காமெடியில் கலக்கியெடுக்கும் பண்பட்ட இயக்குநர் மனோபாலா!

- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
மனோபாலா
மனோபாலா

எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் உருவான ‘வதந்தி’ வெப் சீரிஸ், ஓடிடி தளத்தில் கலக்கிக்கொண்டிருக்கிறது. ‘மாநாடு’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா பேசிய வசனத்தை இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். “இவர் இன்றைக்கு நல்ல நடிகர்தான். ஒருகாலத்தில் இயக்குநராகத்தான் திரையுலகிற்கு வந்தார். அசத்தலான படங்களைக் கொடுத்தார்” என்றெல்லாம் இன்றைய தலைமுறையினருக்குச் சொல்லவேண்டியிருக்கிறது.

அதேபோல்தான், மனோபாலா திரையில் தோன்றினாலே, ரசிகர்கள் கரவொலி எழுப்புகிறார்கள். இவரின் காமெடிக்கும் டயலாக் டெலிவரிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். “இவர் எப்பேர்ப்பட்ட படங்களையெல்லாம் டைரக்ட் பண்ணிருக்காரு தெரியுமா?” என்று கேட்டால், “அப்படியா...” என்கிறார்கள் இன்றைய ரசிகர்கள். இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்து ஜொலித்தவர்களில் மனோபாலாவும் ஒருவர்.

தஞ்சை திருவையாறு பக்கம்தான் பூர்விகம். நன்றாகத்தான் படித்தார். படிக்கப்படிக்க, நண்பர்களின் பழக்கம் கிடைக்கக் கிடைக்க, சினிமா மீதான மோகம் அதிகரித்தது. அடுத்த கட்ட படிப்புக்காகவோ, அடுத்து வேலையில் சேருகிறேன் என்றோ ஏதேதோ காரணங்களையெல்லாம் சொல்லி, சென்னையில் உள்ள உறவுக்காரர்கள் வீட்டில் வந்து தங்கினார் மனோபாலா.

அவர் படிக்கவெல்லாம் செல்லவில்லை. ஒரு படம் விடாமல் பார்ப்பதுதான் வேலை. சினிமாவில் உதவி இயக்குநராகச் சேருவதுதான் இவரின் இலக்கு. ‘’உடனே எனக்கு வாய்ப்பெல்லாம் கிடைத்துவிடவில்லை. ஆனால், கடவுளின் ஆசி எனக்கு இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். சினிமாவில் சேருவதற்கு முன்பாகவே அந்தக் காலத்திலேயே உச்சத்தில் இருந்த நடிகருடன் நட்பு வைத்துக் கொள்ளமுடியுமா?

கமல் சாரின் நட்பு எப்படியோ கிடைத்தது. ஆழ்வார்பேட்டை வீட்டுக்குள், நான் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம். ‘மன்னி பசிக்குது மன்னி’ என்று சாருஹாசனின் மனைவியாரிடம் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை வந்தால், கமல் சார் வீட்டில் எனக்கும் டிரஸ்ஸெல்லாம் எடுத்துக் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு, கமல் சார், சாரு அண்ணா, மன்னி என குடும்பத்தில் ஒருவனாகவே வளரும் பாக்கியம் கிடைத்தது எனக்கு’’ என்று பல முறை பல மேடைகளில் சொல்லியிருக்கிறார் மனோபாலா.

‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’ என வரிசையாக ஹிட்டடித்த தருணம்.’நிறம் மாறாத பூக்கள்’ வெற்றியாகி, தொடர்ந்து ஐந்து ஹிட் படங்களைக் கொடுத்தவர் என பாரதிராஜாவை திரையுலகமும் ரசிகர் கூட்டமும் கொண்டாடிக்கொண்டிருந்த காலம். இன்னும் சொல்லப் போனால், ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் போது, பாக்யராஜ் குருநாதரிடம் இருந்து கற்றுக்கொண்டதை செயலாக்கும் விதமாக, ‘சுவரில்லாத சித்திரங்கள்’ வேலையில் இறங்கினார். அந்த சமயத்தில் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தார் மனோபாலா.

‘’என் குருநாதர் பாரதிராஜா, என்னைப் புரிந்துகொண்டு, ‘வாடா கண்ணா வா வா’ என்றெல்லாம் என்னை உதவியாளராகச் சேர்த்துக் கொள்ளவில்லை. ‘இவர் என் நண்பர். சினிமா மேல அத்தனை ஈடுபாடு. படம் பார்த்துட்டு ரசிச்சு ரசிச்சு ப்ளஸ் மைனஸை அழகாச் சொல்லுவாரு. அசிஸ்டெண்டா சேர்த்துக்கங்க தேனிக்காரரே...’ என்று கமல் சார், ஒருநாள் என்னை காரில் ஏற்றிக்கொண்டு போய் பாரதிராஜாவின் கையில் ஒப்படைத்தார்.

