’சர்கார்’ பிரச்சினையில் ஆர்.கே.செல்வமணி போர்ஜரி செய்தார் : கே. பாக்யராஜ்

கே. பாக்யராஜ்
கே. பாக்யராஜ்

’சர்கார்’ பட பிரச்சினையில் ஆர்.கே.செல்வமணி போர்ஜரி செய்தார் என்று இயக்குநர் கே.பாக்யராஜ் புகார் கூறியுள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறுகிறது. இதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஓர் அணியும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஓர் அணியும் போட்டியிடுகிறது. கே.பாக்யராஜ் தலைமையிலான வேட்பாளர்களின் அறிமுக விழா நடைபெற்றது. மங்கை அரிராஜன் வரவேற்றார். இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.

இந்த இமயம் அணி சார்பில் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு ரா. பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு போடியிடுகிறார்கள். இணை செயலாளர் பதவிகளுக்கு, ஏ.ஜெகதீசன், ஜெனிஃபர் ஜீலியட், ராஜா கார்த்திக் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு, மங்கை அரிராஜன், பாலசேகரன், ஜெகன், நாகேந்திரன், நவீன், பாண்டியராஜன், வி. பிரபாகர், சசி, ஷிபி, எஸ்.எஸ்.ஸ்டேன்லி, சாய் ரமணி, வேல்முருகன் போட்டியிடுகின்றனர். மாதேஷ், எழில் ஆகியோர் போட்டியின்றி துணைத் தலைவர்களாகத் தேர்வாகியுள்ளனர்.

வேட்பாளர் அறிமுக நிகழ்வில் இயக்குநர் கே. பாக்யராஜ் பேசியதாவது:

“தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தபோது செல்வமணியோடு போட்டியிட வேண்டாம் என பலர் பயமுறுத்தினார்கள். எல்லாவற்றையும் சந்திக்க முடிவு பண்ணியே இறங்கியுள்ளேன். ’சர்கார்’ பட விஷயத்தில் ராஜேந்திரன் யாரென்றே தெரியாது. அவர் வந்து பிரச்சினை என்று சொன்னபோது, குழுவில் இருக்கும் எல்லோரிடமும் கலந்து ஆலோசித்தேன். இயக்குநர் முருகதாஸையே வீட்டுக்கு கூப்பிட்டுப் பேசியபிறகு, செல்வமணி, ’அது வேற கதை, இது வேற கதை’ என்றார். அங்குதான் எனக்கும் அவருக்கும் முதல் பிரச்சினை ஆரம்பித்தது. அந்தப் பிரச்சினையில் செல்வமணி போர்ஜரி செய்தார். நான் எடுத்த நடவடிக்கையில் பிறகு காம்ப்ரமைஸ் ஆனார்கள். நான் இருந்த சங்கத்திலேயே அவரால் போர்ஜரி நடத்த முடிகிறது எனும்போது, அவர் தலைவராக இருக்கும் சங்கத்தில் என்னென்ன செய்திருப்பார்? அதனால்தான் இந்தத் தேர்தலில் நிற்க முடிவு செய்தேன். இந்தத் தேர்தலில் கண்டிப்பாக எங்கள் அணி ஜெயிக்கும்” .

இவ்வாறு கே.பாக்யராஜ் பேசினார். பின்னர் 18 வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in