கார் விபத்தில் பிரபல நடிகை காயம்: மருத்துவமனையில் அனுமதி!

கார் விபத்தில் பிரபல நடிகை காயம்: மருத்துவமனையில் அனுமதி!
மலைகா அரோரா

கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரபல இந்தி நடிகை மலைகா அரோரா. மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா, மனிஷா கொய்ராலா நடித்த ’உயிரே’ படத்தில் இடம்பெற்ற ’தைய தைய தையா’ பாடலுக்கு நடனம் ஆடியவர் இவர். சல்மான் கான் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு அர்ஹான் கான் என்ற மகன் இருக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்துகொண்ட, மலைகா அரோரா, இந்தி நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் புணேயில் நடந்த பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அங்கிருந்து மும்பைக்கு புணே- மும்பை எக்ஸ்பிரஸ் சாலை வழியே காரில் திரும்பிக் கொண்டிருந்தார். கோபோலி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது அவர் வந்த கார் விபத்தில் சிக்கியது. இதில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் நவி மும்பையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மலைகா அரோரா
மலைகா அரோரா

இதுபற்றி கோபோலி போலீஸார் கூறும்போது, “மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் யாருக்கு என்ன காயம் ஏற்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை. விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி விசாரித்து வருகிறோம்” என்றனர்.

விபத்து குறித்து மலைகாவின் சகோதரி அம்ரிதாவிடம் கேட்டபோது, “மலைகா நன்றாக இருக்கிறார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இப்போது இருக்கிறார்” என்றார். மலைகா மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தெரிகிறது.

Related Stories

No stories found.