
நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை மாளவிகா மோகனன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் மன்சூர் அலிகான், பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில், நடிகை த்ரிஷா குறித்து கூறிய கருத்துகளுக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகானின் பேச்சு அதிர்ச்சியளிப்பதாகவும், இந்த எந்த தருணத்திலும் அவருடன் இனி சேர்ந்து நடிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
நடிகை த்ரிஷாவின் இந்த கருத்துக்கு பல்வேறு திரைப்பட பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒன்றாக திரைப்படத்தில் பணியாற்றியவர் குறித்து மன்சூர் அலிகான் இவ்வாறு தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தருணத்தில் த்ரிஷாவுக்கு ஆதரவாக இருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
இதே போல், நடிகர் மாளவிகா மோகனனும், திரிஷாவிற்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ இது போன்ற பேச்சுகள் அருவருப்பானது. இவர் (மன்சூர் அலிகான்) பெண்களை இப்படித்தான் பார்க்கிறார், சிந்திக்கிறார் என்பது வெட்கக்கேடானது. பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் இவர் பேசுவது அதிர்ச்சியாக உள்ளது. இது கேவலமானது. நம்பிகைக்கு எதிரானது” எனப் பதிவிட்டுள்ளார்.