’மகாநதி’ : நடுத்தரவர்க்கக் கனவுகளை வலியும் துயரமுமாகச் சொன்ன கமல்ஹாசன்!

’மகாநதி’ : நடுத்தரவர்க்கக் கனவுகளை வலியும் துயரமுமாகச் சொன்ன கமல்ஹாசன்!

மிடில் கிளாஸ் என்று சொல்லப்படும் நடுத்தர மனிதர்கள்தான் பெரும்பாலும் ஆசைகளும் கனவுகளும் சுமந்து அலைமோதிக்கொண்டிருப்பார்கள். ‘’இன்னும் ஒரு அழுத்து அழுத்தினால், வீடு வாங்கிவிடலாம், கார் வாங்கிவிடலாம், சொத்து சேர்த்துவிடலாம், மேல்தட்டு வாழ்க்கைக்குள் பொருந்திக்கொள்ளலாம்’ என்று ஏக்கத்துடன் முட்டிமோதி, வாழ்க்கைப் பயணத்தில், பாதை தெரியாமல் அல்லாடிக்கொண்டே இருப்பார்கள்.

மேல்தட்டுக்காரர்களுக்கு அமெரிக்கா, லண்டன் கனவுகளென்றால், நடுத்தட்டு மக்களுக்கு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை என கனவுகள் இருக்கும். ஒரு மகனையும் மகளையும் வைத்துக்கொண்டு கிராமத்தில் சிறிய அளவில் வியாபாரமும் விவசாயமும் செய்துகொண்டு வாழ்பவன், இன்னும் உயரலாமே... என்று எல்லோரையும் போல் யதார்த்தமாக ஆசைப்படுகிறான்.

ஆனால், அவனுக்கு ஆசை காட்டி, அப்படிப்பட்ட நடுத்தர வர்க்கத்தினரின் ஆசைகளைத் தூண்டி, அவர்களை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டுவிடுகின்றனர். ’ஒருவனை ஏமாற்ற வேண்டுமெனில், அவனின் ஆசையைத் தூண்டவேண்டும்’ என்று ‘சதுரங்க வேட்டை’யில் வசனம் வருமே... அப்படி ஆசையைத் தூண்டியதால் ஏமாற்றப்பட்ட தகப்பனின் கதைதான் ‘மகாநதி.’

சென்னை கூவத்தையும் ரயிலையும் தண்டவாளத்தையும் மதிலையும் அது ஜெயில் மதில் என்பதையும் காட்டி, பிறகு உள்ளே கதையின் நாயகன் கிருஷ்ணசாமி, சிறைக்கைதியாக உள்ளே நுழைவதில் இருந்துதான் கதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது திரைக்கதை.

சிறையில் கிருஷ்ணிசாமியின் அறையில் பஞ்சாபகேசன் என்பவர் இருக்கிறார். தொணதொணவெனப் பேசிக்கொண்டே இருக்கிறார். ‘’என்ன தப்பு செஞ்சே?’’ என்று கேட்கிறார். “திருட்டுக் கேஸா?’’ என்கிறார். ‘’நான் திருடன் இல்லீங்க. முட்டாள்’’ என்கிறார் நாயகன் கிருஷ்ணசாமி. அங்கே ஒரு சிறிய ஃப்ளாஷ்பேக்.

கும்பகோணம் திருநாகேஸ்வரத்தில் சீவல் ஃபேக்டரி வைத்துக்கொண்டு, மனைவியை இழந்த நிலையில் மகள், மகன், மாமியார் என வாழ்ந்து வரும் சராசரி மனிதர்தான் கிருஷ்ணசாமி. ஊருக்கு நல்லது செய்தும் தானங்கள் செய்தும் தன் பொழுதை அற்புதமாகக் கழித்துக் கொண்டிருக்கிறார். இவருடன் படித்து வெளிநாட்டில் செட்டிலாகிவிட்ட நண்பனும் அவரின் குடும்பமும் வருகிறது. அந்த பத்து நிமிடக் காட்சிக்குள், தந்தையின் ஏக்கம், மகளின் ஆங்கிலத்தை மட்டமாகப் பேசுதல், வெளிநாட்டு சாக்லெட்டுக்கு ஆசைப்படுகிற மகன் என எல்லாமே அடுத்தக்கட்டத்துக்குப் போகும் எண்ணத்தை மனதில் ஓரத்தில் விதைத்துப் போடுகிறது. இதை நமக்குச் சொல்லாமலே உணர்த்துகிறது கதையின் போக்கு.

