‘மார்க்கண்டேயன்’ சிவகுமாருக்கு 81 வயது!

பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
‘மார்க்கண்டேயன்’ சிவகுமாருக்கு 81 வயது!

ஓவியத்தை அழகாக வரைவது என்பது ஒருபக்கம். ஓவியரே அழகானவராக இருந்தால்...? அப்படியொரு அழகுடன் இருந்ததால், உடனிருந்த நண்பர்கள் ‘நடிகனாகலாமே...’ என்று நம்பிக்கையுடன் சொன்னார்கள். ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது கைவந்த கலையாகிவிட்டது. கூடவே, நடிப்பின் மீதும் காதல் பிறந்தது. ஏற்கெனவே கோவையில் இருந்து சென்னைக்கு வந்தவர், கோடம்பாக்கத்துக்குள் நுழைந்து வாய்ப்புகளைத் தேடினார். ’நம்மைக் காக்கவும் கரம் இருக்கும்; கைதூக்கிவிடும்’ என்று நம்பிக்கை கொண்டிருந்தார். புகழ்மிக்க ஏவி.எம் நிறுவனம் கைகொடுத்து, கைகுலுக்கி வரவேற்றது. ‘காக்கும் கரங்கள்’ (1965) படத்தில் அறிமுகப்படுத்தியது. அந்தப் படத்தில் நடிக்கும்போது எப்படியிருந்தாரோ அப்படியேதான் இத்தனை வருடங்கள் கழித்தும் இருக்கிறார். அதனால்தான் அவரை ‘மார்க்கண்டேயன்’ என்று எல்லோருமே சொல்கிறார்கள். இப்போது தெரிந்திருக்குமே... இந்தக் கட்டுரையின் நாயகன் - நடிகர் சிவகுமார் என்று!

சிவகுமாரின் 24-வது வயதில் சினிமா வாய்ப்பு கிடைத்தது. ’பையன் ரொம்ப லட்சணமா இருக்கானே...’ அடுத்த வருடமே இயக்குநர் ஏ.பி.நாகராஜன் ‘சரஸ்வதி சபதம்’ படத்திலும் அதற்கு அடுத்த வருடத்தில் ‘கந்தன் கருணை’ படத்தில் கந்தக் கடவுளாகவும் சிவகுமாரைப் பயன்படுத்திக் கொண்டார். மீண்டும் ஏவி.எம் தயாரிப்பில் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் சிவாஜிக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எவரின் சாயலும் இல்லாத நடிப்பும் வசனம் பேசுகிற பாணியும் எல்லோருக்கும் பிடித்திருந்ததால், அடுத்தடுத்த இயக்குநர்களும் சிவகுமாரைப் பயன்படுத்தினார்கள்.

சிவாஜியுடன் நடித்தார். எம்ஜிஆருடன் நடித்தார். ஜெமினி கணேசனுடன் நடித்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் நடித்தார். முத்துராமன், ஏவி.எம்.ராஜன் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். கமலுடனும் ரஜினியுடனும் பல படங்களில் நடித்தார். ஆனால் கமல் இரண்டாவது ஹீரோவாகத்தான் இருப்பார். அதேபோல் ரஜினியும் இரண்டாவது கதாநாயகன் என்றுதான் நடிப்பார்.

‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘பட்டிக்காட்டு ராஜா’, ‘கவிக்குயில்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ என வரிசையாகப் படங்கள் ஹிட்டடித்துக் கொண்டே இருந்தன. நடிக்கத் தொடங்கிய 14-வது வருடத்தில், 1979ம் ஆண்டில், ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ எனும் படத்தில் அற்புதமாக நடித்து மிகப்பெரிய பேரையும் புகழையும் பெற்று ஜொலித்தார். இதுதான் இவரின் 100-வது படம். சிவகுமாருக்கு இந்தப் படம் இன்னொரு சாதனையாகவும் சினிமா சரித்திரத்தில் பதிந்தது. எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி முதலான பல ஹீரோக்களின் 100-வது படங்கள், ஞாபகத்தில் இருந்தாலும் அவை எதிர்பார்த்த வெற்றியையோ வசூலையோ குவிக்கவில்லை. ஆனால் முதன்முதலாக சிவகுமாரின் 100-வது படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிறந்த நடிகர் எனும் ஃபிலிம்பேர் விருதும் கிடைத்தது. பல விருதுகளும் பதக்கங்களும் பெற்றிருக்கிறார்.

பஞ்சு அருணாசலம் சகோதரர் தயாரிப்பில் இளையராஜா அறிமுகமான ‘அன்னக்கிளி’ படத்தின் நாயகனும் இவர்தான். ஆக இளையராஜாவின் முதல் பட நாயகன் எனும் பெருமையும் இவருக்கு உண்டு. அதேபோல இளையராஜாவும் வாலியும் இணைந்த முதல் படமான ‘பத்ரகாளி’ படத்தின் நாயகனும் இவர்தான்!

