நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்குச் சிக்கல் வருமா?: சஸ்பென்ஸ் வைத்த அமைச்சர்!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்குச் சிக்கல் வருமா?: சஸ்பென்ஸ் வைத்த அமைச்சர்!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டைக் குழந்தை விவகாரம் தொடர்பாக நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடிக்குத் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்திருப்பதாகச் சமீபத்தில் வெளியான செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலையைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அந்த ஜோடிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து நயன்தாரா- விக்னேஷ் சிவன் குழந்தைகள் விவகாரத்தை விசாரிக்க மருத்துவத்துறை சேவைகள் துணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தது. 6 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் பதிவு திருமணம் செய்ததற்கும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தப் பதிவு செய்ததற்கான ஆதாரங்களையும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தரப்பினர் சமர்ப்பித்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெற்றுள்ளதாக வந்த புகாரை அடுத்து இதில் தொடர்புடைய மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனை நிர்வாகம் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினரிடமும் இதன் பின்னர் விளக்கம் பெறப்படும். இதைத் தொடர்ந்து அந்த அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கைக்குப் பிறகே நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்குச் சிக்கல் ஏற்படுமா? என்பது தெரியவரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in