’’குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கவேண்டும்’’ என நினைக்கிறான் தகப்பன். ஃப்ளாஷ்பேக் முடிகிறது. ‘’ஆமாம்... நீ நாத்திகனா? கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா?’’ என்று கேட்பார் பஞ்சாபகேசன். ‘’உண்டு இல்லை’’ என்பார் கிருஷ்ணசாமி. “ரெண்டுங்கேட்டான் கேஸு’’ என்பார் நக்கலாக! மீண்டும் ஃப்ளாஷ்பேக். கோயிலில் குடும்பத்துடன் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, காரில் வரும் போதுதான் சென்னையில் உள்ள தனுஷையும் மஞ்சுவையும் பார்ப்பார் கிருஷ்ணசாமி. சின்ன விபத்தாகிவிடும். வீட்டுக்கு அழைப்பார். அப்படி அழைத்ததுதான் கிருஷ்ணசாமியின் வாழ்வில் பேராபத்தாக, மிகப்பெரிய விபத்தாக, வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும்.

கிருஷ்ணசாமியை சென்னைக்கு வந்து பிசினஸ் செய்ய, சிட்பண்ட் வைக்கத் தூண்டுவார் தனுஷ். அதை ஏற்று, சென்னைக்கு வந்து முதலீடு செய்து, தனுஷுக்கு ‘பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுத்து சிட்பண்ட் கம்பெனி தொடங்குவார் கிருஷ்ணசாமி. குடும்பமும் சென்னைக்கு வந்துவிடும். ‘’பசங்களை சர்ச் பார்க்ல ஸ்கூல்ல சேர்த்துடலாம். பெரியாளா வருவாங்க. சர்ச் பார்க் ஸ்கூல் தெரியும்ல. ஜெயலலிதா படிச்ச ஸ்கூல்’’ என்று தனுஷ் சொல்ல, அந்தத் தகப்பனுக்குள் அப்படியொரு பெருமிதம். நிம்மதிப்பெருமூச்சு.

முன்னதாக, ‘’அப்பா, இதுமாதிரியே கார் வாங்கலாம்பா’’ என்று வெளிநாட்டு நண்பனின் கார் பார்த்து மகன் பரணி சொல்லுவான். தூக்கத்தில் உளறும் வழக்கம் கொண்ட மகள் காவேரியோ, ‘’அப்பா கரெக்ட் இங்கிலீஷ் பேசணும்பா. நல்ல ஸ்கூல்ல படிக்கணும்பா’’ என்று புலம்புவாள். இதற்கு மத்தியில்தான் தனுஷின் தேன் தடவிய விஷப் பேச்சில், சிக்கிக்கொள்வார் கிருஷ்ணசாமி.

குழந்தைகளின் கல்வி, பொருளாதார ஏற்றம் என்று ஆசைப்படும் அதேவேளையில் மனைவியை இழந்து நிற்கும் நமக்கு ’’இவள் நல்லதொரு வாழ்க்கைத் துணையாவாள்’’ என்று மஞ்சுவின் அன்புப் பேச்சில் மதிமயங்குவார். ஆனால் மஞ்சு, மிக மோசமானவள் என்பதைப் புரிந்து தெளிவார்.

