'பொன்னியின் செல்வன்’ படத்தை 2 பாகங்களாக எடுக்க பாகுபலி உதவியது: ராஜமௌலியைப் பாராட்டிய மணிரத்னம்

'பொன்னியின் செல்வன்’ படத்தை 2  பாகங்களாக எடுக்க பாகுபலி உதவியது: ராஜமௌலியைப் பாராட்டிய மணிரத்னம்

‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வழிகாட்டியதற்காக இயக்குநர் மணிரத்னம், ராஜமெளலிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ’ஜெயம்’ ரவி, ஐஷ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கக்கூடிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், படத்திற்காக இயக்குநர் மணிரத்னம் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்திற்காக இயக்குநர் ராஜமெளலிக்கு நன்றி சொல்லி உள்ளார்.

அதில் அவர், “இயக்குநர் ராஜமெளலி ‘பாகுபலி’ படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து ஒரு கதையை இப்படியும் கொடுக்கலாம் என்ற புதிய பாதையை ஏற்படுத்தி கொடுத்தார். அது பார்வையாளர்களுக்கும் கதையைப் புரிந்து கொள்ளவும் புதிய அனுபவத்தை கொடுத்தது.

அந்த உத்திதான் ‘பொன்னியின் செல்வன்’ கதையை இரண்டு பாகங்களாக எடுக்கவும் எங்களுக்கு உதவியது. இல்லையெனில் நாங்கள் ‘பொன்னியின் செல்வன்’ கதையை ஒரே பாகமாக எடுத்து படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங்கில் சிரமப்பட்டிருப்போம். அதுவும் நடக்காத ஒரு காரியம். எனவே, இதற்காக இயக்குநர் ராஜமெளலிக்கு நன்றி” என மனம் திறந்து பேசியுள்ளார் மணிரத்னம்.

’பாகுபலி’ vs ‘பொன்னியின் செல்வன்’ என இரண்டு படங்களையும் ஒப்பிட்டு இணையத்தில் ரசிகர்கள் சண்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், இயக்குநர் மணிரத்னம் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு பிறகு வெளியாகும் எனவும் மணிரத்னம் தெரிவித்து இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in