மீரா ஜாஸ்மின்
மீரா ஜாஸ்மின்

குறும்புக் கண்களால் கொள்ளை கொண்ட மீரா ஜாஸ்மின்!

- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நடிகையைப் பிடிக்கும். ‘இந்த நடிகை போல் வருமா’ என்று ஒரு சிலரும் ‘அந்த நடிகையைப் போல வருமா’ என்று இன்னொரு சிலரும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால், எல்லோருக்கும் பிடித்த நடிகராகவோ நடிகையாகவோ இருப்பது என்பதுதான் மிகப்பெரிய சாதனை. அப்படி, எல்லோருக்கும் பிடித்த நடிகையர்களின் பட்டியலில் மீரா ஜாஸ்மினுக்கும் தனியிடம் உண்டு.

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளம்தான் பிறந்த மண். 1982-ம் ஆண்டு பிறந்த, ஜாஸ்மின் மேரி ஜோசப், சிறுவயதில் இருந்தே எதிலும் பரபரவென்றும் எப்போதும் துறுதுறுவென்றும் இருப்பார். அந்த குணங்கள்தன் மற்றவர்களை அவர் பக்கம் ஈர்த்தன. மலையாள இயக்குநர் லோகிததாஸ், இவரின் தனித்துவத்தைப் புரிந்துகொண்டார். படங்களில் நடிக்க வீட்டாரிடம் சம்மதம் வாங்கினார். நடிக்கவைத்தார். முதல் படத்திலேயே மீரா ஜாஸ்மினின் நடிப்பு பேசப்பட்டது.

’சூத்ரதாரன்’, ’கிராமபோன்’, ‘கஸ்தூரி மான்’ என படங்கள் வரிசையாக வந்தன. தொடர்ந்து லோகிததாஸ், தன் படங்களில் மீராவை பயன்படுத்தினார். அவரின் நடிப்புத் திறனானது, ஒவ்வொரு படத்திலும் ஒளிர்ந்துகொண்டே வந்தது. மலையாள இயக்குநர் கமல் இயக்கத்தில், ‘ஸ்வப்னக்கூடு’ படத்தில் மீரா ஜாஸ்மினின் நடிப்பு மிகுந்து பேசப்பட்டது. மீண்டும் அவர் இயக்கத்தில், ‘பெருமழைக்காலம்’ படத்தில் நடித்தபோது, மீரா ஜாஸ்மின் மிகச்சிறந்த நடிகையாக கொண்டாடப்பட்டார். சத்யன் அந்திக்காடு இயக்கத்தில், ’அச்சுவிண்டே அம்மை’ படத்தில் ஆகச்சிறந்த நடிப்பைத் தந்திருந்தார்.

தமிழ் சினிமாவில், பரபரவெனவும் சுறுசுறுவெனவும் இருந்த ஜெயசித்ரா, படாபட் ஜெயலட்சுமிக்குப் பிறகு அப்படியான கேரக்டருக்குரிய நடிகை பொருந்தாமல்தான் இருந்தார். அந்த சமயத்தில்தான் ‘ரன்’ படத்தில் இயக்குநர் லிங்குசாமி, மீராவுக்கு அட்டகாசமான கதாபாத்திரத்தை வழங்கினார். மாதவனும் மீரா ஜாஸ்மினும் பொருந்திப்போனார்கள். மீராவின் கண்கள் பேசும் ஜாலம், தமிழக ரசிகர்களையும் கவர்ந்திழுத்தது.

ஒருபக்கம் ஒற்றை மனிதனாக இருக்கும் மாதவனுக்கும் இன்னொரு பக்கம் அடியாள் பலத்துடன் இருக்கும் அண்ணனுக்கும் நடுவே அல்லாடிக்கொண்டும் பயந்துகொண்டும் மிரட்சியாகவும் அதேசமயம் காதலுடனும் என மீரா காட்டிய முகபாவனைகள், கதாபாத்திரத்துக்கு அழகுக்கு அழகு சேர்த்தன.

மீரா ஜாஸ்மின்
மீரா ஜாஸ்மின்

’புதிய கீதை’ படத்தில் விஜய்யுடன் நடித்தார். ’ஆஞ்சநேயா’ படத்தில் அஜித்துடன் கலக்கினார். எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தக் கதாபாத்திரம் கதைக்கு பலம் சேர்க்கிறதோ இல்லையோ... தன் நடிப்பால், அவருடைய கதாபாத்திரத்தை அழகுபடுத்தினார். படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வருகிற ரசிகர்கள், மீரா ஜாஸ்மின் பற்றியும் அவரின் பேசும் கண்கள் குறித்தும் அந்த கபடமற்ற புன்னகை குறித்தும் முகபாவனைகள் குறித்தும் சிலாகித்துப் பேசினார்கள். இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக, தமிழகத்தில் மீரா ஜாஸ்மினுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.

