’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி : யதார்த்த நடிப்பில் அசத்தும் வெள்ளந்தி மனசுக்காரன்!

- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி : யதார்த்த நடிப்பில் அசத்தும் வெள்ளந்தி மனசுக்காரன்!

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்து முன்னுக்கு வரச்செய்தார். அதனால்தான் மக்கள் திலகம் என்று கொண்டாடப்படுகிறார். அதேபோல், ஜெய்சங்கர், புதிய புதிய தயாரிப்பாளர்களை உருவாக்கினார். போகிற போக்கில், எல்லோரிடமும் சகஜமாகப் பேசுகிற ஜெய்சங்கர், லைட்மேனைக் கூட தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தார். குறைந்த சம்பளத்தை வாங்கிக் கொண்டு, அதிக லாபங்களை அவர்களுக்கு பெற்றுத்தந்தார். அதனால்தான் ஜெய்சங்கர், மக்கள் கலைஞர் என்று கொண்டாடப்பட்டார். இன்றைய ஹைடெக் சினிமாவில், வணிக சினிமாவில், யார் கேட்டாலும் நடிக்க நேரம் ஒதுக்கிக் கொடுப்பவராக, அவர்களை கைதூக்கி விடுபவராக, சிறிய கதாபாத்திரமோ, பெரிய கதாபாத்திரமோ என்பதையெல்லாம் பார்க்காமல், ஹீரோவா வில்லனா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் புதுப்புது தயாரிப்பாளர்களுக்கும் புதுப்புது இயக்குநர்களுக்கும் இணக்கமும் பேரன்புமாக வலம் வந்துகொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அவரின் மார்க்கெட் வேல்யூவுக்காக, படமும் குறிப்பட்ட லாபத்தைக் கொடுத்துவிடுகிறது. அதனால்தான் ‘மக்கள் செல்வன்’ என்று அவரைக் கொண்டாடுகிறார்கள்!

ராஜபாளையம் பக்கம் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்து, எந்தக் கனவுகளும் இல்லாமல் மிக மிக யதார்த்தமாக வாழ்ந்த இளைஞன்தான் விஜய் சேதுபதி. ஓரளவு படித்ததும், பல இளைஞர்களைப் போலவே வெளிநாட்டுக்குச் சென்று வேலை எனும் விஷயத்துக்குள் பொருந்திப்போனார். துபாயில் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். கைநிறைய சம்பளமும் மனம் நிறைய நிம்மதியும் இருந்தாலும் ஏதோவொரு நிறைவில்லா வாழ்க்கை வாழ்வதாக உணர்ந்தார். அது என்ன என்பதைக் கண்டறியத் தெரியாமல், துபாய் வேலையை விட்டுவிட்டு, சென்னைக்கு வந்தார்.

அங்கே கணக்காளராக வேலை பார்த்தவர், இங்கே வந்து ‘கூத்துப்பட்டறை’யிலும் கணக்காளராக வேலை பார்த்தார். அங்கே யார் யாருக்கோ நடிப்பு சொல்லிக்கொடுக்கப்பட்டதையெல்லாம் கணக்கு வழக்கில்லாமல் பார்க்கும் சூழல் உருவானது. அப்போது வந்த புகைப்படக் கலைஞர் ஒருவர், ‘’உங்க முகம் போட்டோவுக்கு நல்லாருக்குங்க. நீங்களும் நடிக்கலாமே’’ எனத் தூபமிட்டார். அது கங்கு போல் உள்ளே பற்றிக்கொண்டது.

சினிமாவில் வாய்ப்புத் தேடினார். தேடிக் கொண்டே இருந்தார். ஒரு காட்சியிலும் இரண்டு காட்சியிலும் சின்ன வேடத்திலுமாக நடித்தார். ‘புதுப்பேட்டை’ மாதிரி படங்களிலும் ‘வெண்ணிலா கபடிக்குழு’ மாதிரி படங்களிலும் இப்போது பார்த்தால் விஜய் சேதுபதியை கவனித்துவிடலாம். ஆனால், அப்போது அவர் யாரென்று நமக்குத் தெரியாது. ‘தான் யார்’ என்று அவருக்கே தெரியாத நிலைதான் அப்போது!

