கடவுளால் அனுப்பப்பட்ட கலைஞன் விஜய்சேதுபதி!

‘மகாராஜா’ மம்தா மோகன்தாஸ் மனம் திறந்த பேட்டி
மம்தா மோகன்தாஸ்
மம்தா மோகன்தாஸ்
Updated on
4 min read

சென்னையில் பிசியாக இருந்தாலும் நடிப்பு ராட்சசி மம்தா மோகன்தாஸ் வசிப்பது, தான் பிறந்து, வளர்ந்த கேரளத்தின் கண்ணூரில். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் அவரது 50-வது படம் ‘மகாராஜா’. அப்படத்தின் ‘முதல் தோற்றம்’ வெளியீட்டு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார் அந்தப் படத்தின் நாயகியான மம்தா மோகன்தாஸ்.

அந்த மேடையில் “மம்தாவின் நடிப்புக்கு நான் மாபெரும் ரசிகன்” என்று புகழ்ந்து பேசினார் விஜய்சேதுபதி. 2005-ல் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, அடுத்து ‘சிவப்பதிகாரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தார் மம்தா. கல்லூரிப் படிப்பை பெங்களூருவில் முடித்து, விளம்பர உலகில் மாடலாகப் புகழ்பெற்று, திரையுலகில் நுழைந்தவர் மம்தா. அவரது நடிப்பை மட்டுமல்ல... கர்னாடக சங்கீதமும் இந்துஸ்தானியும் கற்றுத் தேர்ந்த அவரது குரலையும் பயன்படுத்திக்கொண்டன மலையாளம், தமிழ், தெலுங்கு திரையுலகங்கள்.

மம்தா மோகன்தாஸ்
மம்தா மோகன்தாஸ்

ஆம்! மம்தா ஒரு சிறந்த பின்னணிப் பாடகியும்தான். பன்முகத் திறன் கொண்ட மம்தாவை ‘ஹாட்ஜ்கின்’ஸ் லிம்போமா’ என்ற வகை புற்றுநோய் தோற்கடிக்க முயன்றது. ஆனால், தனது தன்னம்பிக்கையை நோயிடம் விட்டுக்கொடுத்துவிடாமல் அதிலிருந்து மீண்டு கதாநாயகியாகத் தனது கலைப் பயணத்தை 18 ஆண்டுகளாக வெற்றிகரமாகத் தொடர்கிறார். காமதேனுவுக்காக அவர் அளித்த மனம் திறந்த பேட்டியிலிருந்து...

‘மகாராஜா’வில் உங்களுடைய கதாபாத்திரம் பற்றி கூறுங்கள்?

அந்தப் படத்தில் என்னைவிட, விஜய்சேதுபதியுடன் ஒரு சிறுமி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாள். அவள் தாயை இழந்தவள். அவளுக்கு ஒரு வழிகாட்டியைப் போல், ஒரு சகோதரியைப் போல் நான் வருகிறேன். படத்தில் எனக்குப் படம் முழுவதும் காட்சிகள் இருக்கின்றன. எனது கதாபாத்திரத்துக்கு ஒரு பயணம் இருக்கிறது. இதைத்தாண்டி, படத்தில் நீங்கள் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறீர்களா என்று கேட்டால்... அதைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

விஜய்சேதுபதி ஒரு காட்சியில் வந்து நின்றாலே வித்தியாசமான உடல்மொழி எதையாவது காட்டி, வசனம் இல்லாமலே நடித்துக் கைதட்டல் வாங்கிவிடுவார். முதல் முறையாக அவருடன் இணைந்து நடிக்கிறீர்கள். தவிரவும் அந்த விழா மேடையில், அவர் தன்னை உங்களுடைய ரசிகர் என்று கூறிப் பாராட்டினார். ஒரு நடிகராக அவரை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மம்தா மோகன்தாஸ்
மம்தா மோகன்தாஸ்