ஜெயசித்ரா, ஸ்ரீவித்யா, ஸ்ரீதேவி, சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீப்ரியா, லட்சுமி, சுமித்ரா, சரிதா, ராதா, அம்பிகா என்று வலம் வந்து நதியா வரைக்கும் ஜோடி போட்டார் சிவகுமார். ஓவியராக, பாடகராக, போலீஸ் அதிகாரியாக, கைதியாக, எழுத்தாளராக என இவர் நடித்த எந்தவொரு கதாபாத்திரத்திலும் அதன் தன்மை கெட்டுவிடாமல், வெகு இயல்பாகத் தன்னைப் பொருத்திக்கொள்வதுதான் சிவகுமாரின் பாணி.

திருமணத்தின் போது சிவகுமார்
திருமணத்தின் போது சிவகுமார்

ஆர்.சுந்தர்ராஜனின் ‘நான் பாடும் பாடல்’ படத்தில் சி.ஆர்.எஸ் எனும் எழுத்தாளர் கதாபாத்திரத்தில், அட்டகாசம் பண்ணியிருப்பார். அதேபோல, ’அக்னிசாட்சி’ படத்தில் கே.பாலசந்தர், சிவகுமாருக்கும் சரிதாவுக்கும் மிகச்சிறந்த கேரக்டரை வழங்கினார். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்தார்கள். ‘கனாக்காணும் கண்கள் மெல்ல...’ பாடல் இன்றைக்கும் நம் மனசுக்கு நெருக்கமான பாடல்.

சிறிய இடைவேளைக்குப் பிறகு, கே.பாலசந்தர் மீண்டும் சிவகுமாரை அழைத்தார். ஜே.கே.பி எனும் கர்நாடக சங்கீதப் பாடகரின் கதாபாத்திரத்தை வழங்கினார். சுஹாசினி, சுலக்‌ஷணா முதலானோர் நடித்த இந்தப் படத்தில், ஒரு வித்வானாகவே வாழ்ந்திருப்பார் சிவகுமார். சிவகுமாரின் ‘லைஃப் டைம்’ கதாபாத்திரங்களில் இந்தப் படமும் முக்கியமான படமாக அமைந்தது. அதேபோல் இன்னொரு பெருமையும் இந்தப் படத்தால் சிவகுமாருக்குக் கிடைத்தது. இளையராஜாவின் முதல்படம், இளையராஜாவும் வாலியும் இணைந்த முதல் படம் என்பதிலெல்லாம் சிவகுமார் நாயகன் என்பது போல், பாலசந்தரும் இளையராஜாவும் முதன்முதலாக இணைந்த ‘சிந்துபைரவி’ படத்திலும் சிவகுமார் நாயகன் என்பது என்ன பொருத்தமோ... என்ன மேஜிக்கோ?

அப்போது இருந்த முக்தா பிலிம்ஸ், தேவர் பிலிம்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் படங்களிலெல்லாம் தொடர்ந்து நடித்து, தனக்கென ஒரு இமேஜையும் மார்க்கெட் வேல்யூவையும் சிவகுமார் வளர்த்துக்கொண்டார்.

எம்ஜிஆர், சிவாஜி, பிறகு கமல், ரஜினி போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தவர், விஜயகாந்த், மோகன், சத்யராஜ், பிரபு, அர்ஜூன் என்றும் இதையடுத்து அஜித், விஜய், விக்ரம் என்றும் தொடர்ந்து நடித்து வந்தார். நடித்து வருகிறார். அஜித்துடன் நடித்த ‘உன்னைத்தேடி’ படத்திலும் விஜய்யுடன் நடித்த ‘காதலுக்கு மரியாதை’ படத்திலும் விக்ரமுடன் நடித்த ‘சேது’ படத்திலும் தன் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார் சிவகுமார்.

மனைவியுடன் சிவகுமார்
மனைவியுடன் சிவகுமார்

அதேபோல், ராதிகாவுடன் பல படங்களில் நடித்த சிவகுமாரை, ராதிகா, சின்னத்திரையிலும் தனக்கு இணையான அருமையான கதாபாத்திரத்தை வழங்கினார். ஏற்கெனவே, ‘கையளவு மனசு’, ’ரேவதி’, ‘புஷ்பாஞ்சலி’, ’பந்தம்’, வீட்டுக்கு வீடு வாசப்படி’ என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். எவராலும் மறக்க முடியாத ‘சித்தி’, ‘அண்ணாமலை’ முதலான சீரியல்களிலும் தன் நடிப்பால், கேரக்டருக்கு உயிரூட்டினார்.