இந்தச் சமயத்தில்தான் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தைத் தந்தார் இயக்குநர் சீனு.ராமசாமி. கதையும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கவனம் ஈர்த்தன. விஜய் சேதுபதியும் ரசிகர்களைக் கவர்ந்தார். அதேசமயத்தில் சசிகுமார் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் வில்லனாகவும் நடித்தார். கார்த்திக் சுப்பாராஜின் குறும்படங்களில் நடித்து வந்தவர், ‘பீட்ஸா’ படத்தில் நடித்தார். அந்தப் படமும் விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்த படங்களைக் கொடுத்தது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’, தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கான பக்கங்களை ஒதுக்கியது. அதில் இவர் சொன்ன ‘ப்ப்ப்ப்பா’ என்பதைச் சொல்லாதவர்களே இல்லை. ‘சூதுகவ்வும்’, ’பண்ணையாரும் பத்மினியும்’ என வெரைட்டியான படங்களில் தொடர்ந்து நடித்து, தனக்கென ரசிகர்களையும் மார்க்கெட் வேல்யூவையும் பிடித்தார்.

இயக்குநர் சீனு.ராமசாமி, ‘தர்மதுரை’ எடுத்தார். அன்பையும் உண்மையையும் கொண்டு மருத்துவம் படித்த இளைஞனின் மகத்துவத்தை, அச்சுஅசல் யதார்த்தத்துடன் வார்த்துக் கொடுத்தார் இயக்குநர். அந்தக் கதாபாத்திரத்துக்கு தன் நடிப்பால் உயிரூட்டினார். விஜய் சேதுபதியால், காமெடி பண்ணவும் முடியும், டார்க் காமெடி செய்யவும் முடியும், க்ரைம் த்ரில்லரிலும் ஜொலிக்க முடியும், நடிப்பிலும் அசத்தமுடியும் என எல்லைகளைப் பரப்பிக் கொண்டே இருந்தார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தை எடுத்த பிரேம்குமாரின் ‘96’ படமும் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்த ‘நானும் ரவுடிதான்’ படமும் விஜய் சேதுபதி என்று டைட்டிலில் பெயர் வரும்போதே கரவொலி எழுப்புகிற அளவுக்கு மிகப்பெரிய கூட்டத்தை உருவாக்கிக் கொடுத்தது.

நடுவே புதுப்புது தயாரிப்பாளர்கள். அவர்களுக்குப் பணம் பண்ணிக்கொடுத்தார். புதுப்புது இயக்குநர்கள். அவர்களுக்கும் படங்கள் நடித்துக் கொடுத்தார். ‘சேதுபதி’ மாதிரியான படங்களும் ’கருப்பன்’ மாதிரியான படங்களும் சேதுபதிக்கு தனி மார்க்கெட்டை கொடிநாட்டியது. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படங்களில் மற்ற நாயகர்கள் நடிக்கத் தயங்குவார்கள். ஆனால் விஜய் சேதுபதியை அணுகினால், அவர் தட்டாமல் ஓகே செய்வார் என்கிற பேச்சு வந்தது. நயன், ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி என நாயகியருக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களிலும் நடித்து, தன் முத்திரையைப் பதித்தார்.

அஜித் - விஜய், சிம்பு - தனுஷ், சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி என்று ரசிகர்கள் ஜோடி சேர்த்துப் போட்டிபோடத் தொடங்கினார்கள்; தூண்டினார்கள். ஆனால், எந்த வட்டசதுரங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல், ‘சீதக்காதி’ மாதிரி படம் கொடுக்கவும் ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ மாதிரியான படங்களில் நடிக்கவும் என நடிப்பின் எல்லா வாசல்களையும் திறந்து உள்நுழைந்து தனக்கென தனி ரூட் பிடித்துக்கொண்டார். ‘க/பெ. ரணசிங்கம்’ படத்தில் வாழ்ந்திருப்பார்.

பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய ‘இறைவி’யில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். ரஜினிக்கே வில்லனாக ‘பேட்ட’யிலும் விஜய்க்கு வில்லனாக ‘மாஸ்டர்’ படத்திலும் கலக்கியவர், கமலுக்கு வில்லனாக ‘விக்ரம்’ படத்தில் அதகளம் பண்ணினார்.

புஷ்கர் காயத்ரியின் இயக்கத்தில், ‘விக்ரம் வேதா’வில், மாதவன் ஒருபக்கம் கலக்கினார். விஜய் சேதுபதி இன்னொரு பக்கம் மிரட்டினார். ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் ஸ்கோர் செய்து அசத்தியெடுத்தார்.

விஜய் சேதுபதியின் யதார்த்தப் பேச்சும், இயல்பான மனிதமும் உணர்ந்துதானோ என்னவோ... நாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சீனு.ராமசாமி, ‘மக்கள் செல்வன்’ என்று பட்டம் சூட்டி பெருமைப்படுத்தினார். ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில், அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், பிரகாஷ்ராஜ் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும், விஜய் சேதுபதியின் பாடி லாங்வேஜ், அவரின் மேனரிஸம், அவரின் நடிப்புப் பாணி அனைத்தையும் கொண்டுவரும் வகையில் அட்டகாசமான கேரக்டரைக் கொடுத்தார் இயக்குநர் மணி ரத்னம். அதை அநாயசமாகச் செய்து வெளிப்படுத்தினார் விஜய் சேதுபதி.

சம்பள விஷயத்தில் கறார் காட்டமாட்டார். கொடுத்த கால்ஷீட் தேதியை சொதப்பமாட்டார். படம் வெளியாவதற்கு தயாரிப்பாளர் தரப்பில் ஏதேனும் பைனான்ஸ் பிரச்சினையென்றாலும் தானே உள்நுழைந்து, தன் பணத்தைக் கொடுத்தாவது படம் வெளிவருவதற்கு உதவுவார். சில படங்களில், நட்புக்காக சம்பளமே வாங்கிக் கொள்ளாமல் கூட நடித்துக் கொடுத்திருக்கிறார் என்றெல்லாம் சினிமா உலகில், விஜய் சேதுபதியைக் கொண்டாடுகிறார்கள்.

எந்த ஜிகினாப் பேச்சுகளும் இல்லாமல், எத்தனை பெரிய விழாவாக இருந்தாலும் மனதில் இருப்பதை பளிச்செனப் பேசி, மக்களின் மனம் கவர்வதால்தான் ‘மக்கள் செல்வன்’ என்று ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடத்தில் சீனு.ராமசாமியுடன் ஜோடி போட்ட ‘மாமனிதன்’ விஜய் சேதுபதிக்கும் அவரின் ரசிகர்களுக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் மிகப்பெரிய நற்பெயரைத் தந்திருக்கிறது. ஓடிடி தளத்தில், ‘மாமனிதன்’ படம் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது.

சினிமாவில் கேரக்டர்களை வித்தியாசம் வித்தியாசமாக நடித்துக் கலக்கிக் கொண்டிருந்தாலும், சினிமாவுக்குள் வந்துவிட்டதால் தன் கேரக்டரை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாமல், தனக்குக் கிடைக்கிற படங்களிலெல்லாம் உரிய நியாயங்களைச் சேர்த்து, தனியிடம் பிடித்திருக்கும் விஜய் சேதுபதி எனும் வெள்ளந்தி மனசுக்காரருக்கு ஜனவரி 16-ம் தேதி பிறந்தநாள்.

மக்கள் செல்வனை மனதார வாழ்த்துவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in