'மீனாவின் நிலை என் விரோதிக்குக்கூட வரக்கூடாது’! : கலா மாஸ்டர் வேதனை

'மீனாவின் நிலை என் விரோதிக்குக்கூட வரக்கூடாது’! : கலா மாஸ்டர் வேதனை

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் இறப்பு என்ற செய்தி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மீனாவின் சைதாப்பேட்டை வீட்டில் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. ரஜினி, குஷ்பு உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இறுதி நிகழ்ச்சிக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். இதில் மீனாவுக்கு பக்கபலமாக நிகழ்ச்சியில் இறுதி நிகழ்ச்சிகளுக்கான அனைத்து வேலைகளையும் முன்னெடுத்து கலா மாஸ்டர் செய்திருந்தார். இது பலரையும் நெகிழ செய்தது. இது குறித்து அவர் யூடியூப் தளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், "நானும், மீனாவும் கிட்டத்தட்ட 25 வருடங்களாக நண்பர்கள். வித்யாசாகர் என்னை 'சேச்சி' என்று தான் வாய் நிறைய அழைப்பார். மீனாவின் அனைத்து நல்லது கெட்டதிலும் நான் இருந்திருக்கிறேன். நல்ல விஷயங்களில் இருக்க முடியாமல் போனால் கூட, இது போன்றவைகளில் துணை நிற்க வேண்டும் என்று நினைப்பேன்.

கடந்த மூன்று மாதங்களாகவே வித்யாசகருக்கு உடல்நிலை சரியில்லை. ஜனவரியில் மீனா குடும்பத்திற்கே கோவிட் வந்த போது கூட இவருக்கு மைல்ட்டாக தான் இருந்தது. சரியான பின்பு தான் அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

அதில் இருந்து மீனாவைப் போல கணவரைப் பார்த்துக் கொண்டது யாராகவும் இருக்க முடியாது. மருத்துவமனை, கோயில் என அப்படி பார்த்து கொண்டாள். எப்போதும் குழந்தை தன்மையுடன் சிரித்துக் கொண்டே இருக்கும் மீனாவை இப்படி கண்களில் கண்ணீருடன் பார்க்க எங்களுக்குத் தைரியம் இல்லை. ஆனால், நேற்று அமைதியாக அவள் இதைக் கையாண்டது பலருக்கும் ஆச்சரியம் தான். நண்பர்களாக எங்களால் கூட இருந்து என்ன செய்ய முடியுமோ அதை செய்தோம். நட்புக்கு அதுதானே அர்த்தம்?

வித்யாசாகருக்கு நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மாற்றுவதற்கு அவ்வளவு முயற்சி செய்த மருத்துவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி. மீனா, சாகர் ஒருவருக்கொருவர் தங்கள் வேலையில் அப்படி உதவியாகவும், அன்பாகவும் இருப்பார்கள். அடுத்த மாதம் 12-ம் தேதி அவர்களுக்குத் திருமண நாள் வர இருக்கிறது. 'எனக்கு மட்டும் ஏன் சேச்சி இப்படி நடக்கணும்?' என மீனா கேட்ட போது உடைந்து விட்டேன். நைனிகாவுக்கும் நேற்று தான் விஷயமே தெரிந்தது. அந்த குழந்தையும் கோபமாக சோர்ந்து போய் விட்டாள். இந்த நிலை என் விரோதிக்குக் கூட வரக்கூடாது" என வருத்தத்துடன் பேசி இருக்கிறார் கலா மாஸ்டர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in