உண்மையில் நானே அவரது ஃபேன். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்து நின்றிருக்கிறேன். அதன்பிறகு, ‘சீதக்காதி’. ‘மகாராஜா’ படத்தில் அவருடன் நான் இணைந்து நடித்த ஒவ்வொரு காட்சியிலும், அவர் கதாபாத்திரமாகவே மாறும் அந்தத் தருணத்தை மிக அமைதியாக ரசித்திருக்கிறேன். அவர், மௌனத்திலிருந்தே நடிக்கத் தொடங்குகிறார். கதாபாத்திரம் குறித்த ‘இன்டர்னர்ல் சைலன்ஸ்’ஐ அவர் முகத்திலும் உடல்மொழியிலும் கொண்டு வரும்போது வேறொரு மனிதராக அவரால் உடனடியாக மாறிவிட முடிகிறது.

ஷாட் முடிந்த பிறகோ, படக்குழுவில் இருக்கும் எளிய மனிதர்களுடன் அவர், சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருப்பார். அவருக்கு ‘ஷாட் ரெடி’ என்று காது கிழியக் கத்துவது அறவே பிடிக்காது. உதவி இயக்குநர் தன்னை நோக்கி வரும்போதே ‘ஷாட் ரெடி’ என்பதைப் புரிந்துகொண்டு அவர் எழும்போதே அந்தக் கதாபாத்திரமாகத்தான் எழுகிறார்.

இந்த நடிப்பு முறை, இயல்பாக வசப்பட்ட ‘மெத்தட் ஆக்டிங்’. எனக்கும் அது வசப்பட்ட முறை. அதுவே இயல்பான, யாரிடமும் கற்றுக்கொள்ள முடியாத முறை. அது வசப்பட, கதாபாத்திரத்தை ஆழ்ந்து புரிந்துகொள்வது மிக முக்கியம். இன்றைய சிறந்த நடிகருக்கு கதாபாத்திரத்தை ஆழ்ந்து புரிந்துகொள்ளவே உழைப்பு தேவைப்படுகிறது. அதை கேமராவுக்கு முன் எக்ஸ்பிரஸ் செய்ய அல்ல. இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு சிறந்த கலைஞனைக் கடவுள் இந்தப் பூமிக்கு அனுப்பி வைக்கிறார். என் தலைமுறையில் அப்படிக் கடவுளால் அனுப்பப்பட்டக் கலைஞனாக விஜய் சேதுபதியைப் பார்க்கிறேன்.

மம்தா மோகன்தாஸ்
மம்தா மோகன்தாஸ்

மலையாளத்தில் தொடர்ந்து நடிக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

சின்னப் படம், சிறந்த கதாபாத்திரம் அல்லது பெரிய படம் சிறந்த சிறிய கதாபாத்திரம் - இந்த இரண்டுவிதப் படங்களில் எதுவொன்றும் எனக்கு இதுவரைத் தமிழில் அமையவில்லை. என் திறமைக்கான கதாபாத்திரம் அமையும்போது, அந்தப் படம் வெற்றியடையும்போது நான் தமிழ் சினிமாவுக்கு இன்னும் முக்கியமான நடிகராக மாறலாம். அதை ‘மகாராஜா’ கூட சாத்தியப்படுத்தலாம்.

எனது தாய்மொழி சினிமாவில் இது எனக்கு வசப்பட்டதால்தான் என்னால் 45 படங்களை அங்கே கடக்க முடிந்திருக்கிறது. தவிரவும் மலையாளத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வெளியான படங்களில்தான் ‘பான் இண்டியா’ ரீச் இருக்கிறது. ‘பான் இண்டியா’ படங்கள் வழியாக இந்தியாவின் மற்ற மொழிகளில் நடிக்க எனக்கு விரைவிலேயே அழைப்பு வரலாம்.

தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் பாரதிராஜாவின் கைவிடப்பட்ட மகளாக நீங்கள் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அதிலிருந்து விலகக் என்ன காரணம்?