சிவாஜி நடித்து சென்னை ஆனந்த் தியேட்டர் உமாபதி தயாரித்த ‘ராஜராஜ சோழன்’ படத்திலும் சிவகுமார், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதிலும் சரித்திரப் பதிவாக இடம்பெற்றார். தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் இதுதான். அதேபோல வினுச்சக்கரவர்த்தியின் கதையில் அவர் நடித்து, கே.விஜயன் இயக்கத்தில் உருவான ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் ரவுடி கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை சிவகுமார் வெளிப்படுத்தினார். இதுவும் அவர் வாழ்விலும் திரை வாழ்விலும் முக்கியமான படம்தான். சில்க் ஸ்மிதா எனும் நடிகை அறிமுகமான படம் இதுதான்!

மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய ‘இன்று நீ நாளை நான்’, டி.ராஜேந்தர் இயக்கிய ‘தங்கைக்கோர் கீதம்’, கலைஞரின் வசனத்தில் உருவான ‘பாசப்பறவைகள்’, ’பாடாத தேனீக்கள்’ என எத்தனையோ படங்கள்... எத்தனையெத்தனையோ கதாபாத்திரங்கள்! அதேபோல், இயக்குநர் வி.சேகர் தன் படங்களில், சிவகுமாரை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்.

சிவகுமாரின் கைவண்ணத்தில்... ஓவியங்கள்
சிவகுமாரின் கைவண்ணத்தில்... ஓவியங்கள்

எழுத்தாளர் பாலகுமாரனுக்கும் சிவகுமாருக்கும் நல்லதொரு தொடர்பு உண்டு. நட்பு உண்டு. தவிர, ‘சிந்து பைரவி’ படத்தில் பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பாலகுமாரன் பணிபுரிந்துள்ளார். அவர் தன்னுடைய சுயசரிதை நூலான ‘முன்கதைச் சுருக்கம்’ புத்தகத்தில், சிவகுமாருடன் பழகியதையும் அவரின் ஒழுக்கத்தையும் பண்பையும் சிலாகித்து எழுதியுள்ளார். ‘’அவங்க என்ன நினைப்பாங்களோ... இவங்க என்ன சொல்வாங்களோ...ன்னு ஒழுக்கமா, நல்லபுள்ளையா இருக்கணும்னெல்லாம் அவசியமே இல்ல. நாம நமக்கு ஒழுக்கமானவனா இருக்கணும். ஒருத்தன் எங்கே இருந்தாலும் ‘ஸ்லிப்’ ஆயிருவான். சினிமாலதான்னு இல்ல. ஆனா இதுல இருந்தா ‘ஸ்லிப்’ ஆகறது ரொம்பவே ஈஸி. ஆனா நாம எங்கேயும் எப்பவும் ‘ஸ்லிப்’ ஆகவே கூடாது. பாப்புலாரிட்டியான தொழில் செய்றோம். இதுல ஒழுக்கமும் நேர்மையும் ரொம்பவே முக்கியம் பாலகுமாரன்’’ என்று சிவகுமார் சொன்னதை, நூலிலும் பகிர்ந்திருக்கிறார். பாலகுமாரனிடம் உதவியாளராக நான் பணியாற்றிய தருணங்களிலும் தெரிவித்து சிலாகித்திருக்கிறார்.

சிவகுமாரின் நிஜப்பெயர் பழனிச்சாமி. அவரின் அம்மா பெயர் பழனியம்மாள். சிறந்த மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எண்பதுகளில் இருந்தே உதவித்தொகை வழங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சிவகுமார். இன்றைக்கு மகன்கள் சூர்யாவும் கார்த்தியும் நடிகர்களாக வளர்ந்து, முன்னணியில் இருக்கும் தருணத்தில், அகரம் பவுண்டேஷன் என்று கல்விக்காகவும் விவசாயத்தைச் செழிக்கச் செய்வதற்காக அறக்கட்டளையும் நடத்தி ஏராளமான உதவிகளைச் செய்துவருகிறார்கள்.

’சிந்துபைரவி’
’சிந்துபைரவி’

காலையிலேயே விழிப்பது, எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாதது, தியானத்திலும் யோகாவிலும் ஈடுபடுவது, ஓழுக்கத்துடனும் நேர்மையுடனும் எதையும் அணுகுவது, கம்பராமாயணம் முதல் கலைஞரின் வசனங்கள் வரை அப்படியே மேடையில் பேசி கைதட்டல்களை அள்ளுவது, மிதமான உணவுகளை எடுத்துக்கொள்வது, எல்லோருடனும் இனிமையாகவும் நட்புடனும் பழகுவது... என நடிகர் சிவகுமாரின் வாழ்வியல், எல்லா நடிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மனிதர்களுக்குமான பாடம்!

1941 அக்டோபர் 27-ம் தேதி பிறந்த சிவகுமாருக்கு, 81 வயது. பார்த்தால், சூர்யாவுக்கும் கார்த்திக்கும் சகோதரர் மாதிரி தெரிவதாகப் பல மேடைகளில் பலரும் சொல்கிறார்கள். என்றும் மார்க்கண்டேயனாகத் திகழும் சிவகுமார், இன்னும் இன்னுமாக இளமையுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துவோம்.

வாழ்த்துகள் சிவகுமார் சார்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in