துக்க வீட்டில் எல்லை மீறும் ஊடகங்கள்; வலுக்கும் கண்டனங்கள்!

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

துக்க வீட்டில் ஊடகங்கள் எல்லை மீறுவதை கண்டித்து பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா விஜய் ஆண்டனி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, அவரது வீட்டில் பெரும்பாலான ஊடகங்களின் கேமிராக்கள் குவிந்தன. பிரபலங்கள் மீரா குறித்து பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல், விஜய் ஆண்டனி குடும்பத்திற்கும் தங்களது ஆறுதலை பகிர்ந்து கொண்டனர்.

விஷயம் அதன் பிறகே கைமீறி, நாகரிக வரம்பை மீறியது. சில ஊடகங்கள் துக்க வீட்டிற்கு வந்த மீராவின் ஆசிரியர்கள் சிலரிடம் கட்டாயப்படுத்தி கருத்துகளைக் கேட்டனர். மேலும், கல்லறை வரைக்கும் சென்று வீடியோக்களை பதிவு செய்தனர். இது பார்ப்பவர்களை முகம் சுழிக்கும் வைக்கும் விதமாக அமைந்தது. இது விஜய் ஆண்டனி வீட்டில் மட்டுமில்லாமல், பிரபலங்களின் வீடுகளில் நிகழும் துக்க காரியங்களின் போது, சில மீடியாக்கள் செய்கிற அட்ராசிடியாகவே தொடர்ந்து வருகிறது. பல சமயங்களில் இப்படி எல்லை மீறுவதை கண்டித்து பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வந்துள்ளனர்.

‘பிரபலங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்லவை கெட்டவை எதுவாயினும் ஊடகங்களே அவற்றை முக்கியப்படுத்துகின்றன. ஆயினும் ஒருவர் வாழ்வில் துக்க விசயங்கள் நடக்கும்போது, அவை எவ்வாறு கையாளப்பட வேண்டுமென்ற அடிப்படை அறிவும், கடமையும் ஊடகவியலாளர்களுக்கு மிக முக்கியமான பொறுப்பாகும். சமீபத்திய இரு துயர சம்பவங்களில் சில ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் முற்றிலும் தவறான, அறமற்ற செயல். அதற்காக எனது வன்மையான கண்டனத்தையும், இவ்வாறான போக்கை இனியாவது தவிர்க்குமாறு எனது வேண்டுகோளையும் இங்கே பதிவு செய்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

'மாநாடு’ படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி, ‘மரண வீட்டில் கூட காமிரா வைத்து காசு பார்க்க ஒரு கூட்டம் வந்துவிட்டது.. மீடியா என்ற பெயரில் சிலரும்... மீடியா இல்லாமல் செல்போனைத் தூக்கிக் கொண்டு படம்பிடிக்கும் பலரும் பெருகிவிட்டார்கள். நமது இழப்பு அவர்களுக்கு லைக்கும் காசும். நமது துக்கத்தை அவர்களது துக்கமாக பார்க்கத் தவறுகிறார்கள். துக்க வீட்டிலாவது இனி காமிரா அனுமதியில்லை என்ற முடிவெடுக்க வேண்டும். நம் வீட்டில் நாம் யாரை அனுமதிக்க வேண்டும். கூடாது என்ற முடிவையாவது அனைவரும் இணைந்து எடுக்க வேண்டும். இல்லையேல் துக்க வீட்டைக்கூட கொண்டாட்ட நிகழ்வு போல மாற்றிவிடுகிறார்கள். கொடுமையான நிகழ்வு இது. இதுபோன்ற நிகழ்வுகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று' எனக் கூறியுள்ளார்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... என்பது போல், இதற்கான தீர்வாக, சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக முக்கியம். இறந்தவர் குறித்து கருத்து கேட்கிறேன் பேர்வழி என்று துக்க மனநிலையில், பதறியடித்து வருபவர்களை இடைமறித்து மைக்கை நீட்டுகிற அவலங்கள் நிகழ்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in