அதேசமயத்தில் அட்வைஸர் ஒருவரைச் சந்தித்துப் பேச, தனுஷ் போல் இங்கே ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள் என்பதைப் புரியவைக்கிறார். ‘’சுதாரித்துக் கொள்ளுங்கள்’’ என்று கிருஷ்ணசாமிக்கு எச்சரிக்கை விடுக்கிறார். இதேசமயத்தில், ‘மணமகள் தேவை’ என்று மருமகனுக்கு விளம்பரம் கொடுக்கிறார் மாமியார். ஏற்கெனவே திருமணமாகி, மனைவியை இழந்து, இரண்டு குழந்தையுடன் இருக்கும் கிருஷ்ணசாமியை திருமணம் செய்துகொள்ள சம்மதித்து கடிதமும் புகைப்படமும் வருகிறது.

’’அடடா... வாழ்க்கை இனிதாக நகர்கிறது’’ என்று தெம்பாகும் தருணத்தில், மொத்தப் பணத்தையும் சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகிறார் தனுஷ். சிட்பண்டில் பணம் கட்டியவர்கள் அலுவலகத்தைச் சூழ்ந்துகொள்ள, அடியும் உதையும் கிடைத்து தூக்கிவீசப்படுகிறார் கிருஷ்ணசாமி. பண மோசடி வழக்கில் சிறைத்தண்டனை கிடைக்கிறது.

சென்னையில் வாங்கிய வீட்டையும் தனுஷ் அம்போவென விட்டுவிடுகிறார். வாடகைக்கு வந்தவன், இவர்களின் நிலையைத் தெரிந்துகொண்டு, அந்த வீட்டை வாங்கி, அவர்களைத் துரத்தி விடுகிறான். குடிசை வீட்டில் குடியிருக்கிறார்கள், கிருஷ்ணசாமியின் பிள்ளைகளும் மாமியாரும்!

பள்ளிக்குச் செல்லும் மகனையும் மகளையும் வயதான மாமியாரையும் விட்டுவிட்டு சிறைத்தண்டனை அனுபவிக்கிற வேதனை... மொத்தப் பணத்தையும் இப்படி முட்டாள்தனமாக ஏமாந்து நிற்கிறோமே என்கிற கழிவிரக்கம்... இதற்கு நடுவே சிறையுலகம்! அங்கே நடக்கும் அத்துமீறலுக்கும் ரவுடியிஸத்துக்கும் பஞ்சாபகேசன் உணவின்றி தண்டிக்கப்படுகிறார். மற்றொரு சிறைவாசியை வெளுத்துவாங்குகிறான் இன்னொரு சிறைக்கைதியான துலுக்காணம்.

கிருஷ்ணசாமியின் வாழ்வில் வீசிய புயலையும் புயலால் சிக்கிக் கொண்ட துயரத்தையும் கேட்டுக் கலங்கிப் போகிறார் பஞ்சாபகேசன். சிறையில் இருப்பவர்களைப் பார்க்க மகன், மகள், மாமியாரெல்லாம் வருகிறார்கள். அப்போது பஞ்சாபகேசன் மகள் யமுனாவும் வருகிறார். அவர்தான் ‘மணமகன் தேவை’ பார்த்துவிட்டு, கடிதமும் புகைப்படமும் அனுப்பியது எனும் விவரம் தெரியவருகிறது. குழந்தைகளை நர்ஸ் பணியிலிருக்கும் யமுனா அடிக்கடி சென்று பார்த்துக் கொள்கிறாள். கிருஷ்ணசாமிக்கு சற்றே ஆறுதல் அளிக்கிறது இந்தப் புதிய உறவு.

அப்போதுதான் துலுக்காணத்திடம் அடி உதையும் வாங்குகிறார் கிருஷ்ணசாமி. பின்னர், அவனைப் புரட்டியெடுத்து ஆவேசம் தணித்துக்கொள்கிறார். ஏதேதோ காரணம் சொல்லி, ஜெயிலரிடம் கிருஷ்ணசாமியை மாட்டிவிட, இன்னும் தண்டிக்கப்படுகிறார். அவருக்கு போலீஸ் ஒருவர் ஆறுதல் சொல்லுகிறார்.

