ராமராஜன்: ‘மக்கள் நாயகன்’ டு ‘சாமானியன்’!

பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
ராமராஜன்: ‘மக்கள் நாயகன்’ டு ‘சாமானியன்’!

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் கூட அப்படியொரு நடிகரில்லை. அதற்கு முந்தைய சூப்பர் ஹீரோக்களான பாகவதர், கிட்டப்பா முதலானோர்களின் காலத்திலும் அப்படியொரு ஹீரோ வரவில்லை. ஆனால், கமல் - ரஜினி காலத்தில், அப்படியொரு நடிகர் வந்தார். தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தார். படத்தில் ஏழு பாடல்கள் என்றால் ஏழும் இனிய பாடல்கள். பத்துப் பாடல்களென்றால் பத்தும் முத்துக்கள்தான்.

‘ராமராஜன் படம் வருதாம். நம்ம படத்தை ஒரு 15 நாள் கழிச்சி ரிலீஸ் பண்ணலாம்’ என்று யோசிக்காத நடிகர்களே இல்லை என்பார்கள். ஒரே சமயத்தில், 14 படங்களுக்குத் தேதி கொடுத்ததாகவும் அடுத்த நான்கு வருடங்களுக்கு கால்ஷீட் கொடுத்த நடிகர் என்றும் ராமராஜன் பேசப்பட்டார். எண்பதுகளில், ‘செலவு எட்டணா, வரவு பத்தணா’ என்று மினிமம் செலவில் மெகா வசூலைக் கொடுத்த சக்கரவர்த்தி என்றே அன்றைக்குப் புகழ்ந்தார்கள் ராமராஜனை!

மதுரைக்குச் செல்லும் வழியில் உள்ள மேலூரில் இருக்கிறது கணேஷ் தியேட்டர். இந்தத் தியேட்டரைக் கடந்து போகும்போதெல்லாம் பல முறை ராமராஜன் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும். போஸ்டர்களில் புன்னகைத்தபடி காணப்படுவார் ராமராஜன். ஒரு காலத்தில் இதே தியேட்டரில் எத்தனையெத்தனை போஸ்டர்களைப் பார்த்து விழிகள் விரிய அதிசயமாகப் பார்த்திருக்கிறார் அவர்!

இந்தத் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலையைச் செய்துவந்த ராமராஜன், ‘நாமளும் படத்துல நடிப்போம்; இதே தியேட்டர்ல அந்தப் படம் வரும். ரசிகர்கள் டிக்கெட் எடுத்துக்கிட்டு வரிசைல வருவாங்க’ என்றெல்லாம் நினைத்திருக்கமாட்டார். மேலூருக்குப் பக்கமுள்ள மதுரை மாநகரத்தில், ‘கரகாட்டக்காரன்’ ஒரு வருடத்தையும் கடந்து ஓடி மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று படத்தின் இயக்குநர் கங்கை அமரனும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.

டிக்கெட் கிழித்துக்கொண்டிருந்த ராமராஜனுக்கு, சினிமாவில் சேர வேண்டும், படம் இயக்க வேண்டும் என்றுதான் ஆசை. காரைக்குடி நாராயணனைப் பார்த்தார். பிறகு இயக்குநர் இராம.நாராயணனைப் பார்த்தார். அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். அவ்வளவுதான். இருபது வருடத்தில் கிடைக்க வேண்டிய அனுபவம் ஐந்தே வருடத்தில் கிடைத்தது. மாதத்துக்கு மூன்று படங்களாவது ரிலீஸ் செய்யும் இராம.நாராயணன் படங்களில் உதவி இயக்குநர் என்பது ராமராஜனுக்குப் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது. போதாக்குறைக்கு, ஓரிரண்டு காட்சிகளில் தலைகாட்டுவார்.

பின்னர் ’மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தை இயக்கினார். வெற்றியையும் பெற்றார். ‘ஹலோ யார் பேசறது’ எனும் த்ரில்லர் படத்தை ராமராஜன் இயக்கினாரென்றால் எவரேனும் நம்புவீர்களா? ’மருதாணி’ என்ற படத்தை ஷோபனாவை வைத்து இயக்கினார். இப்படியான தருணத்தில்தான், வி.அழகப்பன் தயாரித்து இயக்கிய ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் நாயகனாக நடித்தார். கவனம் ஈர்த்தார்.

இதையடுத்து, கங்கை அமரன் இயக்கத்தில், சங்கிலி முருகன் தயாரிப்பில், இளையராஜாவின் இசையில், ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் நடித்தார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படமும் ஹிட். பாடல்களும் சூப்பர் ஹிட்.

200 நாட்களைக் கடந்து ஓடியது. இதையடுத்து வரிசையாகப் படங்கள். இயக்குநர் வேலையை தள்ளிவைத்தார். ஹீரோவாக களமிறங்கினார். ’எங்க ஊரு காவல்காரன்’, ‘செண்பகமே செண்பகமே’, ‘என்னை விட்டு போகாதே’, ‘ஊரெல்லாம் உன் பாட்டு’, ‘புதுப்பாட்டு’, ‘நம்ம ஊரு நாயகன்’ என்று ஏகப்பட்ட படங்கள் வந்துகொண்டே இருந்தன.

