‘மன்னார் அண்ட் கம்பெனி’ தங்கவேலுவை மறக்க முடியுமா?

நடிகர் கே.ஏ.தங்கவேலு நினைவுதின சிறப்புப் பகிர்வு
‘மன்னார் அண்ட் கம்பெனி’ தங்கவேலுவை மறக்க முடியுமா?

நவராத்திரி விழா. வீட்டுக்குப் பக்கத்தில் இன்னொரு வீடு நிறையும் அளவுக்கு பிரம்மாண்டமான பந்தல் போட்டு, நவராத்திரியின் ஒன்பது நாள் விழாவை நடத்தினார். காருகுறிச்சி அருணாசலம், திருவாவடுதுறை ராஜரத்தினம் முதலானோர் ஒவ்வொரு நாளும் கச்சேரி நடத்தினார்கள். வருவோருக்கெல்லாம் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. வந்திருந்த பெண்களுக்கெல்லாம் புடவை மற்றும் மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. இவையெல்லாம் செய்தது காமெடி நடிகர் தங்கவேலுவும் அவரின் மனைவி சரோஜாவும்! பக்தியிலும் சரி, சினிமாவிலும் சரி, சினிமாவில் காமெடியிலும் சரி, குணச்சித்திரத்திலும் சரி... ஆத்மார்த்தமாக தனனைப் பொருத்திக் கொண்டு அசத்தியவர் கே.ஏ.தங்கவேலு.

காரைக்கால் அருகேயுள்ள திருமலைராயன்பட்டினம்தான் சொந்த ஊர். சிறுவயதில் நாடகம்தான் பொழுதுபோக்கு. ஊரில் நாடகங்களைப் பார்த்துப்பார்த்து வளர்ந்த தங்கவேலு, நாடகங்களில் சேருவது என முடிவுசெய்தார். கலைவாணர் முதலானோர் இருந்த நாடகக்குழுவில் சேர்ந்தார். சின்னதும்பெரிதுமாக வேடங்கள் கிடைத்தன. ஹீரோவுக்கான முக லட்சணங்களும் குரல் வளமும் இருந்தாலும் அவருக்கு ஏனோ வயதான கதாபாத்திரங்களே அமைந்தன.

இவர் நடித்த ‘பதிபக்தி’ நாடகம் பின்னாளில் ‘சதி லீலாவதி’ சினிமாவானது. திரையுலகத்திலும் நுழைந்தார். ஒவ்வொரு படத்திலும் தங்கவேலுவின் நடிப்பு ஜொலித்தது. சிறிய கதாபாத்திரங்களில் இருந்து நல்ல வேடங்கள் கிடைத்தன. கனமான கதாபாத்திரங்கள் கிடைக்கத் தொடங்கின. கலைவாணரின் ‘பணம்’ படத்தில், சிவாஜியும் பத்மினியும் நடித்தார்கள். தங்கவேலுவுக்கும் அருமையான கேரக்டரைக் கொடுத்தார் கலைவாணர்.

கலைஞரின் ‘திரும்பிப்பார்’, ‘சுகம் எங்கே?’ என்றெல்லாம் நடித்தார் தங்கவேலு. ‘சுகம் எங்கே?’ படத்தில்,’’ ‘டணால்னு சொல்லு’’, ‘’ ‘டணால்னு சொல்லு’’ என்று படத்தில் வருகிற காட்சிகளெல்லாம் சொல்லி கலகலக்க வைத்தார். அதன் பிறகு ‘டணால்’ தங்கவேலு என்றே அழைக்கப்பட்டார்.

தங்கவேலுவின் திரையுலக வாழ்க்கையில் இரண்டு படங்கள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த படங்களாகப் பார்க்கப்பட்டன. ‘கல்யாண பரிசு’ படத்தில் தங்கவேலுவையும் எழுத்தாளர் பைரவனையும் ‘மன்னார் அண்ட் கம்பெனி’யையும் மறக்கவே முடியாது.