‘பரமக்குடியாரே’ என்றுதான் கமல்ஹாசனை பாரதிராஜா இப்போதும் அழைப்பார். ‘’பரமக்குடியார் சொன்னா மறுக்கவா போறேன்’’ என்று கமலுக்காக சேர்த்துக் கொண்டார் பாரதிராஜா சார்’’ என்று மலரும் நினைவுகளை மறக்காமல் சொல்கிறார் மனோபாலா.

உதவி இயக்குநராக இருக்கும் போதே மனோபாலாவின் சாமர்த்தியம், பக்குவம், தடக்கென்று எடுக்கிற முடிவு எல்லாமே அவருக்கு பின்னாளில் ரொம்பவே பயன்பட்டது. ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் நாவிதராக புலியூர் சரோஜாவின் கணவர் ஜி.சீனிவாசன் நடித்தார். ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நாயனக்காரராக, பாரதிராஜா முடிவு செய்து, அவரை மதுரைப்பக்கமுள்ள ஊருக்கு வரச்சொல்லிவிட்டார். அதேபோல, படத்தில் உள்ள பண்ணையார் கதாபாத்திரத்துக்கு கே.கே.செளந்தர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எல்லோரையும் சரியான நேரத்துக்கு வரவைக்கும் பணியை மனோபாலா செய்யவேண்டும். கே.கே.செளந்தர், திண்டுக்கல்லில் இறங்கி அங்கிருந்து தேனிப்பக்கம் வரவேண்டும். ஆனால், அவர் மதுரைக்குச் சென்றுவிட்டார். பிறகு குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் பஸ் பிடித்து வந்துகொண்டிருந்தார்.

அதற்குள், அன்றைக்குப் படப்பிடிப்பை நடத்த பாரதிராஜா தயாரானார். ‘’பண்ணையார் கேரக்டருக்கான சீன்களை எடுக்கணும். ரெடியா?’’ என்று பாரதிராஜா கேட்க, உடனே ஜி.சீனிவாசனுக்கு அதற்கான மேக் அப்புகளைப் போட்டு அழைத்துவந்தார். ‘’என்னய்யா இவரா பண்ணையார் கேரக்டர் பண்றாரு’’ என்று பாரதிராஜா கேட்க, ‘ஆமாம்’ என்பது போல் பொதுவாகத் தலையாட்டி சமாளித்தார். பண்ணையாராக ஜி.சீனிவாசன் நடித்தார்.

ஆனாலும் பாரதிராஜாவுக்குக் குழப்பம். மீண்டும் கேட்டார். ‘’ஆமாம் சார். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திலும் அவரே இறந்துபோற சீன் இருக்கு. ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நாயனக்காரராக வந்து இறந்துபோவார். ஒரே மாதிரி இருக்குன்னு அப்படியே மாத்திட்டீங்க சார்’’ என்று சொல்ல, சரியென்று ஒத்துக் கொண்டார். கே.கே.செளந்தர் வந்தார். அவருக்குக் கொடுக்கவேண்டிய பண்ணையார் கதாபாத்திரத்தை ஜி.சீனிவாசனுக்கும், இவருக்கான கேரக்டரை கே.கே.செளந்தருக்குமாகக் கொடுத்ததும் நமக்குத்தான் தெரியுமே!

தொடர்ந்து, ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ என வரிசையாகப் படங்களில் பணியாற்றினார். ஒருகட்டத்தில் பாக்யராஜ் இயக்குநரானது போல, அடுத்த சிஷ்யரான மணிவண்ணனும் இயக்குநரானார். மனோபாலாவும் வெளியே வந்தார். கார்த்திக்கையும் சுஹாசினியையும் வைத்து ‘ஆகாயகங்கை’ படத்தை முதன் முதலாக இயக்கினார். இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாமே அருமையாக அமைந்தன. ஆனால், படம் ஏனோ பெரிதாகப் போகவில்லை.

இதையடுத்து அடுத்த படத்துக்கு கதைகளை தயாரித்து வைத்திருந்தாலும், பட வாய்ப்பு ஏனோ கிடைக்கவில்லை. முதல் படம் வந்து மூன்று ஆண்டுகளைக் கடந்து, இந்த ஜென்மத்தையே கடப்பது போல் இருந்தது. வருமானம் இல்லை. பசி, எப்போதும் கண்களில் தேங்கியிருக்கும் தூக்கம். ‘ஊருக்குப் போயிடலாமா?’, ‘வேற வேலை பாக்கலாமா?’, ‘கடை வைச்சு பொழைக்கலாமா’, ‘தற்கொலை பண்ணிக்கலாமா’ என்று குழப்ப ரேகைகள், பின்னிப் பிணைந்து கும்மியடித்தன.

