திரை விமர்சனம் : மார்கழி திங்கள்

திரை விமர்சனம் : மார்கழி திங்கள்

திண்டுக்கல் அருகே கிராமத்தில் பெற்றோரை சிறு வயதிலேயே இழந்த கவிதா (ரக்‌ஷனா), தாத்தா (பாரதிராஜா) அரவணைப்பில் வளர்கிறார். பள்ளியில் கெட்டிக்காரியாக இருக்கும் கவிதாவுடன் போட்டிப் போட்டுக்கொண்டு படிக்கிறார் வினோத் (ஷ்யாம் செல்வம்). இருவருக்கும் ஏற்படும் மோதல், பிறகு காதலாக மாறுகிறது. தன் காதலை தாத்தாவிடம் தைரியமாகச் சொல்கிறார் கவிதா. கல்லூரிப் படிப்புக்குப் பிறகு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளிக்கும் தாத்தா, இருவருக்கும் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதனால் காதலர்களுக்கு என்ன நேர்கிறது என்பதுதான் மீதிக் கதை.

அடிதடி, வெட்டு, ரத்தம் என தமிழ் சினிமா பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் கிராமத்து கதைக் களத்தை இயக்குநராகப் பரிணமித்திருக்கும் மனோஜ் பாரதிராஜா தேர்வு செய்ததற்கு அவருக்கு பூங்கொத்து. ஓர் அழுத்தமான கிளைமாக்ஸை முடிவு செய்துவிட்டு, அதற்கேற்ப திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். எனவே, அதற்கேற்ப காட்சி அமைப்புகள் பின்னப்பட்டிருக்கின்றன. மனிதருக்குள் ஒரு நொடிப் பொழுதில் ஏற்படும் சாதிய வன்மமும் அதன் விளைவால் நிகழும் ஆணவக் கொலையும் பதற வைக்கிறது.

உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒருவரின் நம்பிக்கை துரோகத்தின் விளைவைதான் படம் சொல்ல முயல்கிறது. அதற்கு வலுச் சேர்க்க விடலைப் பருவத்து காதலாகத் தொடங்கும் கதை, சாதி, ஆணவக் கொலை எனச் சுற்றி வருகிறது. அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் காட்சிகள் படத்தில் இடம் பெறாதது திரைக்கதையின் பலவீனம். நிமிர்ந்து உட்கார வைக்கும் கிளைமாக்ஸை விட மற்ற காட்சிகள் சுவாரசியமாக படமாக்கவில்லை. மேலோட்டமாக காட்டப்படும் காட்சிகள் செயற்கைத்தனமாகவும், நாடகத்தனமாகவும் நகர்வதும் பெரிய குறை.

கதையோட்டத்தில் திடீரென சாதிய வன்மம் எட்டிப் பார்ப்பது படத்தின் மீதான நம்பிக்கையைக் குலைத்துவிடுகிறது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் தொடங்கும் கதைக் களத்தைக் காட்டும் வகையில் பாவாடை - தாவணி, ராங்க் சீட்டு, செல்போன் போன்ற காட்சிகளைக் காட்டுவதில் மெனக்கெட்டிருக்கும் படக்குழு, நேர்த்தியான திரைக்கதையை அமைப்பதில் காட்டியிருந்தால் படத்துக்கு வலு சேர்த்திருக்கும்.

உடலிலும் குரலிலும் தளர்வு தெரிந்தாலும் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் பாராதிராஜா. தாத்தா பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ஷ்யாம் செல்வம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். காதல், தவிப்பு, இயலாமை போன்ற காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். பல இடங்களில் ஒரே மாதிரியான உடல்மொழியை வெளிப்படுத்துவதைத் தவிர்த்திருக்கலாம்.

நாயகியாக தேர்வு செய்ததற்கு ரக்‌ஷனா நியாயம் சேர்த்திருக்கிறார். தாத்தாவுடனான பாசம், காதலனுடனான நேசம், நம்பிக்கை துரோகத்தால் ஏற்படும் ரோஷம் என நடிப்பில் வெரைட்டிக் காட்டியிருக்கிறார். விரைப்பாக முகத்தை வைத்துக்கொண்டு வில்லனாக நடிக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். அப்புக்குட்டியை முழுமையாக வீணடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு இளையராஜா பலம் சேர்த்திருக்கிறார். இரண்டு பாடல்களும் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் நிறைவாக இருக்கிறது. வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவும், தியாகுவின் படத்தொகுப்பும் படத்துக்குத் தீனிப் போடவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in