்னா ராஜ்

தனது காதல் கணவர் மறைவுக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த மேக்னா ராஜ், இப்போது படப்பிடிப்பில் மீண்டும் கவனம் செலுத்துகிறார்.

தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ள இவர், வைதேகி காத்திருந்தாள், தப்பு தாளங்கள் படங்களில் நடித்த பிரமிளா, கன்னட நடிகர் சுந்தர் ராஜ் தம்பதியின் மகள்.

நடிகை மேக்னா, கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக, சிரஞ்சீவி சார்ஜா திடீரென மரணம் அடைந்தார். இது, இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது மேக்னா ராஜ் ஐந்து மாத கர்ப்பமாக இருந்தார். பின்னர் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா என பெயரிடப்பட்டது.

இந்நிலையில் அவர் இப்போது நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளியான ’இருவுடில்லா பிட்டு’ என்ற படத்தில் நடித்திருந்தார் மேக்னா. அதன் பிறகு சிரஞ்சீவி சார்ஜாவின் நண்பர், பன்னகா பரங்கா இயக்கும் த்ரில்லர் படத்தில் நடிக்க இருப்பதாகக் கடந்த வருடம் கூறியிருந்தார்.

இந்நிலையில், சப்தா ( Shabda)என்ற படத்தில் இப்போது நடிக்கிறார். இதில் அவர் மனநல மருத்துவராக நடிக்க இருக்கிறார். ’இருவுடில்லா பிட்டு’ படத்தை இயக்கிய கந்தராஜ் கன்னல்லி இயக்குகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in