கே.ஏ.தங்கவேலு
கே.ஏ.தங்கவேலு

காதலும் காதல் தோல்வியுமாக கனமாகப் போய்க்கொண்டிருக்கும் படத்தில், இவரின் காமெடி ரசிகர்களை ரிலாக்ஸ் பண்ணியது. கூடவே, மனதிலும் பதிந்தது. ‘திருவிளையாடல்’ ஒலிச்சித்திரம் தெருவெங்கும் ஒலித்தது போல, ‘கல்யாண பரிசு’ படத்தின் காமெடி வசனங்கள் மட்டும் தனியே ஒலிபரப்பி சாதனை படைத்ததெல்லாம் நிகழ்ந்தது.

அடுத்து ஸ்ரீதரின் ‘தேன் நிலவு’. படம் முழுக்க தங்கவேலு ராஜாங்கம் பண்ணியிருப்பார். வயதான காலத்தில், தேன்நிலவுக்காக காஷ்மீர் செல்லும் கதைக்களத்தில், வார்த்தைக்கு வார்த்தை நடுநடுங்கி, கிடுகிடுத்து வசனம் பேசுவதிலேயே மனிதர் ஜாலம் காட்டியிருப்பார்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படமும் அப்படித்தான். பத்மினியின் குழுவில் இருந்துகொண்டு அளவான நகைச்சுவையை அட்டகாசமாக வழங்கியிருப்பார். சிவாஜி தயாரித்த ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் ஜெயலலிதா, மனோரமா முதலானோருக்கு அப்பாவாக அதகளம் பண்ணியிருப்பார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். முதலானோருடன் நிறைய படங்களில் நடித்தார். அத்தனை படங்களிலும் காமெடிக்கு மட்டுமின்றி, கதையின் நகர்வுக்கும் துணையாக நின்று நடிப்பிலும் வெளுத்துவாங்கினார்.

ஏவிஎம்மின் ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில், சிவாஜிக்கு உதவி செய்யும் கதாபாத்திரம். கூடவே மனைவியிடமும் அம்மாவிடமும் மாட்டிக்கொண்டு, விழிபிதுங்கித் தவிக்கும் கேரக்டர். மாஸ்டர் கமலுடன் சேர்ந்துகொண்டு லூட்டியடித்திருப்பார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் செல்லப்பிள்ளையாகவே இருந்தார் தங்கவேலு. ஒரு படத்தைத் தயாரிக்கும்போதே, தங்கவேலுவுக்கு ஒரு கதாபாத்திரத்தைக் கொடுத்துவிடுவார்கள். படம் முழுக்க வருவார். பாட்டுகள் கூட இவருக்குக் கொடுக்கப்பட்டன. பாடல் காட்சிகளிலும் தன் திறமையை வெளிக்காட்டியிருப்பார். ‘உத்தமபுத்திரன்’ படத்தில் தங்கவேலுவின் கதாபாத்திரம், மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.

‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படம். ‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம்’ பாடல் இவருக்குக் கொடுக்கப்பட்டது. குகைக்குள் செல்வதும் பணத்தைக் காண்பதும் மிரளுவதும் ஆனந்தப்படுவதும் என நடிப்பில் அமர்க்களம் பண்ணியிருப்பார்.

’எங்க வீட்டு பிள்ளை’யில் கணக்குப்பிள்ளையாக நடித்தார். தங்கவேலுவின் மகளைத் துரத்தித் துரத்தி நாகேஷை விரட்டும்போதெல்லாம் இருவரின் நடிப்பிலும் தியேட்டரே குலுங்கிச் சிரித்தது.

‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் தங்கவேலுவின் நடிப்பையும் காமெடியையும் மறக்க முடியாது. இவரின் நடிப்புக்காகவே படத்தைத் திரும்பத்திரும்பப் பார்த்தார்கள் ரசிகர்கள்.