மணி ரத்னம் இயக்கத்தில், ‘ஆய்த எழுத்து’ படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கி அசத்தினார் மீரா ஜாஸ்மின். அழகம்பெருமாள் இயக்கத்தில் ஸ்ரீகாந்துடன் ‘ஜூட்’ படத்திலும் எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கத்தில் ஸ்ரீகாந்துடன் ‘மெர்க்குரிப்பூக்கள்’ படத்திலும் நடித்தார். எவருடன் ஜோடியாக நடித்தாலும் அவருக்கு இவரே சரியான ஜோடி என்று பேரெடுத்ததுதான் மீரா ஜாஸ்மின் ஸ்பெஷல். மாதவன், விஜய், அஜித், ஸ்ரீகாந்த், பிரசன்னா என எவருடன் நடித்தாலும் அந்த ஜோடி ரசிக்கப்பட்டது. அதற்குக் காரணம்... மீராவின் குறும்புக் கண்களும் வெள்ளந்திச் சிரிப்பும்!

இதேசமயத்தில், தெலுங்குப் பக்கம் ‘ரா ரா’ என்று சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கேயும் கதாபாத்திரத்தை மிகச் சரியாக தேர்வு செய்து, ஜொலித்தார் மீரா ஜாஸ்மின். பவன் கல்யாண், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலருடனும் நடித்தார். அதேபோல், கன்னடத் திரையுலகிலும் இவருக்கு படங்கள் குவிந்தன. புனித் ராஜ்குமாருடன் இவர் நடித்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

இந்தக் காலகட்டத்தில், இயக்குநர் லிங்குசாமி, மீண்டும் மீரா ஜாஸ்மினை நாயகியாக்கினார். விஷாலை வைத்து இயக்கிய ‘சண்டக்கோழி’யின் நாயகியானார். அந்தக் குறும்புக் கதாபாத்திரத்தை, அழகுடனும் மெருகுடனும் சேட்டைகளும் குறும்புகளுமாக கலக்கியெடுத்தார் மீரா ஜாஸ்மின். படத்தில், தான் வருகிற ஒவ்வொரு காட்சியிலும் தன் நடிப்பால் ஸ்கோர் செய்துகொண்டே வந்து அசத்தியிருப்பார் மீரா ஜாஸ்மின்.

சினிமா தியேட்டரில் பண்ணுகிற அலப்பறையாகட்டும் குரல் மாற்றி அம்மாவைப் போல் விஷாலிடம் பேசிவிட்டு, அப்படியே கலைஞரைப் போல் பேசிக்காட்டுவதாகட்டும், ராஜ்கிரணைப் பார்த்து பம்முவதும் பிறகு அவரையே தன் குறும்பால் சிரிக்கவைப்பதாகட்டும்... ‘சண்டக்கோழி’யின் சண்டைகளுக்கு மத்தியிலும் கவிதை மாதிரி ஜொலித்தார் மீரா ஜாஸ்மின்.

தனுஷுடன் நடித்தார். பரத்துடன் நடித்தார். ‘நேபாளி’ படத்தில் இவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. அடுத்த படத்துக்கு புக் செய்வதற்கு வரிசை கட்டி தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் வந்துகொண்டிருந்த தருணத்திலேயே... மார்க்கெட் வேல்யூ கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த சமயத்திலேயே... திருமணம், குடும்பம், உறவுகள் என்று செட்டிலாகிவிட்டார் மீரா ஜாஸ்மின். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் அந்தக் குறும்புக் கதாபாத்திரங்களுக்கு ஒவ்வொரு விதமாக உயிரூட்டிக் கொண்டே இருப்பார் மீரா ஜாஸ்மின். எப்போது நடித்தாலும் இன்றைய ரசிகர்களையும் தன் நடிப்பாலும் சிரிப்பாலும் கவர்ந்துவிடுகிற தனித்தன்மைதான் மீரா ஜாஸ்மின் வாங்கிவந்த வரம்!

1982-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பிறந்த மீரா ஜாஸ்மினுக்கு, வாச வாழ்த்துகளை நேசத்துடன் சொல்லுவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in