‘’திருச்சில வெக்காளியம்மன்னு ஒரு கோயில். அங்கே போய் வேண்டிக்கிட்டு வந்தா நல்லது நடக்கும்னு நண்பர் ஒருத்தர் சொன்னாரு. திருச்சி போனேன். வெக்காளியம்மனை தரிசனம் பண்ணினேன். அங்கே பிரார்த்தனைச் சீட்டு வழக்கத்துல உண்டு. ‘அடுத்த படம் கிடைக்கணும். டைரக்டரா பேரெடுக்கணும் தாயே’ன்னு வேண்டிக்கிட்டு எழுதிக் கட்டினேன். சென்னைக்கு வந்தேன். கையில காசே இல்லை. ஒரு தோசை வாங்கலாம். அதுக்குத்தான் காசு இருக்கு.

அந்த சமயத்துல, நடிகர் மோகன் ரூபத்துல வெக்காளி அம்மன், தன் மகிமையை எனக்குக் காட்டினா. மறக்கவே முடியாது’’ என்கிறார் மனோபாலா.

கன்னடப் படமான ‘கோகிலா’ படத்தில் கமலுடன் நடித்த மோகன், தமிழுக்கு வந்து வாய்ப்புகள் தேடிக்கொண்டிருந்தார். அப்போது தன் ஸ்கூட்டரில் மோகனை அழைத்துச் சென்று, மோகனுக்கு பட வாய்ப்பு கேட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர்... மனோபாலா. இன்னொருவர்... ஸ்டில்ஸ் ரவி. அந்த உதவி நன்றியுணர்வாக மாறி, மீண்டும் உதவியாக வந்து நின்றதுதான் அழகிய தருணம்.

அப்போது மோகனுக்கு வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்கவில்லை. ‘பயணங்கள் முடிவதில்லை’ எல்லாம் வந்த பிறகு ஓய்வெடுக்கக் கூட மோகனுக்கு நேரமில்லை. இந்த சமயத்தில், தயாரிப்பாளர் ஒருவர், மோகனிடம் கால்ஷீட் கேட்டார். ‘’கால்ஷீட் தரேன். ஆனா ஒரு கண்டிஷன்... மனோபாலாவைத்தான் டைரக்டரா போடணும்’’ என்றார் மோகன். ‘’அப்படி மனோபாலாவை டைரக்டராப் போட்டா, உடனே கால்ஷீட் தரேன்” என்று உறுதியும் கொடுத்தார்.

அந்தத் தயாரிப்பாளர் தேடுதேடு என மனோபாலாவைத் தேடிக் கண்டுபிடித்தார். கையில் இருக்கும் காசுக்கு தோசை வாங்கிச் சாப்பிட்டால் பிறகு அங்கே இங்கே செல்வதற்கு என்ன செய்வது என்று யோசித்தபடியே பாண்டிபஜார் கையேந்திபவனில் ஓரமாக நின்றுகொண்டிருந்தவரை ‘டைரக்டர் சார்’ என்று குரல் கொடுத்து அழைத்தார் தயாரிப்பாளர். திரும்பிப் பார்த்தார். அங்கே அவரின் வாழ்வில் திருப்பம் ஏற்பட்டது. உணவு வாங்கிக் கொடுத்தார் தயாரிப்பாளர்.

உடனே மோகனை சந்தித்தார். ‘’இவருக்கு கால்ஷீட் கொடுக்கறேன். உடனே ஒரு கதை ரெடி பண்ணுங்க மனோ. தினமும் நைட்ல கால்ஷீட் கொடுக்கறேன். நடிச்சுக் கொடுக்கறேன்’’ என்று நடிகர் மோகன் சொன்னார். மனோபாலாவும் இரவில் வரும் காட்சிகளாகக் கொண்டு கதையை உருவாக்கினார். இளையராஜாவின் இசையில் ‘பிள்ளை நிலா’ உருவானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் பிஜிஎம், தனிச் சாதனை படைத்தது.

