ஏப்ரலை குறிவைக்கும் மெகா பட்ஜெட் படங்கள்: தியேட்டர் கிடைக்குமா?

ஏப்ரலை குறிவைக்கும் மெகா பட்ஜெட் படங்கள்: தியேட்டர் கிடைக்குமா?

கரோனா மொத்தமாகக் குதறிப் போட்டிருக்கிறது, திரைப்படத் துறையை. பாதி முடித்த படங்களின் படப்பிடிப்புக்குச் செல்வதில் இருந்து, எல்லாப் பணிகளும் நிறைவுற்ற படங்களை வெளியிடுவது வரை பல்வேறு விஷயங்களில் குழம்பிக் கிடக்கிறது திரைத் துறை.

தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி, ஞாயிறு முழு ஊரடங்கு போன்றவற்றால், பல மெகா பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது. அடுத்த மாதம் உச்சம்பெற்று அதற்குப் பிறகுதான் கரோனா மூன்றாவது அலை குறையும் என்கிறார்கள். இதனால், மார்ச், ஏப்ரலைக் குறிவைத்து பல திரைப்படங்கள் ரிலீஸ் முயற்சியில் இருக்கின்றன.

‘கே.ஜி.எப் 2’ படத்தில் யாஷ், சஞ்சய் தத்
‘கே.ஜி.எப் 2’ படத்தில் யாஷ், சஞ்சய் தத்

முதல் பாகம் ஹிட்டானதால், இந்தி, தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ’கே.ஜி.எப் 2’. யாஷ், ஸ்ரீனிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டாண்டன் என பலர் நடித்திருக்கும் இந்தப் படம் தமிழிலும் வெளியாகிறது. இதன் ரிலீஸ், கரோனாவால் பலமுறை தள்ளிப் போனதை அடுத்து, அவர்கள் அவர்கள் குறித்திருக்கும் தேதி ஏப்ரல் 14. அதே தேதியில்தான் விஜய்யின் பிரமாண்ட ’பீஸ்ட்’ வெளியாக இருக்கிறது என்கிறார்கள்.

அதோடு ஆமிர் கான் நடித்திருக்கும் ’லால் சிங் சத்தா’வும் ஏப்ரல் 14-ம் தேதி ரிலீஸ் என அறிவித்திருக்கிறார்கள். இந்தப் படம் இந்தியில் உருவாகி இருந்தாலும் தென்னிந்திய மார்க்கெட்டையும் குறிவைத்து பான் இந்தியா படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

’ஆர்ஆர்ஆர்’ படத்தில்
’ஆர்ஆர்ஆர்’ படத்தில்

இதற்கிடையே ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டமான ‘ஆர்ஆர்ஆர்’ மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் என அறிவித்துவிட்டார்கள். ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கி இருக்கும் படம் என்பதால், இந்தப் படத்துக்கும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த மெகா பட்ஜெட் படங்கள், நூற்றைம்பது, இருநூறு கோடியை தியேட்டர்கள் மூலம் ஈட்ட இலக்கு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அனைத்தும் பெரிய முதலீடுகளைக் கொண்ட படங்கள் என்பதால், தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள்.

'லால் சிங் சத்தா’ ஆமிர்கான், கரீனா கபூர்
'லால் சிங் சத்தா’ ஆமிர்கான், கரீனா கபூர்

ஏப்ரல் 14-ல் விஜய்யின் ‘பீஸ்ட்’ வெளியானால் தமிழகத்தில் இந்த படத்துக்குத்தான் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும். தமிழகத்திலும் அதிக வருமானத்தைக் குறி வைத்திருக்கும் ‘கே.ஜி.எப் 2’, ‘லால் சிங் சத்தா’ படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதுவும் இந்தப் படங்கள் நன்றாக இருந்து, அடுத்து ஏப்ரல் 28-ம் தேதி ’ஆர்ஆர்ஆர்’ படம் வந்தால் தியேட்டர்களில் அதிகமான காட்சிகள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதோடு ’வலிமை’ உட்பட மேலும் சில படங்களும் ஏப்ரல் மற்றும் கோடையைக் குறிவைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதனால், தயாரிப்பாளர்களும் தியேட்டர் அதிபர்களும் இப்போதே குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in