மம்தா மோகன்தாஸ்
மம்தா மோகன்தாஸ்

அந்தப் படத்தின் கதையும் கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்துப்போயின. ஏனென்றால் அப்படியொரு ‘அவதா’ரில் மலையாளத்திலும் சரி, தமிழிலும் சரி பார்வையாளர்கள் என்னைப் பார்க்கவில்லை. மிகவும் பிடித்துப்போய், அந்தக் கதாபாத்திரத்தை வாசித்து, வசனங்களை உள்வாங்கிக்கொண்டு, படப்பிடிப்புக்குத் தயாரானேன். மூன்று முறை அதற்கு மீண்டும் மீண்டும் கால்ஷீட் கொடுத்தேன். நடுவில் பாரதிராஜா சாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. தங்கர் பச்சானும் தொடர்பில் இருந்துகொண்டேதான் இருந்தார்.

இதற்கிடையில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காகக் குடும்பத்துடன் நான் வெளிநாட்டுக்கு விடுமுறையில் செல்ல தயாராகியிருந்த நேரத்தில்தான் தங்கர் பச்சான் அழைத்தார். அப்போது குடும்பத்தின் மகிழ்ச்சியே முக்கியம் என்கிற முடிவை எடுக்க வேண்டி வந்தது. அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதில் எனக்கும் வருத்தம் இருக்கிறது.

பாடகி மம்தா எப்படி இருக்கிறார்?

பாடும் வாய்ப்புகள் குறைவுதான். வாய்ப்புகள் வந்தால் ஊரில் இருந்தால் மறுக்காமல் பாடுகிறேன். சமீபத்தில் தமிழில் ‘இறைவன்’ படத்துக்காக ஒரு பாடல் பாட வரும்படி யுவன் சங்கர் ராஜா அழைத்திருந்தார். அப்போது ஐரோப்பாவில் இருந்ததால் வரமுடியவில்லை.

மனித குலத்துக்கு மாபெரும் சவாலாக நீடித்துகொண்டிருக்கிறது கேன்சர். அதிலிருந்து மீண்டு, பலருக்கு உத்வேகம் அளிக்கும் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கிறீர்கள். உங்களது கடினமான நாட்களை நினைவுகூர்வதுண்டா?

கடந்த காலத்தின் வலிகளை நினைவுகூர்வதைவிட அதிலிருந்து கிடைத்த பாடங்கள் மற்றவர்களின் மீட்சிக்குப் பயன்பட வேண்டும் என்று நினைக்கிறேன். கேன்சரிலிருந்து மீண்டு வருதல் என்பது நமது முந்தைய உடல் மற்றும் தோற்றத்துடன் மீண்டு வர முடியாது என்கிற உண்மையுடன் சம்பந்தப்பட்டது.

இந்தப் புரிதல் முதலில் வந்துவிட்டால், நோய் நம்மைக் கண்டு பயப்படும். மேலும், நோயுடன் நடத்திய ‘போர்’ குறித்து நான் வெளியே பேச நினைத்தது, அதிலிருந்து முற்றிலுமாக என்னை, என் மனதை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

மம்தா மோகன்தாஸ்
மம்தா மோகன்தாஸ்

இன்னொன்றையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்... கேன்சர் போன்ற நோயால் பாதிக்கப்படும்போது ‘லவ் அண்ட் சிம்பதி’ அதிகமாக நமக்குக் கிடைக்கிறது. இதில் ‘சிம்பதி’ அதிகமானால் அது நோயைவிட அதிகமான ஆபத்தை நம் மனதில் உருவாக்கிவிடும். எனவே, அப்படியொரு சிம்பதி எனக்கு வேண்டாம் என்பதற்காகவே சிகிச்சை எடுத்துக்கொண்ட 6 வருடங்கள் கேரளத்திலிருந்து சென்னை வந்து, இங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். திரையுலகிலிருந்தும் விலகியிருந்தேன். அந்த சமயத்தில் பெற்றோரின் அன்பு மட்டுமே எனக்குப் போதுமானதாக இருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in