அடுத்து நடிகர் மோகனுக்காக ஆரம்பக் கட்டத்தில் உதவிய நண்பர் ஸ்டில்ஸ் ரவி. அவரைத் தயாரிப்பாளராக்கினார் மோகன். மனோபாலாவை இயக்கச் செய்தார். ‘நான் உங்கள் ரசிகன்’ உருவானது. இந்த இரண்டு படங்களிலும் ராதிகாவுடனான நட்பு பலப்பட்டது. இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்கள். ராதிகா சொன்னால் மனோபாலா இயக்குவார். மனோபாலா சொன்னால், ராதிகா நேரம் ஒதுக்கி நடித்துக் கொடுத்துவிடுவார்.

சத்யா மூவிஸ் நிறுவனம் ரஜினியின் கால்ஷீட்டை வைத்துக்கொண்டு மனோபாலாவை அணுகியது. ராதிகாவையும் இணைத்துக் கொண்டு ‘ஊர்க்காவலன்’ படத்தை இயக்கினார். இந்த முறை சங்கர் கணேஷ் இசையமைத்தார்கள்.

விஜயகாந்தையும் ராதிகாவையும் வைத்து ‘சிறைப்பறவை’ என்று இயக்கினார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ’என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்’ என்று விஜயகாந்த், சுஹாசினி, ரேகா என மூவரையும் வைத்து இயக்கிய படமும் அட்டகாசமான வெற்றியைத் தந்தது.

இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் இன்றைக்கும் ‘எங்கள் இளையராஜாதான் எல்லாப் பாட்டும் ஹிட்டுதான்’ என்று சொல்லும்வகையில் இருக்கின்றன.

’மூடு மந்திரம்’, ‘வெற்றிப்படிகள்’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘செண்பகத்தோட்டம்’ என்று வரிசையாகப் படங்களை இயக்கினார் மனோபாலா. அன்றைக்கு பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கே.ரங்கராஜ், ஆர்.சுந்தர்ராஜன் என பல இயக்குநர்களும் வெற்றி இயக்குநர்களாக பவனி வந்தார்கள். நடுவே தொலைக்காட்சிப் பக்கமும் சென்றார். தொடர்களை இயக்கினார். அங்கேயும் தனி முத்திரையைப் பதித்தார் மனோபாலா.

படங்களை இயக்கிய எண்ணிக்கை ஏராளம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும் தாராளம். இந்த சமயத்தில்தான் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் என்ன நினைத்தாரோ... மனோபாலாவை அழைத்தார். நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். ‘’நடிப்பெல்லாம் வேணாம் சார். அதெல்லாம் நமக்கு வராது சார்’’ என்று சொல்லிவிட, வலுக்கட்டாயமாக மனோபாலாவை, ‘நட்புக்காக’ படத்தில், நடிக்கவைத்தார். மனிதர்... நடிப்பில் இன்றைக்கு வரைக்கும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்.

’’நட்புக்காக ‘நட்புக்காக’ படத்தில் கே.எஸ்.ரவிகுமார் சார் நடிப்பில் இழுத்துவிட்டார். இன்றைக்கு 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். இயக்குநராக இருந்த போது கிடைத்த புகழைவிட, ஒரு நடிகனாக இன்றைக்கு இருக்கிற சிறுவர் சிறுமிகள் எல்லாரும் என்னை எங்கு பார்த்தாலும் சூழ்ந்துகொண்டு என்னோடு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் கே.எஸ்.ரவிகுமாருக்கு நன்றி சொல்லணும். கமல் சாருக்கும் பாரதிராஜா சாருக்கும் நன்றி சொல்லணும்’’ என்று நெக்குருகிச் சொல்கிறார் மனோபாலா.

கடந்த பதினைந்து வருடங்களில் புதிதாக வந்த இயக்குநர்கள் தொடங்கி இயக்குநர் பாலா மாதிரியானவர்கள் வரை ஏகப்பட்ட இயக்குநர்கள் மனோபாலாவைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கல்யாணக் கூட்டத்தோடு படம் எடுக்கும் இயக்குநர் சுந்தர்.சி, படம் எடுக்கும் போதே மனோபாலாவுக்கு ஒரு கதாபாத்திரத்தை ஒதுக்கிக் கொடுத்துவிடுகிறார்.

ஸ்கிரீனில் ஒரு நடிகரைப் பார்த்தாலே நமக்கு சிரிப்பு வரவேண்டும். அப்படியான காமெடி நடிகர்களில் மனோபாலா எனும் பண்பட்ட இயக்குநரும் ஒருவர் என்பது அவரின் திறமைக்கான சோறுபதம்!

1953-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி பிறந்த மனோபாலாவுக்கு பிறந்தநாள். மிகச்சிறந்த இயக்குநருக்கு... காமெடியிலும் குணச்சித்திரத்திலும் கலக்கிக்கொண்டிருக்கும் அற்புத நடிகர் மனோபாலா சாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in