இங்கே, மகள் பெரியமனுஷி ஆகிறாள். மாமியாருக்கு உடம்பு சரியில்லை. தனுஷிடம் சென்று பணம் கேட்கப் போகும்போது, அவன் அவமானப்படுத்த, அதில் மனமுடைந்து மாரடைப்பால் போராடுகிறார். கிருஷ்ணசாமியின் மகனான பரணியும் மகளான காவேரியும் தனுஷிடம் சென்று உதவி கேட்கிறார்கள். அவனோ... சிறுமியுடன் வன்புணர்வு செய்கிற காமப்பிசாசிடம் அனுப்பிவைக்கிறான். பரணி வளர்க்கும் நாய் ரோட்டில் ஓட, அதைப் பிடிக்கப்போனவன் அப்படியே போய்விடுகிறான்.

மாமியார் இறந்த சேதி தெரிகிறது. உடைந்து போகிறார் கிருஷ்ணசாமி. பல்லைக் கடித்துக் கொண்டு சிறைத்தண்டனைக் காலத்தைக் கழிக்கிறார். விடுதலையாகிறார். மகனைக் காணோம். மகளையும் காணவில்லை. பஞ்சாபகேசனின் வீட்டில் அடைக்கலமாகிறார். இப்போது தனுசு கோடிஸ்வரனாகவும் அரசியல் செல்வாக்கும் அதிகாரச் செல்வாக்கும் நிறைந்தவனாகவும் இருக்கிறான்.

அவனைச் சந்திக்கும் கிருஷ்ணசாமி, மகள் இருக்கும் இடத்தை அறிந்துகொள்கிறார். மகனை கழைக்கூத்தாடிக் கூட்டத்தில் கண்டுபிடிக்கிறார். மகள் கொல்கத்தாவில் உள்ள சோனாகஞ்ச் எனும் இடத்தில் இருப்பதாக தனுஷ் சொல்கிறான்.

அதன்படி அங்கே புதிய மாமனாரான பஞ்சாபகேசனோடு, கிருஷ்ணசாமி செல்கிறார். ’’சோனாகாஞ்சுக்கு மாமனாரும் மாப்பிள்ளையும் வர்றதை இப்பதான் பாக்கறேன்’’ என்கிறான் கார் டிரைவர். அப்போதுதான் தெரிகிறது அந்த இடம் விபசாரம் நடைபெறும் இடமென்று!

துக்கித்து விக்கித்து, மனம் பதைபதைக்க மகளைக் காண்கிறான். சென்னைக்கு அழைத்துவருகிறான். இவை அத்தனைக்கும் காரணமானவர்களை கிருஷ்ணசாமி எனும் சாமானியன் என்ன செய்தான் என்பதை வலிக்க வலிக்க, நம் மனம் கனக்ககனக்கச் சொல்லியிருப்பதுதான் ‘மகாநதி!’

’மகாநதி’ எனும் டைட்டில். காவிரிக்கரையில் பிறந்து, கூவம் ஓடுகிற சென்னையில் சிக்கிச் சின்னாபின்னமாகி, கங்கைக்கரையில் விபசார விடுதியில் இருக்கும் மகளை மீட்டு வந்து என நதிக்கரையினூடே நடுத்தர மனித வாழ்வின் அவலம் சொல்லியிருப்பார் கமல். கமலின் பெயர் கிருஷ்ணசாமி. கிருஷ்ணா நதி. அவரின் மனைவியாக புகைப்படத்தில் இருக்கும் ஜெயசுதாவின் பெயர் நர்மதா. மகளின் பெயர் காவேரி. பையனின் பெயர் பரணீதரன். மாமியார் பெயர் சரஸ்வதி (இந்தப் பெயரிலும் நதி இருந்ததாக புராணம் சொல்கிறது).

வில்லன் நம்பர் 2 வி.எம்.சி.ஹனீபாவின் பெயர் தனுஷ் (தனுஷ்கோடி). வில்லன் நம்பர் 1 வெங்கடாசலம் (பெயரில் நீர் இருக்கிறது). பூர்ணம் விஸ்வநாதனின் பெயர் பஞ்சாபகேசன். அவரின் மகள் சுகன்யாவின் பெயர் யமுனா. இப்படி படத்தில் பலரின் கேரக்டர் பெயர்கள் எல்லாமே நதிகள், நீர் சம்பந்தப்பட்ட பெயர்கள். அவ்வளவு ஏன்... ஒரேயொரு காட்சியில் வரும் விபசார விடுதி தலைவியின் மகள் பெயர் ஜலஜா என்று வைக்கப்பட்டிருக்கும்! .

