திரைவடிவில் மிளிருமா ‘பொன்னியின் செல்வன்’?

திரைவடிவில் மிளிருமா ‘பொன்னியின் செல்வன்’?

தமிழ் சினிமாவின் நெடுநாள் கனவு நனவாகும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள். மணி ரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான ‘பொன்னியின் செல்வன் - பாகம் 1’ செப்டம்பர் 30-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஒரு கனவு அனுபவத்துக்காகக் காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அமரர் கல்கியின் காவியப் படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஐந்து பாகங்கள் கொண்ட நாவல் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாகத் தயாராகி வருகிறது.

மணி ரத்னத்தின் தனி வழி

படத்தின் வெளியீட்டுத் தேதியோடு படத்தின் ஐந்து முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் முதல் தோற்றமும் வெளியாகிவிட்டது. இவர்கள் முறையே ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் எனும் அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், குந்தவைபிராட்டி, நந்தினி ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் யாரும் எதிர்பாராத நேரத்தில் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் நட்சத்திர மதிப்புகொண்ட நடிகர்கள் நடிக்கும் ஐந்து முதன்மைக் கதாபாத்திரங்களின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டிருக்கிறார் மணி ரத்னம்.

திரைப்படங்களின் சந்தைப்படுத்தல் சார்ந்து மணி ரத்னம் தனக்கென்று ஒரு தனிப்பாணியிலான அணுகுமுறையை எப்போதும் கடைப்பிடித்து வந்துள்ளார். அவருடைய திரைப்படங்களைப் பொறுத்தவரை படம் தயாராகும் வரை கதை குறித்த தகவல்கள் வெளியே கசியாமல் பாதுகாக்கப்படும். திரைப்படத்துக்கான பணிகள் நிறைவடைந்து சந்தைப்படுத்தலுக்கான நேரம் வந்துவிட்டால் அவை முழுமையாகவும் தொழில்சார் நேர்த்தியுடனும் நடத்தப்படும். காத்திருப்பை அதிகரித்து எதிபார்ப்பைக் கிளப்புவதற்கான சிறுபிள்ளைத்தனமான உத்திகள் அறவே தவிர்க்கப்படும். இந்திய அளவில் இன்றளவும் நன்மதிப்பைத் தக்கவைத்திருக்கும் மணி ரத்னம் எல்லா ஊடகங்களுக்கும் பேட்டி கொடுப்பார். பாரம்பரியமான அச்சு ஊடகங்கள் தொடங்கி புதிதாகத் தொடங்கப்பட்ட இணைய இதழ்கள், யூடியூப் தளங்கள் வரை அனைத்தையும் சமமாக மதித்து உரையாடுவார்.

பெருந்தொற்றுக் காலத்தில் நிறைவடைந்த பணிகள்

இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்படும் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பை 2019-ன் இறுதியில் மணி ரத்னம் தொடங்கினார். தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் படம் வேகமாக வளர்ந்தது. மணி ரத்னம் சத்தமில்லாமல் படங்களை முடித்துவிடுவார் என திரை ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால், இவ்வளவு அதிக நடிகர்களைக் கொண்டு இவ்வளவு பிரம்மாண்டமான கதையையும் அதேபோல் முடித்துவிடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இடையில் கரோனா பெருந்தொற்று வந்து அனைவரும் மாதக் கணக்கில் வீடுகளுக்குள் அடைபட்டிருக்க வேண்டியிருந்தது.

2020 செப்டம்பரில் மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு 2021-ல் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் தடைபட்டது. ஆயினும் கடந்த செப்டம்பரில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மணி ரத்னத்தின் பிற படங்களை ஒப்பிட்டால் இது தாமதம்தான். ஆனால், இவ்வளவு பெரிய படத்தின் படப்பிடிப்பை, அதுவும் கரோனா ஊரடங்கு காலங்களுக்கிடையில் ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவு செய்திருப்பது இந்திய சினிமாவிலேயே நிகழாத அதிசயம். அபாரமான திட்டமிடலும் அதைச் சரியாகச் செயல்படுத்தும் திறமையும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என்றாலும் மிகப் பெரிய அளவில் கிராஃபிக்ஸ் பணிகளை உள்ளடக்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தயாரிப்புப் பணிகளுக்கு அதிக நேரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு சரியாக ஒரு ஆண்டுக்குப் பிறகே படம் வெளியாகிறது.

