
தளபதி68 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியானதன் மூலம், கடந்த 2 தினங்களாக கூகுளில் அதிகம் தேடப்படும் பிரபலமாகி இருக்கிறார் மீனாட்சி சௌத்ரி.
முன்னாள் மிஸ் ஹரியானா மற்றும் மிஸ் இந்தியா அழகியான மீனாட்சி சௌத்ரி, தளபதி68 திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து டூயட் பாட இருக்கிறார். வெங்கட் பிரபு - விஜய் இணையும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்த திரைப்படத்தில், விஜய்க்கு இரட்டை வேடம் என்கிறார்கள். இதில் ஜுனியர் விஜய்க்கு மீனாட்சி ஜோடி என சொல்லப்படுகிறது.
26 வயதாகும் மீனாட்சி சௌத்ரியின் பூர்வீகம் ஹரியனா. தந்தை ஒரு ராணுவ அதிகாரி. படித்ததும் ராணுவப் பள்ளியில்தான். தந்தை ராணுவத்தில் பணிபுரிந்ததால் பள்ளிப்பிராயம் தொட்டே, படிப்போடு விளையாட்டும் மீனாட்சிக்கு எளிதில் பரிச்சயமானது. நீச்சல் மற்றும் பாட்மிட்டன் போட்டிகளில் மாநில அளவில் வீராங்கனையாக வலம் வந்தார். கல்லூரிப் படிப்பாக பல் மருத்துவத்தை தேர்ந்தெடுத்தபோது, மீனாட்சியின் அழகு வெளியே பளிச்சிட்டது.
மிஸ் ஹரியானா மற்றும் மிஸ் ஃபெமினா இந்தியா போட்டிகளில் மீனாட்சி வென்ற பிறகு, மாடலிங் மற்றும் சினிமா உலகம் அவருக்கான கதவுகளை அகலத் திறந்தன. டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியான ’அவுட் ஆஃப் லவ்’ என்ற வெப்சீரிஸில் தோன்றினார். தொடர்ந்து 3 தெலுங்குப்படங்களில் நடித்தவர், விஜய் ஆன்டணியின் ’கொலை’ திரைப்படம் வாயிலாக கோலிவுட்டில் வலது கால் வைத்தார். தற்போது விஜய்க்கு ஜோடியானதில் இந்திய அளவில் திரும்பி பார்க்கப்படும் நடிகையாகி இருக்கிறார்.
மகேஷ் பாபு ஜோடியாக ஒரு படம் உட்பட கைவசம் 3 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தமிழில் ’சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் என பிஸியாக இருந்தவரை, தளபதி68 திரைப்படத்துக்காக வளைத்துப் போட்டிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் மூலமாக இளசுகளின் கனவு நாயகியாக காத்திருக்கும் மீனாட்சி சௌத்ரி, “விஜய் ஜோடியாக நடிக்கவிருப்பது கனவு போல இருக்கிறது” என நெக்குருகிறார். மேலும், “திரையில் நிச்சயம் மேஜிக்கை பார்ப்பீர்கள்” எனவும் உத்திரவாதம் அளித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!
33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!