
நடிகர் அஜித்துடன் 'துணிவு' படத்தில் நடித்திருக்கும் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் அஜித்திற்கு நன்றி சொல்லி தன் முகநூல் பக்கத்தில் ஒரு வரி எழுதியுள்ளார். அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நேர்கொண்ட பார்வை, வலிமைக்குப் பின்பு அஜித், ஹச்.வினோத் கூட்டணி மூன்றாவதாக இணைந்த படம் தான் 'துணிவு'. கடந்த 11-ம் தேதி வெளியான 'துணிவு' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்கள் படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் சபரிமலைக்கு மாலை போட்டிருந்த இயக்குநர் வினோத் இன்று சபரிமலைப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
'துணிவு' படத்தில் மஞ்சுவாரியரும் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னணி மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தமிழிலில் தனுஷ் உடன் 'அசுரன்' படத்தில் நடித்ததன் மூலம் பரவலாகக் கவனம் குவித்தவர். இப்போது மஞ்சுவாரியர் அஜித்துடன் 'துணிவு' படத்தில் நடித்த சில புகைப்படங்களைத் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “நன்றி சார்! நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கு” என பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து நெகிழ்ந்த அஜித் ரசிகர்கள் அந்தக் கருத்தை அதிகமாக ஷேர் செய்துவருகின்றனர்.