கே.ஏ.தங்கவேலு
கே.ஏ.தங்கவேலு

சம்பள விஷயத்தில் கறார் காட்டமாட்டார் என்பதாலும் படப்பிடிப்புக்கு சொல்லும் நேரத்தில் வந்துவிடுவார் என்பதாலும் தங்கவேலுவைத் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் ஹீரோக்களுக்கும் ரொம்பவே பிடித்துப் போனது. இதையும் தவிர, தி.நகர் ராஜாபாதர் தெருவில் உள்ள தங்கவேலுவின் வீட்டுக்கு உதவி கேட்டு நிறையபேர் வருவார்கள். அவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வாராம் தங்கவேலு.

இப்படித்தான், மதுரை திருமங்கலத்தில் இருந்து வந்த பையனை தங்கவேலுவுக்கும் அவர் மனைவி சரோஜாவுக்கும் ரொம்பவே பிடித்துப் போனது. அந்தப் பையனை மகனைப் போல் வளர்த்தார்கள். பெயர் கூட மாற்றினார்கள். வளர்த்து ஆளாக்கினார்கள். சினிமாவில் எடிட்டிங் துறையில் அவரைச் சேர்த்துவிட்டார் தங்கவேலு. பின்னாளில் எடிட்டிங் துறையிலும் தெலுங்கு டப்பிங் படங்கள் மூலமாகவும் படத்தயாரிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு, தெலுங்கிலும் தமிழிலுமாக ஜெயித்தார் அந்த இளைஞர். திரையுலகில் பல ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் ஒரு மகனை இயக்குநராக்கினார். இன்னொரு மகனை நடிகராக்கினார். இப்படி திரையுலகில் கொடிநாட்டிய அவர் எடிட்டர் மோகன். இயக்குநர் ராஜா, ஜெயம் ரவி ஆகியோரின் அப்பா, மோகனை ஆளாக்கியதற்கு இன்று வரை தங்கவேலுவின் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் நன்றியுணர்வுடன் இருக்கிறார் எடிட்டர் மோகன்.

ஐம்பதுகளில் தொடங்கிய தங்கவேலுவின் திரைப்பயணம், எழுபதுகள் வரை ‘மார்க்கெட் வேல்யூ’வுடன் இருந்தது. ’இரும்புத்திரை’, ’கைதி கண்ணாயிரம்’, ’வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ’ரம்பையின் காதலன்’, ’பாசமலர்’, ’வியட்நாம் வீடு’ முதலான பல படங்களில் நடித்தார். பின்னர், பாக்யராஜுடன் ‘பாமா ருக்மணி’ மாதிரியான படங்களிலும் நடித்தார். ’நம்நாடு’ உட்பட சில படங்களில் வில்லனாகவும் மிரட்டியிருப்பார். காமெடி, குணச்சித்திரம், வில்லத்தனம் என எல்லாவகையிலும் நடிப்பதில் சூரர் என்று திரையுலகம் இவரைக் கொண்டாடியது.

தமிழ்த் திரையுலகில் கலைவாணரை அடுத்து, காமெடியில் கலக்கிய நடிகர் எனும் வரிசையில் தங்கவேலு இரண்டாமிடத்தில் இருந்தார். தனக்கென தனிபாணியுடன் நடித்தார். வசனங்களிலும் முகபாவங்களிலும் தனித்த அடையாளத்துடன் நடித்துப் பெயரெடுத்தார். முகச்சுளிப்பு இல்லாத காமெடிக்குச் சொந்தக்காரர் என்று பத்திரிகைகள் இவரைப் பற்றி விமர்சனங்களில் குறிப்பிட்டார்கள்.

1917 ஜனவரி 15-ம் தேதி பிறந்த தங்கவேலுவுக்கு 105 வயது. 1994 செப்டம்பர் மாதம் 28-ம் தேதி காலமானார்.

இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் ‘டணாலையும்’ மறக்க முடியாது; ’எழுத்தாளர் பைரவனையும்’ மறக்க முடியாது. ‘மன்னார் அண்ட் கம்பெனி’யையும் மறக்க முடியாது. தங்கவேலுவையும் மறக்க முடியாது!

செப்டம்பர் 28, நடிகர் கே.ஏ.தங்கவேலு நினைவுதினம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in