ஒரேயொரு கிராமம். ஏழெட்டு நடிகர் நடிகைகள். மாட்டுவண்டி. பத்துப்பதினைந்து வேஷ்டி. ராமராஜன். அவருக்கு ஜோடியாக கவுதமி அல்லது ரூபினி அல்லது நிஷாந்தி அல்லது ரேகா. இளையராஜாவிடம் ஏழெட்டுப் பாடல்கள். அவ்வளவுதான். படம் நூறு நாள் கியாரண்டி. போட்ட முதலைவிட மூன்று மடங்கு லாபம். வரிசையாக படங்கள் வந்துகொண்டே இருந்தன. வெற்றியடைந்து கொண்டே இருந்தன.

கருமாரி கந்தசாமி தயாரிப்பில், இயக்குநர் கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் வெளியானது ‘கரகாட்டக்காரன்’. படத்தைக் குறைந்த விலைக்குத்தான் விற்றார்கள். ஆனால் நிறைவான லாபம் பார்த்தார்கள். டிடி ஏரியா என்று சொல்லப்படும் திருச்சி - திருத்துறைப்பூண்டி ஏரியாவை படத்தின் 85-வது நாளில் லாபம் பார்த்த பின்னர் இன்னொரு விநியோகஸ்தருக்கு விற்றார்கள். 85-வது நாளுக்குப் பிறகு இரண்டாமவர் லாபம் பார்த்ததுதான் டபுள் மடங்கு என்பார்கள். மதுரையில் ஒரு வருடம் கடந்து ஓடியது. சென்னை மாதிரியான பெருநகரங்களிலும் 200 நாட்கள் கடந்து ஓடியது.

‘மக்கள் நாயகன்’ என்று கொண்டாடப்பட்டார். பட்டமும் கொடுக்கப்பட்டது. ஒரேநாளில் யாருடைய படங்கள் வந்தாலும் ராமராஜன் படங்களுக்கு எல்லா சென்டர்களிலும் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. வசூல் மழை பொழிந்தது. ஆரம்ப காலத்திலேயே நடிகை நளினியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இரட்டைக் குழந்தைகளும் பெற்றுக்கொண்டு அவர்களுக்கும் திருமணம் செய்துவைத்து இன்றைக்கு பேரன் பேத்தியெல்லாம் இருக்கிறார்கள். இருவரும் மனமொத்துப் பிரிந்தார்கள் என்பது தனிக்கதை.

எண்பதுகளின் மத்தியில் தொடங்கிய ராமராஜன் பயணம், தமிழ் சினிமாவின் வரலாறுகளில் மிக முக்கியமானது. புதிய தயாரிப்பாளர்கள், புதிய இயக்குநர்கள், மார்க்கெட் வேல்யூ இல்லாத நடிகைகள், புதிய விநியோகஸ்தர்கள் என்று மினிமம் பட்ஜெட்டில் இளையராஜாவுக்கு அதிக சம்பளம் என்று தைரியமாகக் களமிறங்கி, வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துத் தள்ளினார் ராமராஜன்.

‘டிரவுசர்’ என்றார்கள். ‘பசுநேசன்’ என்று கிண்டலடித்தார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல், எம்ஜிஆர் ஸ்டைல் உடைகள், முழு மேக்கப், சண்டைக் காட்சிகள், சோகக் காட்சிகள், காதல் காட்சிகள் என்று அட்டகாசமாக ரவுண்டு வந்து கலக்கியெடுத்தார்.

1990-களில், கொஞ்சம் மார்க்கெட் வலுவிழந்தது. வந்த படங்களும் பெரிதாக வெற்றியைத் தரவில்லை. அதேசமயத்தில், அதிமுகவில் இணைந்தார். திருச்செந்தூர் தொகுதியில் எம்.பி.யாக நின்று வென்றார். சினிமாவைப் போலவே அரசியலிலும் மளமளவென வளர்ந்தார். பிறகு இரண்டிலுமே கொஞ்சம் கொஞ்சமாகத் தனக்கென இருந்த இடத்தை இழந்தார்.

எஸ்பிபி, மலேசியா வாசுதேவன், மனோ என எல்லாக் குரல்களும் ராமராஜனுக்கு அழகாகப் பொருந்தின. அதேசமயத்தில், அருண்மொழியின் குரலின் மென்மையும் குழைவும் ஈர்ப்பும் நன்றாகவே பொருந்தின.

எத்தனையோ பாடல்கள். லாரி டிரைவர்களையும் பஸ் டிரைவர்களையும் கேட்டால், இளையராஜாவின் இசையில் வெளியான ராமராஜன் பாடல்களைக் கத்தைக்கத்தையாக, டிவிடி டிவிடியாகச் சொல்லுவார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘சாமான்யன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ராமராஜன். ஒரு சாமான்யனாக இருந்து மிகப்பெரிய இடத்தைப் பிடித்த சாதனையாளர் ராமராஜனின் பிறந்தநாளில் (அக்டோபர் 18) வாழ்த்துவோம்.

வாழ்த்துகள் ராமராஜன் சார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in