மனித வாழ்க்கையை திரையில் பேசும் சீனு ராமசாமி!

- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
 சீனு ராமசாமி
சீனு ராமசாமி

நாவலைக் கொண்டு படமெடுக்கிற படைப்பாளிகள் இருக்கிறார்கள். சினிமாவையே, ஒரு நாவல் போல, ஒரு கவிதை போல, மிக அழகாக கதாபாத்திரங்களையும் அவர்களுக்கே உரிய குணாதிசயங்களையும் வெகு அழகாகக் கட்டமைப்பதில் இயக்குநர் சீனு ராமசாமி தனித்துத் தெரிகிறார். மிகையில்லாத காட்சி, அளவான நடிப்பு, நாம் பேசிக்கொள்கிற வார்த்தைகளே வசனங்கள் என யதார்த்தம் காட்டுகிற இயக்குநர் அவர்.

பாலு மகேந்திராவின் மாணவர். சொல்லப்போனால், கடைசி மாணவர். இவரின் ஒவ்வொரு படங்களிலும் குருவின் பெயரைக் காப்பாற்றுகிற விதமாகவே காட்சிகள் அமைத்திருப்பார்; கதையைத் தேர்ந்தெடுத்திருப்பார்; படமாக்கலிலும் சொல்லுகிற விஷயத்திலும் குரு பாலுமகேந்திராவைப் போல, மனித மனங்களைச் சொல்வதில் அசகாயசூரர்.

குருநாதரை விட்டுப் பிரிந்து மிகப்பெரிய முயற்சிக்குப் பிறகு, ‘கூடல்நகர்’ படத்தை இயக்கினார் சீனு ராமசாமி. பரத் நாயகனாக நடித்தார். மதுரையைக் களமாகக் கொண்ட அந்தப் படத்திலும் எளிமையான மாந்தர்களை உலவவிட்டிருந்தார். ஆனாலும் ஏனோ ரசிகர்களை அந்தப் படம் ஈர்க்கவில்லை. இதனால் சீனு ராமசாமி சோர்ந்துபோய்விடவுமில்லை.

தென்மேற்கு பருவக்காற்று
தென்மேற்கு பருவக்காற்று

இந்த முறை இன்னும் துணிச்சலான கதையுடன் களமிறங்கினார். சரண்யாவுக்கும் மிகப்பெரிய கதாபாத்திரத்தை வழங்கினார். அதேபோல, ஹீரோவை புதிதாக அறிமுகப்படுத்தினார். அவர் அறிமுகப்படுத்திய ஹீரோ, இன்றைக்கு எல்லோருக்கும் பிடித்த நாயகனாக, அட்டகாசமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கமல்- ரஜினியை விடுத்து, அஜித் - விஜய்யையும் விட்டுவிட்டுப் பார்த்தால், மற்ற நடிகர்களின் வரிசையில் முக்கியமானதொரு இடத்தைப் பிடித்திருக்கிற விஜய் சேதுபதிதான் அவர்.

விஜய் சேதுபதியின் முதல்படம் ‘தென்மேற்கு பருவக்காற்று’. இந்தப் படத்தை பத்திரிகைகள் கொண்டாடித்தீர்த்தன. விருதுகளும் குவிந்தன. நல்ல இயக்குநர் எனப் பேரெடுத்தார் சீனு ராமசாமி. அம்மாவுக்கும் மகனுக்குமான பாசத்தை, பிரியத்தை, நேசத்தை, புரிதலை இத்தனை யதார்த்தமாகவும் உண்மையாகவும் எவரும் உணர்த்தவில்லை என்று திரையுலகினரும் கொண்டாடினார்கள்.