இன்றும் குறையாத எதிர்பார்ப்பு

‘கல்கி’ வார இதழில் தொடராக வெளியான காலம் முதற்கொண்டு தலைமுறை தலைமுறையாகப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்துவருகிறது ‘பொன்னியின் செல்வன்’. இன்றும் புத்தகச் சந்தைகளில் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்கப்படுகிறது. ஐந்து பாகங்களையும் கொண்ட தொகுப்பு பல்வேறு வடிவங்களில் பல்வேறு பதிப்பாளர்களாலும் புத்தக விற்பனை நிறுவனங்களாலும் வெளியிடப்படுகின்றன. இது தவிர இந்த அரிய படைப்பை ஒலி வடிவத்திலும் பலர் வெளியிட்டுள்ளனர். அவையும் இளைஞர்கள் குறிப்பாக, தமிழ் வாசிக்கத் தெரியாத அல்லது வாசிக்க விரும்பாத பிரிவினரின் ஆதரவைப் பெறுகின்றன.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தயாராகிறது என்பது இந்த நாவலைப் படிக்கும் அல்லது அதன் கதையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்திருக்கிறது. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மேல்தட்டு தமிழர்களும் (!) பொன்னியின் செல்வனைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

அச்சங்களும் எதிர்மறை விமர்சனங்களும்

அதே நேரம் இந்த எதிர்பார்ப்பே படத்தின் மீதான சவாலாகவும் சுமையாகவும் அமைந்துள்ளது. ‘கல்கியின் மொழிநடையும், வர்ணனைகளும் அளித்த உணர்வை யாராலும் திரையில் கடத்திவிட முடியாது’ என்று, நாவல் தொடராக வெளியானபோதே படித்த தலைமுறையைச் சேர்ந்த பலர் உறுதியாக நம்புகின்றனர். அடுத்தடுத்த தலைமுறையினரும் இவ்வளவும் பெரிய நாவலை அதன் சாரம் கெடாமல் திரைப்படமாக எடுத்துவிட முடியுமா என்று சந்தேகத்துடனேயே இந்தப் படம் குறித்த செய்திகளை அணுகுகின்றனர். மேலும், மணி ரத்னம் இதை இந்தி உட்பட பலமொழிகளில் வெளியாகும் படமாக உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் முதலீட்டை திருப்பி எடுக்க தேசிய சர்வதேச சந்தைக்கு ஏற்ற அம்சங்களை இணைத்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கும். ஆகவே கதாபாத்திரத் தேர்வில் இந்தி நடிகர்கள் சிலரையும் இணைத்துள்ளார். முதன்மைப் பெண் கதாபாத்திரங்களுக்கு பெரும்பாலும் பளிச் நிறம் கொண்ட நடிகைகளையே தேர்வு செய்துள்ளார். கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு தொடர்பான விமர்சனங்கள் அது குறித்த அறிவிப்புகள் வெளியானபோதே வெளிவரத் தொடங்கிவிட்டன.

இதற்கு முன் இந்தி - தமிழ் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் மணி ரத்னம் இயக்கிய ‘ராவணன்’ திரைப்படத்துக்கு நேர்ந்த கதி, ‘பொன்னியின் செல்வனுக்கும்’ நேர்ந்துவிடக் கூடாது எனும் நியாயமான அச்சம் நாவல் வாசகர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்களிடையேயும் எழுந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் முதல் தோற்றங்களிலேயே கதாபாத்திரங்களின் உடை, உருவ அமைப்பு உள்ளிட்ட விஷயங்கள் தமிழ் அரசர்களின் பாரம்பரியத்துக்குப் பொருத்தமாக இல்லை என்பது போன்ற விமர்சனங்களையும் பகடிகளையும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

தொடர்ந்து கைவிடப்பட்ட காவியம்

எப்படி இருந்தாலும் முதல் தோற்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு படம் குறித்த முன்முடிவுகளை எடுக்க வேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் மன்னராட்சியை அடிப்படையாகக் கொண்ட வரலாறு அல்லது வரலாற்றுப் புனைவுப் படங்கள் புதிதல்ல. ஆனால், அரிது. 1948-லேயே ‘சந்திரலேகா’ போன்ற மிகப் பிரம்மாண்டமான மன்னர் கால திரைப்படங்கள் தமிழில் உருவாகிவிட்டன. ஆனால், கறுப்பு-வெள்ளை, ஈஸ்ட்மென் கலர் காலகட்டத்துக்குப் பிறகு தமிழில் மன்னராட்சி காலத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்டன. அவ்வப்போது சில படங்கள் வந்தாலும் அவை எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்று விட்டன.

