
நடிகர் மயில்சாமியின் மரணம் பலரையும் உலுக்கி வருவதன் மத்தியில், அவரது மறைவுக்கு தூக்கம் தொலைத்ததே காரணம் என்றும், உடல் ஆரோக்கியத்துக்கு தூக்கம் மிகவும் அவசியம் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பால் தமிழக மக்களை கவர்ந்திருந்த மயில்சாமியின் எதிர்பாரா மரணம், பெருத்தளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரைத்துறைக்கு அப்பால், அரசியல், ஆன்மிகம், பொதுச்சேவை என மயில்சாமி பரந்து செயல்பட்டதும், அவரால் பலரும் பலனடைந்திருப்பதும் அவரது மறைவையொட்டிய பேட்டிகளின் வழியே தெரிய வருகின்றன.
தன்னுடைய வருமானம் எவ்வாறாக இருப்பினும், இருப்பதைக்கொண்டு பிறருக்கு உதவி செய்வதில் மயில்சாமி மிகுந்த ஈடுபாடு காட்டியதும் தெரிய வந்திருக்கிறது. பிறருக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாய் வந்து நிற்பதும், அடுத்தவர் அறியா வண்ணம் தன்னால் முடிந்த உதவிகளை அவர் செய்து வந்ததும் தற்போது வெளிப்பட்டு வருகிறது.
மயில்சாமியின் மறைவுக்கு திரைத்துறையினர் மட்டுமன்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், பல துறைகளை சார்ந்தோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவற்றின் மத்தியில், மயில்சாமியின் இறப்பு தொடர்பாக ஒரு விழிப்புணர்வு இழையும் சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
’போதிய ஓய்வும், தேக ஆரோக்கியமும் இல்லாத நிலையில், சிவராத்திரியை முன்னிட்டு இரவு நெடுக கண் விழித்திருந்ததும், மயில்சாமியின் உடல்நிலையை வெகுவாக பாதித்ததே அவரது மரணத்துக்கு காரணமாகி இருக்கிறது. எனவே எக்காரணத்தை முன்னிட்டும், உரிய ஆரோக்கியம் மற்றும் முன் ஓய்வு வாய்க்கப்பெறாதவர்கள் தூக்கம் தவிர்க்க வேண்டாம்.
நவீன வாழ்வியலில் தூக்கம் தொலைப்பதும், தொடர்ந்து பணி மற்றும் இதர செயல்பாடுகளில் விழித்திருந்து ஈடுபடுவதும் அதிகரித்து வருவதன் மத்தியில் மயில்சாமியின் மரணம் முக்கியமான விழிப்புணர்வை இட்டுச் சென்றிருக்கிறது. எனவே இயன்றவரை தூக்கம் தவிர்க்காதிருப்போம். தவிர்க்க முடியாத சூழல் எழுமெனில், போதிய ஓய்வினை முன்பின்னாக தீர்மானித்துக்கொள்வோம். முக்கியமாக ஏற்கனவே உடல்பாதிப்பு கண்டவர்கள் உறக்கத்தில் அலட்சியம் கூடாது’.
நெட்டிசன்களின் இந்த அறிவுறுத்தலுக்கு வலு சேர்ப்பதுபோல, நேற்றிரவு ட்ரம்ஸ் சிவமணியுடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெகுவாய் சோர்ந்த நிலையில் மயில்சாமி தென்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். மயில்சாமி மரணத்த்தின் காரணம் குறித்தான அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகாத சூழலில், அவரை இழந்த வருந்தத்திலும், அதுபோன்ற துயரங்கள் தொடரக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்விலும் இந்த விழிப்புணர்வுகள் பொதுவெளியில் பரப்பப்பட்டு வருகின்றன.