சீனு ராமசாமி, கதையைத் தேர்வு செய்வதே அன்றாட வாழ்வியல் பயணத்தின் குறியீடுகளாகத்தான் இருக்கும். கடலோரத்தையும் கடல்வாழ் உயிர்களையும் கடலையே நம்பி வாழும் எளிய, பாசாங்குகள் இல்லாத மனிதர்களையும் நமக்கு ‘நீர்ப்பறவை’யில் காட்டியிருப்பார். விஷ்ணு விஷாலின் நடிப்பில் ஆகச்சிறந்த படமாக அமைந்தது இந்தப் படம். துருத்திக் கொண்டு தெரியாத இவரின் இசைச் சேர்ப்பு, இவரின் படத்தை மேலும் வித்தியாசப்படுத்திக் காட்டும்.

’கண்ணே கலைமானே’ படப்பிடிப்பில்...
’கண்ணே கலைமானே’ படப்பிடிப்பில்...

ஒளிப்பதிவாளருக்கு எங்கே முக்கிய இடமளிக்க வேண்டும், இசையமைப்பாளர் மூலமாக எங்கே கதையைச் சொல்ல வேண்டும், வசனமே இல்லாமல் எந்த இடத்தில் மெளனமாக விட்டுவிடவேண்டும் என்பதில் நுணுக்கங்கள் அறிந்து மனிதமும் மாண்பும் பறைசாற்றிக் கொண்டே இருக்கிற வித்தியாசமான, அதேசமயம் வெள்ளந்தியான இயக்குநர் சீனு ராமசாமி.

எப்படியாவது உதவி இயக்குநராகி விடவேண்டும் என்று அந்த நண்பர் இருந்தார். ஒருகட்டத்தில், “முதலில் கல்யாணம் பண்ணிக்கோ, அப்புறம் சினிமால சான்ஸ் தேடு” என்று பெற்றோர் வற்புறுத்த, கல்யாண வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருக்கும் போது, இயக்குநர் சீனு ராமசாமியிடம் இருந்து அழைப்பு.

வேலை கேட்டு வந்த அந்த நண்பர், ‘’முதல்ல இந்தாங்க சார். எனக்குக் கல்யாணம். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க சார்’’ என்று சொல்லி திருமணப் பத்திரிகையைக் கொடுக்க, நண்பரை ஏற இறங்கப் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்தாராம். “வேலை கேட்டு வரும்போதே, கல்யாணப் பத்திரிகையோட வந்தவன் நீதான்யா’’ என்று சொல்லிவிட்டு உடனே சேர்த்துக்கொண்டு, லீவும் கொடுத்து, திருமணம் முடிந்து பத்து நாள் கழித்து வந்தால் போதும் என்று அனுப்பிவைத்தாராம்.

அதுமட்டுமில்லாமல், கல்யாணத்துக்கு பரிசும் கொடுத்து வாழ்த்தினாராம். ‘’இது உனக்கு தலைதீபாவளி. இந்தா என் பரிசு’’ என்று ஒரு தொகையைக் கொடுத்து விடுப்பும் கொடுத்து அனுப்பிவைத்த சீனு ராமசாமியை அற்புத மனிதர் என்று உதவி இயக்குநர்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலினை நாயகனாக்கி, வடிவுக்கரசி அம்மாவையும் தமன்னாவையும் வைத்துக் கொண்டு, ’கண்ணே கலைமானே’ கொடுத்திருப்பார். உதயநிதிக்கு அவ்வளவு பெரிய கதாபாத்திரம். ஆனால், வெகு அழகாகவும் யதார்த்தமாகவும் நடிக்க வைத்திருப்பார் இயக்குநர்.

அதேபோல், ராதிகாவின் சமீபப் படங்களில் அவரின் ஆகச்சிறந்த நடிப்பை, ‘தர்மதுரை’ படத்தில் பார்க்கலாம். அண்ணன் தம்பிகளுக்குள் நிகழ்கிற உறவுச் சிக்கலையும் அம்மாவின் அளப்பரிய பாசத்தையும் மருத்துவரான விஜய் சேதுபதியின் உதவுகிற குணத்தையும் செதுக்கி இருப்பார் சீனு ராமசாமி.