இவற்றுக்கிடையே ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சிகளுக்கென்றே ஒரு தனி வரலாறு உள்ளது. 1950 முதல் 1954 வரை இந்த நாவல் தொடராக வெளியானது. 1950-களின் இறுதியில் இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் எடுக்கும் முயற்சியை எம்ஜிஆர் தொடங்கினார். நாவலைப் படமாக்குவதற்கான உரிமையை விலைகொடுத்து வாங்கி, நடிகர்களையும் இறுதிசெய்தார். ஆனால், என்ன காரணத்தினாலோ அந்தப் படம் கைவிடப்பட்டது.

அதற்குப் பிறகு கமல்ஹாசனும் மணி ரத்னமும் இணைந்து இந்தப் படத்துக்கான திரைக்கதையைத் தயாரித்து அவர்களும் அந்த முயற்சியைக் கைவிட்டனர். 2010-களில் மணி ரத்னம் மீண்டும் இந்த மகத்தான முயற்சியைக் கையிலெடுத்தார். எழுத்தாளர் ஜெயமோகனுடன் இணைந்து திரைக்கதையை உருவாக்கினார். விஜய், மகேஷ் பாபு, அனுஷ்கா என நடிகர்களை இறுதிசெய்து முதல்கட்ட போட்டோஷுட்டும் நடித்தினார். ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் அந்தப் படம் கைவிடப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்குத் தேவையான சர்வதேச சந்தை மதிப்பு ரஜினி, கமல் தவிர பிற நடிகர்களின் தமிழ்ப் படங்களுக்கு உருவாகியிருக்கவில்லை என்று காரணம் கூறப்பட்டது. தமிழ்நாட்டின் பாரம்பரிய கோயில்கள், அரண்மனைகள் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி கிடைக்கவில்லை; அவற்றை செட் போட்டு எடுப்பது படத்தின் செலவை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதால் படம் கைவிடப்பட்டது என ஜெயமோகன் கூறியிருந்தார்.

பாகுபலி’ அளித்த உத்வேகம்

2015-ல் ‘பாகுபலி’யும் 2017-ல் அதன் இரண்டாம் பாகமும் வெளியானதும் அவற்றின் பிரம்மாண்ட உருவாக்கமும் அதற்கு உலக அளவில் கிடைத்த கற்பனைக்கெட்டாத வரவேற்பும் இந்திய சினிமாவுக்குப் புதிய சாளரங்களைத் திறந்துவிட்டன. மன்னராட்சி காலத்தை அடிப்படையாகக் கொண்ட பிரம்மாண்ட படங்களுக்கு உலக அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதை ‘பாகுபலி’யின் வெற்றி அடிக்கோடிட்டுக் காட்டியது. ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ போன்ற வெப் தொடர்களுக்கு இளைஞர்கள் அளித்துவரும் வரவேற்பும் இதை உறுதிபடுத்தியுள்ளது. இவற்றின் மூலம் தன்னுடைய கனவுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கனவுப் படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை மீண்டும் கையிலெடுக்கும் உத்வேகத்தையும் உறுதியையும் பெற்றார் மணி ரத்னம். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெற்றிகரமான மேடை நாடகமாக அரங்கேற்றுவதில் முக்கியப் பங்களித்த இளங்கோ குமரவேலும் இந்தப் படத்துக்கான திரைக்கதை-வசனம் எழுதும் பணியில் பங்கேற்றிருப்பது நம்பிக்கையளிக்கிறது.

70 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் மணி ரத்னம், மிகக் கடுமையான உழைப்பைக் கோரும் இந்தப் படத்தின் பெரும்பாலான பணிகளை முடித்துவிட்டதோடு அதன் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துவிட்டார். ஒருவழியாக, ஒரு முன்னோடித் திரைக்கலைஞர் மூலம் ஒரு பெரும் இலக்கியப் படைப்பைத் திரையில் காணும் கனவு நனவாகப் போகிறது. அந்தக் கனவு தமிழ் மண்ணின் சாரத்தை இழக்காத சர்வதேசப் படைப்பு மொழியைக் கொண்டிருக்கும் என நம்புவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in