வெளிநாட்டு சாக்லெட்டை உடனே எடுக்கும் மகனை, பார்வையால் கட்டிப் போடும் கமல், பொண்ணு பேசும் இங்கிலீஷில் மெய்மறக்கும் கமல், ‘சர்ச்பார்க்ல சேக்கலாம். ஜெயலலிதா படிச்ச ஸ்கூலும்மா’ என்று பெருமிதப்படும் கமல், ‘வசதியா வாழநினைச்சேன். அது தப்பா?’ என்று கேள்வி கேட்கும் கமல், ‘இந்த நாய்க்குட்டியை நாம எடுத்துட்டுப் போகலாம்பா. அம்மா இல்லாம நான் கஷ்டமா படுறேன். அதேபோல இதையும் நாம பத்திரமா பாத்துக்கலாம்பா’ என்று சொல்லும்போது நெக்குருகுகிவிடுகிற கமல், ஜெயிலில் உதைபடுகிற போதும் பிறகு கிளர்ந்தெழுந்து அடித்து நொறுக்குகிற போதும் கமல், சுகன்யாவைக் கண்டதும் நிம்மதி படர்வதை முகத்தில் காட்டுகிற கமல் என எத்தனை வித முகபாவங்கள்!

விபசார விடுதியில் பெண்ணைப் பார்த்ததும் கதறுகிற கமல், அவளைத் தூக்கிக்கொண்டு வரும்போது அடியும் உதையும் வாங்கி, ஒருகட்டத்தில் தப்பிக்கமுடியாமல் மகளை அணைத்தபடி இயலாமையால் உட்கார்ந்துவிடுகிற கமல், மகளை அழைத்துச் செல்ல, விபசார விடுதியின் பெண்கள் உதவும் போது பிரமிப்பும் நன்றியுமாய் பார்க்கிற கமல், அந்த விடுதித் தலைவியின் மகள் ஓடிப்போய் குங்குமம் எடுத்து வந்து மகள் காவேரியின் நெற்றியில் இட்டுவிட, கலங்கி செய்வதறியாது அந்தச் சிறுமிக்கு கைகூப்பி நன்றியைச் சொல்லுகிற கமல், விடுதியின் வேதனைகளை தூக்கத்தில் உளறும் மகளைக் கண்டு நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறித் துடிக்கிற தகப்பனாக கமல்,

‘’ஒரு நல்லவனுக்கு கிடைக்கிற மரியாதை கெட்டவனுக்குக் கிடைக்குதே ஏன்?’’, “உண்மையா இரு உண்மையா இருன்னு ஏன் அடிச்சு அடிச்சு வளர்த்தாங்க?’’, “நல்லவேளை நீ அங்கே வரலை. நல்லவேளை என் மாமியார் இப்போ உயிரோட இல்ல’’ என்று துடிக்கிக்கிற கமல், ‘’நீங்க சொன்னதுதாம்மா கரெக்ட்டு. பட்டணத்துல மரியாதையே இல்லம்மா’’ என்று அடிபட்டு அவமானப்பட்டுப் புரிந்து கொண்ட கமல்... என மகாநதியில் கமல் எடுத்திருக்கும் மகா அவதாரம், மிகப்பிரம்மாண்டமான விஸ்வரூபம்!

படம் பார்க்கிற திருமணமாகாத இளைஞன் கூட கல்யாணமாகி, குழந்தைகளைப் பெற்ற தகப்பனைப் போல் துடித்துக் கதறிவிடுவான். ஒரு தந்தையின் நிலையை, ஏமாந்து போனவனின் வலியை, தோற்றுப்போனவனின் குறுகிப் போன வேதனையை அப்படியே நமக்குள் பொளேரென அறைந்து சொல்லியிருக்கும் மகாநதி, தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படங்களில் முக்கியமானதொரு படம்! .