சின்ன விஷயத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடனான திருமணம் முறிவதையும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்து, டாக்டர் விஜய் சேதுபதி இந்தச் சமூகத்துக்கு செய்கிற சேவையையும், தன் ஆசிரியர் ராஜேஷ் பெயரில் மருத்துவமனை தொடங்கியிருப் பதையும் காட்டி, குடும்ப, காதல், திருமண, சமூக உறவுக்குள் நிகழ்கிற சம்பவங்களை நம் கண்முன்னே நிறுத்தி ஜெயித்திருப்பார்.

யுவன்ஷங்கர் ராஜாவுடன்...
யுவன்ஷங்கர் ராஜாவுடன்...

இவர் படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும். இவர் படங்களை தைரியமாக குடும்பத்துடன் பார்க்கலாம். இவர் படங்களில் எல்லை மீறாத, கதையுடன் இயைந்த காமெடிகளே இருக்கும். முக்கியமாக, யுவன்ஷங்கர் ராஜா சீனு ராமசாமிக்கு எப்போதுமே ஸ்பெஷல். அவருக்கும் அப்படித்தான். ஒவ்வொரு படத்திலும் அப்படியொரு இசையை வழங்கியிருப்பார்.

விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திய சீனு ராமசாமிதான், அவருக்கு ‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதி’ எனும் பட்டத்தையும் சூட்டினார். அவர் இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ எப்போதோ எடுக்கப்பட்டு, சிலபல காரணங்களால் இன்னும் வரவில்லை. அதற்காகவெல்லாம் துவண்டுவிடவில்லை அவர்.

சமீபத்தில் கூட விஜய் சேதுபதியை வைத்துக் கொண்டு, ரியல் எஸ்டேட் மோசடியைச் சொல்லியிருப்பார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைக்கிற நடுத்தரக் குடும்பம் ரியல் எஸ்டேட் மோசடியில் சிக்கி சின்னாபின்னமாவதையும் விஜய் சேதுபதி எங்கெங்கோ போய், காசியில் தர்ம காரியப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் அங்கே பணம் ஏமாற்றிய வில்லனைப் பார்ப்பதையும் ஆனாலும் மன்னித்துவிடுவதையும் ’மாமனிதன்’ கதையில் சொல்லி நம் மனங்களைக் கனக்கச் செய்திருப்பார் சீனு ராமசாமி.

தனக்கென்று ஒரு பாணி. இலக்கணமாக, இலக்கியமாக, ஒரு நாவலைப் போல, ஒரு தென்றல் வந்து லேசாக நம் தலைமுடி வருடுமே... அதேபோல் இனிய கதைகளை எளிய மாந்தர்களின் உணர்வுகளைச் சொல்லுவதுதான் சீனு ராமசாமியின் தனித்துவமான அடையாளம்!

சீனு ராமசாமி ’காற்றால் நடந்தேன்’ எனும் கவிதைத் தொகுப்பை எழுதியிருக்கிறார். ’ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்’ எனும் புத்தகமும் அவருடைய நண்பர்கள் மத்தியிலும் திரை வட்டாரத்திலும் பேசுபொருளாகியிருக்கிறது.

’தர்மதுரை’ படப்பிடிப்பில்...
’தர்மதுரை’ படப்பிடிப்பில்...

இரண்டாவது படமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திலேயே மூன்று தேசிய விருதுகளைப் பெற்றாலும் அமைதியாக, பணிவும் கனிவுமாக, பேரன்பும் பெருங்கருணையுமே வாழ்தலுக்குத் தேவை என்பதை ஒவ்வொரு படத்தின் மூலமாக உணர்த்திக் கொண்டிருக்கும் அற்புதக் கதைசொல்லி சீனு ராமசாமி.

1975-ம் ஆண்டு, அக்டோபர் 13-ம் தேதி பிறந்த சீனு ராமசாமி, இன்னும் மனித வாழ்வியல் படங்களைக் கொடுக்கவேண்டும், விருதுகளைக் குவிக்கவேண்டும் என வாழ்த்தி கைகுலுக்குவோம்.

பிறந்தநாள் வாழ்த்துகள் சீனு ராமசாமி சார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in