மணிரத்னம் பிறந்த நாள்: ‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்டை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

மணிரத்னம் பிறந்த நாள்: ‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்டை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

இயக்குநர் மணிரத்னம் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ‘பொன்னியின் செல்வன்’ அப்டேட் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் ‘நாயகன்’ இயக்குநர் மணிரத்னம் இன்று தனது 66-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் ‘பகல் நிலவு’ திரைப்படத்தில் ஆரம்பித்து ‘மெளனராகம்’, ‘இருவர்’, ‘ரோஜா’, ‘நாயகன்’, ‘தளபதி’ என பல க்ளாஸிக் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். இதில் சமீபத்தில் ‘நாயகன்’ திரைப்படம் வெளியாகி 35-வது வருடத்தை நிறைவு செய்தது.

மதுரையில் பிறந்த மணிரத்னத்தின் தந்தை கோபாலரத்னம், சினிமாவில் விநியோகஸ்தராக இருந்தார். இப்படி குடும்பத்தில் சினிமா தொடர்பு இருந்தாலும் அவரது தந்தை, மணிரத்னம் சினிமாவுக்குள் போவதை விரும்பவில்லை. சிறுவயதில் அவர் படம் பார்த்தால் நேரம் வீண் என அவரை சினிமாவுக்கு பக்கத்தில் அனுப்பாமலேயே இருந்தார்.
ஆனால், சினிமா ஆர்வம் அதன் மீது கொண்ட காதலால் ஒரு கட்டத்தில் தான் விரும்பிய துறைக்குள்ளேயே நுழைந்தார் மணிரத்னம். ஆனால், அவர் முதன் முதலில் இயக்கிய படம் தமிழில் அல்ல, கன்னடத்தில்.

இன்று பல இளைஞர்களுக்கும் பிடித்த ஒரு இயக்குநராக இருக்கும் மணிரத்னத்திற்கு மிக பிடித்த இயக்குநர்கள் என்றால் அது பாரதிராஜா, மகேந்திரன் மற்றும் பாலச்சந்தர். மணிரத்னம் படங்களில் மழை, ரயில் தவறாமல் இடம்பெறுவது போல ‘பெண் குழந்தைகள் என்றால் பிடிக்கும்’ என்ற வசனமும் இடம் பெற்று இருக்கும்.
காதல், உறவுச்சிக்கல், தேசபக்தி என பல கதைக்களங்களில் மணிரத்னம் இயங்கி இருந்தாலும் அவரது கனவு படம் என்றால் எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்குவது தான்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆரில் ஆரம்பித்து கமல்ஹாசன் வரை பலரும் நடிக்க ஆசைப்பட்ட படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் படமாக்கி இருக்கிறார். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யாராய், த்ரிஷா உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தில் இவர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியானது. இந்த படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ல் வெளியாக இருக்கிறது.

ஆனால், இன்று மணிரத்னம் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் படத்தில் இருந்து அப்டேட் வேண்டும் குறிப்பாக டீசர் அப்டேட் வேண்டும் படக்குழுவினரை டேக் செய்து ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், படம் செப்டம்பரில் வெளியாவதால் அதற்கான புரோமோஷன் பணிகளுக்காக பெரிய தொகையை படக்குழு ஒதுக்கி உள்ளது. இதனால், டீசர் அப்டேட் இன்று வெளியாவதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறது சினிமா வட்டாரம். மேலும், படத்தின் இசை வெளியீட்டு விழா வித்தியாசமான முறையில் தஞ்சை பெரிய கோயிலில் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in