கமல், சுகன்யா, மகாநதி ஷோபனா, சின்னப்பையன் தினேஷ், பூர்ணம் விஸ்வநாதன், வி.எம்.சி.ஹனீபா, மோகன் நடராஜன், எஸ்.என்.லட்சுமி, ராஜேஷ், துலுக்காணம் மகாநதி சங்கர் என எல்லோருமே மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார்கள். எஸ்.என்.லட்சுமிக்கு இதுவரை கிடைக்காத கனமான வேடம். அதேபோல், பூர்ணம் விஸ்வநாதன் தன் இயல்பான நடிப்பால் பிரமாதப்படுத்தியிருப்பார். துலுக்காணம் கேரக்டரில் நடித்த சிவசங்கரின் முதல் படம். இதன் பின்னர் மகாநதி சங்கர் என்றே இன்றைக்கும் அழைக்கப்படுகிறார்.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு கும்பகோணம், சென்னை, சிறைச்சாலை, கொல்கத்தா, கங்கை நதி, கூவம் ஆறு, காவிரி என அனைத்தையும் அழகியலாகவும் அதேசமயம் துன்பச்சலனமாகவும் காட்டியிருக்கும். இதுதான் இவருக்கு முதல்படம்! அதேபோல், ஜெயிலுக்குள் நடக்கிற அட்டூழியங்களை, அப்பட்டமாகக் காட்டிய முதல் தமிழ் சினிமா ’மகாநதி’தான்!

படத்தின் கதையையும் திரைக்கதையையும் கமல்ஹாசன் எழுதியிருந்தார். கமலும் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனும் இணைந்து வசனம் எழுதியிருந்தனர். சந்தானபாரதி இயக்கினார். ‘16 வயதினிலே’ படத்தைத் தயாரித்த அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு இந்தப் படத்தைத் தயாரித்தார்.

படத்தின் மிகப்பெரிய இன்னொரு பலம் இளையராஜா. கதையின் கனத்தை மேலும் கனமாக்கி இசைவழியே மொத்த உணர்வுகளையும் கடத்தியிருந்தார் இளையராஜா. ’ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்’, ’பேய்களை நீ நம்பாதே பிஞ்சுலே வெம்பாதே’, ’தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது’, ’எங்கேயோ திக்குதிசை’, ’பிறர் வாடப் பல செயல்கள் செய்து’, ’தேடியது கிடைச்சாலே சந்தோஷப்படும் மனசு’ என்று எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார்.

மகாநதி, தமிழ் சினிமாவின் முக்கியான படங்களின் பட்டியலில், முக்கியமானதொரு இடத்தில் இப்போதும் எப்போதும் இருக்கும்.

ஆங்கிலப் புத்தாண்டு என்றால் இளையராஜா, கமல் கூட்டணியின் ’ஹேப்பி நியூ இயர்’ பாடல் போல், பொங்கல் என்றாலும் கமல், இளையராஜா கூட்டணியில் விளைந்த ‘மகாநதி’ படத்தின் ’தைப் பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டுச் சொல்லடியோ...’ பாடலும் என்றாகிவிட்டது நம் தமிழ் மக்களுக்கு!

1994-ம் ஆண்டு, ஜனவரி 14-ம் தேதி, பொங்கல் திருநாளில் வெளியானது ‘மகாநதி’. படம் வெளியாகி 28 ஆண்டுகளாகின்றன. தமிழ் சினிமாவில் கதையாலும் திரைக்கதை உத்தியாலும் யதார்த்தம் சொன்ன விதத்தாலும் தொழில்நுட்ப உத்திகளாலும் பல நவீன வர்த்தகங்களையும் உள்ளடக்கி நம மனதில் சலனத்தை ஏற்படுத்திவிட்டு, சலனமே இல்லாமல் ‘மகாநதி’யை, எப்போது பார்த்தாலும் எப்பேர்ப்பட்டவர்கள் பார்த்தாலும் எத்தனைமுறை பார்த்தாலும் மனம் கனத்துப் போகும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in